அகிலம் காக்கும் அகத்தீஸ்வரர்

முன்னுரை:

இந்தக்கட்டுரை எழுதத் தொடங்குவதற்கு முன்பு பெருங்காஞ்சி அர்ச்சகருடன் தொடர்பு கொண்டு, அவ்வூரிலுள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுயம்பு என்ற ஒரே ஒரு தகவலைத்தான் அவரால் தரமுடிந்தது.
அக்கோயிலுக்கு டி.வி.எஸ். நிறுவனத்தால் சில ஆண்டு களுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு நடைபெற்ற தேதியையாவது சொல்ல முடியுமா? என்று கேட்டேன். அதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். குடமுழுக்கு நடைபெற்ற விவரத்தை ஒரு கல்லில் பொறித்து வைத்திருப்பார் கள். அந்தக் கல்லைப் பார்த்தாவது அந்த தேதியை எனக்குச் சொல்லியிருக்கலாம். ஆனால் சொல்லவில்லை. கும்பாபிஷேகப் பத்திரிகை இருக்கின்றதா? என்று கேட்டேன். இருந்தால் அதைப் பார்த்து அந்தத் தேதியை எனக்குக் கூறும்படிக் கேட்டேன். என்னுடைய தொலைபேசி எண்ணையும் அவருக்குக் கொடுத்தேன். ஆனால் அவர் தொடர்பு கொள்ளவில்லை.
இறைவன் அருளால் எங்கோ அலைந்து திரிந்து இக்கோயிலின் விவரங்களை ஓரளவு பெறமுடிந்தது. கோயிலின் அர்ச்சருக்கே இக்கோயிலின் விவரங்கள் தெரியவில்லை யென்றால், வேறு யாரிடம் போய் நாம் கேட்பது? எல்லாம்வல்ல ஈசன் தான் அவருக்கு, தக்க வழி காட்ட வேண்டும்.
அகஸ்தியர்:- பிரம்மாவின் மகனான கச்சய பருக்கு பன்னிரண்டு மகன்கள். அவர்களில் மித்திரனும், வருணனும் இரண்டு மகன்கள். அவர்கள் இருவரும் மிக நெருக்க மாகப் பழகி ஒரே உடலுடன் இருந்தார்களாம். தேவலோகப் பெண்ணான ஊர்வசியுடன் அவர்களுக்குத் தொடர்பு ஏற்பட்டு, அதன் விளைவாக வந்த கருவை ஒரு குடத்தில் வைத்தார்களாம். சிறிது காலம் கழித்து குடத்தை உடைத்துக் கொண்டு இரு குழந்தைகள் வெளிவந்தன. அக்குழந் தைகளே வசிஷ்டரும் அகஸ்தியரும். குடத்திலி ருந்து பிறந்ததால் அவருக்குக் ‘கும்பமுனி’ என்ற பெயர் ஏற்பட்டது.
பத்து அவதாரங்களி¢ல் ஒன்றான ராமருக்கு ராவணனை வெல்லுவதற்கு ‘ஆதித்ய ஹ்ருதய ஸ்தோஸ்திரத்தை’ அகஸ்தியா¢ உபதேசம் செய்தார். வால்மீகி முனிவரால், ராமா யணத்தில் அகஸ்தியோ பகவான் ரிஷி: என்று அகஸ்தியர் புகழப்படுகிறார். ‘பகவான்’ என்று வால்மீகி குறிப்பிடுவதிலிருந்து இவர் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் என்று தெரிகிறது.
அகஸ்தியரும், அவருடைய மனைவி லோபாமுத்திரையும் சிறந்த தேவி உபாசகர்கள் ஹயக்கிரீவர், அகஸ்தியருக்கு லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார்.
காவிரியும், தாமிரபரணியும் அகஸ்தியர் உண்டாக்கிய நதிகளே. அரக்கன் வாதாபியைக் கொன்றார். தன்னுடைய இசைப் புலமையி னால் ராவணனை அடக்கினார். கடல்நீரில் ஒளிந்துகொண்ட அசுரனைக் கொல்ல கடல் நீரையே ஆசமனம் செய்து குடித்தார். கடல் நீரில் இருந்த ஜுவராசிகளும் அவருடைய வயிற்றில் புகுந்து அழிந்தன. திருத்தணி முருகன் அருளால், சிவபூஜை செய்து தனக்கு ஏற்பட்ட வயிற்றுவலியிலிருந்து நிவாரணம் பெற்றார். கடல்நீரில் இருந்த ஜுவராசிகளை அழித்த தால் அவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது.
அகஸ்தியரின் பெருமைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. அவருடைய பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அகஸ்தியர் அமைத்த ஆலயங்கள்:-

அகஸ்தியர் சிவபூஜை செய்வதற்காக பல ஆலயங்களை அமைத்தார். அந்த ஆலயங்கள் எல்லாம் ‘அகஸ்தீஸ்வரம்’ என்று அழைக்கப் பட்டன. அகஸ்தியர் சிவபூஜை செய்வதற்காக ஒரு தர்ப்பையை மந்திரித்து மேற்கே அனுப்பி னாராம். அந்த தர்ப்பை மேற்கே உள்ள ஒரு மலையிலிருந்து ஒரு நதியை உற்பத்தி செய்து கிழக்கு நோக்கி ஓடிவந்ததாம். அந்த நதியே ‘குசஸ்தலை நதி’ என்று அழைக்கப்பட்டது. இந்த நதிக் கரைகளில் 108 சிவாலயங்களை அவர் அமைத்து பூஜித்தாராம். அவருடைய முதன்மைச் சீடரான புலத்தியரும் அக்கோயில் களில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டராம்.
பொன்னேரிக்கருகில் உள்ள ‘சின்னக்கா வனம்’ அகஸ்தியா¢ வழிபட்ட 108வது கோயில் என்று கூறப்படுகிறது. பிற்காலத்தில் அகஸ்தியர் மரபு, புலஸ்தியர் மரபு என்று இரண்டு மரபுகள் தோன்றி அம்மரபைச் சேர்ந்தவர்கள் கோயில் களை ஏற்படுத்தி வழிபடத் தொடங்கினராம்.
பொதுவாக அகஸ்தியர் லிங்கம் சதுர ஆவுடையார் கொண்டும், புலஸ்திய லிங்கம் வட்ட ஆவுடையாருடனும் இருப்பது வழக்கம்.
அகஸ்திய நட்சத்திரம்:- வான மண்டலத் தில் சப்த ரிஷிகளும் நட்சத்திரமாக உள்ளனர். அகத்தியர் செய்த கடுந்தவத்தின் விளைவாக மும்மூர்த்திகள் அவருக்கு இருப்பதைந்தாயிரம் கோடி பிரமாக்களின் காலம்வரை வானவீதி யில் நட்சத்திரமாக இருக்கும்படி வரம் தந்தருளி னார்கள். இந்த நட்சத்திரம் கடல் அலை களைக்கூட கட்டுப்படுத்தும் சக்தி உண்டாம். கடல் நீர் பொங்கி பூமி அழியாமல் காக்கும் சக்திகூட இந்த நட்சத்திரத்திற்கு உண்டாம்.

ஈசனின் திருமணக்காட்சி:

கைலாசத்தில் ஈசனுக்கும், அம்பிகைக்கும் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தைக் காண எல்லோரும் அங்கே கூடினர். அதனால் வடக்கு உயர்ந்தது. தென்நாடு தாழ்ந்தது. உடனே ஈசன் அகத்தியரை தெற்கே போகும் படிக் கட்டளையிட்டார். தான் அந்தத் திருமணத்தை எப்படி பார்ப்பது என்று அகத்தியர், ஈசனிடம் கேட்டார். அகத்தியர் இருக்கும் இடத்திலேயே அவருக்கு திருமணக் காட்சியை பார்க்கும் பாக்கியம் கிடைக்கும் என்று ஈசன் அருளாசி வழங்கினார்.
வேதாரண்யம் என்று அழைக்கப்படுகிற திருமறைக் காட்டில் ஈசனின் திருமணக் காட்சியை முதன்முதலில் அகஸ்தியர் கண்டு களித்தார். அதன்பிறகு பலகோயில்களில் இந்தக் காட்சியை ஈசன் முனிவருக்குக் காட்டி யருளினார். அந்தத் திருமணக் கோலத்திற்கு ‘உமா மகேஸ்வரர்’ என்று பெயர்.
தமிழ்நாட்டில் பல ஊர்களில் அகத்தியர் வழிபட்ட லிங்கத்திற்குப் பின்னால் இந்தத் திருமணக்காட்சியை கண்டு களிக்கலாம். அத்தகைய கோயில்களில் ஒன்றே ‘பெருங் காஞ்சி’ அகத்தீஸ்வரர் கோயில்.
சப்த ரிஷிகள் வழிபட்ட ‘ஷடாரண்யம்’ (ஆற்காடு) வேலூர் மாவட்டத்தில் உள்ளது. அதில் வாலாஜாப்பேட்டைக்கருகில் உள்ள ‘வன்னிவேடு’ என்ற ஊரில் அகத்தீசுவரர் கோயில் உள்ளது. சென்னையில் திருவேற்காடு, திருமழிசை, திருவொற்றியூர், நூம்பல், அனகாபுத்தூர் ஆகிய இடங்களில் அகத்தியர் வழிபட்ட கோயில்கள் உள்ளன.

பெருங்காஞ்சி பெயர்க் காரணம்:

1971ம் ஆண்டு என்று நினைக்கிறேன். தமிழ் நாட்டில் பொதுத்தேர்தல் சட்டமன்றத்திற்கு நடைபெற்றது. அந்த வருடம், முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு நாத்திகப் பிரச்சாரம் தமிழ்நாட்டில் இருந்தது. கும்பகோணத்தில் ராமர் படத்திற்கு செருப்புமாலை போடப் பட்டது. இதைக்கண்டு ஆத்திகர்கள் மனம் புழுங்கினர்.
அந்த சமயம் காஞ்சியிலிருந்து மஹா ஸ்வாமிகள் காஞ்சியை விட்டுப் புறப்பட்டு கால்நடையாக இசையனூர், புதுப்பாடி வாலாஜாப்பேட்டை, அம்மூர், பெருங்காஞ்சி, சோளங்கிபுரம், ராமகிருஷ்ண ராஜுப் பேட்டை, அத்திமாஞ்சேரி, அம்மவார்குப்பம், பள்ளிப்பட்டு போன்ற ஊர்களில் சில நாட்கள் தங்கி ஆந்திர மாநிலத்திலுள்ள ‘கார்வேட்’ நகரை அடைந்தார்கள்.
ஒருநாளைக்கு 15 கி.மீ. தூரம் நடந்து அருகே உள்ள ஊரில் தங்குவது அவர் வழக்கம். பெருங் காஞ்சியில் சில தினங்கள் தங்கியிருந்தார்.
பெருங்காஞ்சியில் அவர் தங்கியிருந்த பொழுது அங்கு சென்று அவரைத் தரிசித் தேன். அந்த சமயத்தில் அங்கு கூடியிருந்த பக்தர்களிடம், நகரேஷு காஞ்சி என்று புகழுப்படும் காஞ்சிபுரத்திற்கே பெருங்காஞ்சி என்ற பெயர் இல்லை. ஆனால் இச்சிற்றூருக்கு பெருங்காஞ்சி என்று ஏன் பெயர் வைத்திருக் கிறார்கள் என்று மஹாபெரியவர்கள் கேட்டார் கள். ஆனால் அதற்குச் சரியான விளக்கம் அந்த அடியார்களால் தரமுடிய வில்லை. அந்த சமயத்தில் பெரியவர்களையும் அதற்கு விளக்கம் தரச்சொல்லி யாரும் கேட்கவில்லை.
சில ஆண்டுகள் கழித்து அதற்கு எனக்கு விளக்கம் பெரியவர்கள் அருளால் கிடைத்தது. ஒரு நாழிகை நேரம் இருந்தாலே அளவில்லாத புண்ணியத்தையும், பலன்களையும் வாரி வழங்கும் ‘கடிகாசலம்’ என்னும் சோளங்கிபுரம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பட்ட திவ்வியதேசம், நரசிம்மரும், ஆஞ்ச நேயரும் யோகநிலையில் வீற்றிருந்து அருள் வழங்கும் பூமி. அந்த மலையைச் சுற்றி 108 தீர்த்தக் குளங்கள் உள்ளன.
அதில் ஒன்று தான் ‘அகஸ்திய தீர்த்தம்’ என்று பெருங்காஞ்சிப் பதியில் உள்ள தீர்த்தம். சிவனின் வடிவமான பைரவர் பெயரில் கூட இம்மலைக்கருகில் ‘பைரவ தீர்த்தம்’ என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது. இதில் நீராடினால் பூதப் பிசாசுகளால் எந்தத் தொல்லையும் ஏற்பட்டது. அகத்திய தீர்த்தத்தில் செவ்வாய்க் கிழமைகளில் நீராடுவது விசேஷம் என்று கடிகாசல புராணம் கூறுகிறது.
சோளங்கிபுரத்திற்கும், பெருங்காஞ்சிக்கும் நிறைய ஆன்மீகத் தொடர்புகள் உள்ளன. சோளங்கிபுரத்தில் தொட்டாச்சாரியார் என்னும் வைணவ பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் வைகாசி மாதத்தில் காஞ்சிபுரம் சென்று காஞ்சியிலே நடைபெறும் கருடசேவையை கண்குளிர தரிசிப்பது வழக்கம்.
ஒரு வருடம் உடல் தளர்ந்த நிலையில் காஞ்சிக்கு அவரால் செல்ல இயலவில்லை. அவர் மனம் மிக வருந்தி காஞ்சி வரதரை நினைத்து உருகினார். சோளங்கிபுரம் மலை அடிவாரத்தில் உள்ள தக்கான் குளம் என்னும் பிரம்மதீர்த்தத்தில் கருடசேவையன்று புனித நீராடி, காஞ்சி கருட சேவைக் காட்சியை இழந்தேனே என்று தம்மையே வெறுத்து, காஞ்சி வரதரை நினைத்து ஐந்து ஸ்லோகங் களைக் கூறித் தம் நிலைக்கு வருந்தி நின்றார்.
அவரது பக்திச் சிறப்பினை உலகிற்கு உணர்த்த நினைத்த காஞ்சி வரதப் பெருமாள், கருட வாகனத்தில் ஏறி நேராக தொட்டாச்சாரி யார் நீராடிய குளக்கரைக்கே வந்து விடுகிறார். பக்தனுக்கு கருடசேவை காட்சியைத் தந்து விடுகிறார். இன்றும் காஞ்சிபுரத்தில் வைகாசி மாதத்தில் நடைபெறும் காஞ்சி வரதர் பிரம் மோற்சவத்தின் மூன்றாம் நாளன்று கருட சேவை நடைபெறும். இந்த விழாவின் போது அதிகாலையில் கோபுரவாயிலில் இரண்டு குடைகளின் கீழ் வரதர் காட்சி கொடுப்பார். அப்பொழுது சிலநிமிட நேரம் குடைகளால் வரதரை மறைத்து விடுவார்கள். இதுவே ‘தொட்டாச்சாரியார் சேவை’ எனப்படும்.
அந்த குடைகளால் வரதரை மறைக்கும் பொழுது வரதர் பக்தனுக்கு கருடசேவைக் காட்சி கொடுக்க தக்கான் குளக்கரைக்குச் செல்வதாக ஐதீகம்.
சோளங்கிபுரம் தக்கான் குளக்கரையில் வரதர்கோயில் உள்ளது. அங்கு தொட்டாச் சாரியார் உற்சவ மூர்த்தியும் உள்ளது. மேலும் இந்த தொட்டாச்சாரியார் கும்ப மாதம் என்னும் மாசி மாதத்தில் அவதரித்தவர். அகஸ்த்தியர் கும்பத்திலிருந்து தோன்றியவர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
காஞ்சி மஹிமை என்னும் நூலில் காஞ்சியின் மேற்கு எல்லையாக சிலாஹ்ருதம் என்ற தீர்த்தத்தைக் குறிப்பிடுகிறது. இந்த சிலா புஷ்கரணி சோளங்கிபுரத்திலுள்ள நரசிம்ம ஸ்வாமி மலைக்குப் பின்புறம் உள்ளதாக கூறப்படுகிறது. இதில்தான் ஆஞ்சநேயர் லட்சு மணனை பிழைக்க வைக்க மூலிகைகளைக் கொண்டு வந்த பொழுது அந்த மூலிகைகளை அலம்பினாராம்.
பல ஒற்றுமைகள் சோளங்கிபுரத்திற்கும், காஞ்சிக்கும் இருப்பதால் அவ்வூரில் எல்லை யிலே இருக்கும் பெருங்காஞ்சிக்கு அப்பெயர் இருப்பது மிகப்பொருத்தமே. காஞ்சி வரதர் வந்த பூமிக்கு பெருங்காஞ்சி என்ற பெயர் ஏற்பட்டத்தில் என்ன தவறு இருக்க முடியும்.

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில் – பெருங்காஞ்சி:-

இவ்வளவு புகழுக்குக் காரணமான பெருங் காஞ்சி வேலூர் மாவட்டத்திலுள்ள வாலாஜப் பேட்டையிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரிய ஏரியின் கீழே ஊர் அமைந்துள்ளது. ஏரிக்கரை மீதே நெடுஞ்சாலை செல்லுகிறது. வளைந்து செல்லும் சாலையும், சுற்றிலும் மலைகளும், நீர்நிலைகளும், கோயில்களும் எப்படிப்பட்டவர் கண்ணையும், கருத்தையும் கவரும்.
தமிழ் அறிஞர் டாக்டர் மு.வ. பிறந்த ஊரான, வேலம் என்னும் சிற்றூர் பெருங்காஞ்சிக்கருகே உள்ளது. அவர் எழுதிய ‘அகல்விளக்கு’ என்னும் புதினத்தில் பெருங்காஞ்சியைப் பற்றி டாக்டர் மு.வ. சிறப்பாக வர்ணனை செய்திருக்கிறார்.
இவ்வூரில் இக்கோயில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலுக்கு வெளியே ‘அகஸ்த்திய தீர்த்தம்’ அமைந் துள்ளது. கோயிலின் பிரதான வாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
அவ்வாயிக்குள் நுழைந்தால் நமக்கெதிரே 16 கால் மண்டபத்தைக் காணலாம். அம்மண்டபத் தில் இடப்புறம் தக்ஷிணா மூர்த்தியை தரிசிக்கி றோம். தென்முகக் கடவுளான அவரின் மோன நிலையை சிற்பி எவ்வளவு அழகாகப் படைத்துள் ளார் என்பதை நேரில் கண்டுதான் தெரிந்து கொள்ளவேண்டும். வலப்புறம் நவக்கிரஹங்கள் கொலுவீற்றிருக்கின்றார்.
அம்மண்டபத்திலிருந்து ஒருவாயிலைக் கடந்தால் நமக்கு இடப்புறம் காசி விசுவநாதரை தரிசிக்கிறோம். அவரை தரிசித்துக் கொண்டு அடுத்துள்ள வாயிலைக் கடந்து சென்றால் கருவறை வெளி மண்டபத்தை அடையலாம்.
அகத்தீஸ்வரர் கொலுவிருக்கும் கருவறை கிழக்கு நோக்கியுள்ளது. கருவறை வாயிலுக்கு இடப்புறம் வரிசையாக மூன்று கணபதியை உட்கார்ந்த நிலையில் தரிசிக்கிறோம். அடுத்து நின்றநிலையில் ஒரு விநாயகரையும் வாயிலுக்கு வலப்புறம் முருகனின் ஒரு கோலமான பிரம்ம சாத்தன் என்ற வடிவையும் தரிசிக்கிறோம். அவரையடுத்து வள்ளி தெய்வயானையுடன் கூடிய அழகிய ஆறுமுகப் பெருமானை நாம் வணங்கலாம். இக்கோயிலின் தலமரம் வில்வமரம்.
கருவறை (அகஸ்தீஸ்வரர்):-
கருவறைக்கு வெளியே காவல்புரியும் துவார பாலகர்கள் அனுமதியோடு கருவறைக்குள் புகுந்தால் அப்பன் அகத்தீசனை கண்குளிர தரிசிக்கலாம். இவர் சுயம்பு மூர்த்தி. இவக்கு இங்கு எண்ணெய் அபிஷேகம் கிடையது. இங்கு சதுர ஆவுடையார் இல்லை. வட்ட வடிவம். சிவலிங்க மூர்த்திக்குப் பின்புறம் கற்சிலை வடிவில் ஈசனையும் அம்பிகையையும் தரிசிக்கிறோம். அகஸ்திய ருக்கு திருமணக் காட்சி கொடுத்ததால் இக்கோலத்தை நாம் காணமுடிகிறது. இது ‘உமாமகேஸ்வர வடிவம்’ என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
திருமணம் கைகூடும் தலம்:-
திருமணமாகாத கன்னியர் இத்தகைய கோயில்களில் முறைப்படி வழிபட்டு இந்த ‘உமா மகேஸ்வர’ கோலத்தைத் தரிசித்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நிச்சயம். அந்தக் காலங்களில் திருமணங்களில் ‘கௌரி கல்யாணம் வைபோகமே’ என்று பாட்டுப் பாடுவார்கள். இப்பொழுதெல்லாம் வேறு ஏதோ பாடல்களைப் பாடுகிறார்கள், அல்லது வேண்டாத விஷயங்களைப் பேசுகிறார் கள், சாப்பாட்டிற்கு இலை போட்டால் இடம் பிடிக்க ஓடுகிறார்கள். இதுபோன்ற அவலநிலை.
சிவன் பார்வதிக்கு ‘ஆதிதம்பதியர்கள்’ என்று பெயர். ஆகையால் தான் கல்யாணங்களில் அந்த தம்பதியரை நினைவுபடுத்தும் வகையில் ‘கௌரி கல்யாணம்’ பாடப்படுவது வழக்கம். இக்கோயிலில் ‘பங்குனி உத்திரத்தன்று’ ஈசனுக்கும் அம்பிகைக்கும் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
ஸ்ரீ தெய்வநாயகி அம்பிகை சந்நிதி:-
ஈசனை தரிசித்து விட்டு வெளியே வந்தால் தெற்குப் பார்த்த நிலையில் அன்னையின் சந்நிதியைத் தரிசிக்கலாம். அன்னை ஸ்ரீ தெய்வ நாயகியின் அருட்காட்சி நம் குறைகளையெல் லாம் போக்கும்.
பிராகாரம்:
கோயிலின் வெளிச் சுற்றில் முதலில் கல்யாண மண்டபமும், அதையடுத்து வலம்புரி விநாயகரும், வீரபத்திரரையும் தரிசிக்கலாம். நந்தி மண்டபம், பலிபீடம், கொடிமரம் ஆகியவை கருவறைக்கு கிழக்கே உள்ள பிராகாரத்தில் அமைந்துள்ளது.

குடமுழுக்கு:

கடந்த 30.8.2004 அன்று இக்கோயிலுக்கு சீரும் சிறப்புமாக குடமுழுக்கு நடைபெற்றது. புராணப் பெருமையும் கலைச் சிறப்பும் கொண்ட இக்கோயிலின் குடமுழுக்கை தனியார் நிறுவன மான டி.வி.எஸ் நிறுவனம் பெருமையுடன் மேற்கொண்டது. அவர்களுக்கு என் நன்றியைக் காணிக்கை யாக்குகிறேன்.
முடிவுரை:
ஒரு காலத்தில் இத்திருத்தலம் சீரும் சிறப்புமாக இருந்தது. இன்று வெறிச்சோடிக் கிடக் கிறது. கோயிலைப்பற்றிய பெருமைகள் மக்களைச் சேராததே இதற்குக் காரணம். இங்குப் பல கோயில்கள் இருந்ததாகத் தெரிகிறது. காலவெள்ளத்தில் சிதைந்த கோயில்களின் தெய்வங்கள், இக்கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் வெட்டவெளியில் காணப்படுகின்றன. சப்த மாதாக்களின் வடிவங்கள் அவற்றில் முக்கியமாக குறிப்பிட வேண்டியுள்ளது. ஏரிக்கரையில் வெட்ட வெளியில் பெருமாள் சிலை காணப்படுகிறது. இது பல்லவர் கால கோயிலாகத் தெரிகிறது. இந்த பொக்கிஷத்தை அடுத்த, அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்று காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

அருகிலுள்ள மற்ற கோயில்கள்:-

ஸ்ரீ ஜராவதேஸ்வரர், அம்மூர்
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி, யோக ஆஞ்சநேயர்,
சோளங்கிபுரம்
ஸ்ரீ த்ரிகாலேஸ்வரர், ஓழுகூர்
ஸ்ரீ ஞானமலைமுருகன், கோவிந்தசேரி குப்பம்
ஸ்ரீ ஷடாரண்யம் (ஏழு முனிவர்கள் வழிபட்ட திருத்தலங்கள்)
ஆற்காடு
ஸ்ரீ பூமேஸ்வரர் (செவ்வாய் கிரஹ பரிகாரத்தலம்,
(குடிமல்லூர்)
பெருங்காஞ்சி (வழித்தடம்):-
வாலாஜாப்பேட்டையிலிருந்து சோளங்கி புரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. வாலாஜாப்பேட்டையிலிருந்து பஸ் வசதியும், ஆட்டோ வசதியும் உண்டு.
அடியேன் இயற்றிய பாடல்:-
அகிலம் போற்றும் அகஸ்தீஸ்வரா – எனக்கு
அபயமளிக்கும் ஆனந்தீஸ்வரா
ஆறங்கம் நால்வேதத்தின் நாயகனே
ஆறாத துயர் தீர்க்கும் தூயவனே      (அகிலம்)

பெருங்காஞ்சிப் பதியமர்ந்த பேரின்பமே
அருங்காட்சி அளித்தாய் குறுமுனிக்கே
வெண்ணீற்றில் அகமகிழும் ஆதியனே
நன்நீரால் நீராடும் சோதியனே        (அகிலம்)

நால்வர் திருப்பாட்டால் நலம்தந்தாய்
நாடி வருவோர்க்கு அருள்தந்தாய்
கோடி இன்பம் தந்தருளும் கைலாசா
உமாசங்கரன் வணங்கிடும் கௌரிசா   (அகிலம்)

மஹேந்திரவாடி உமாசங்கரன்

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt