எறும்புகளுக்காக தலைசாய்த்த இறைவன்

 – குகச்சிவமணி புலவர் இரா.சண்முகம்

ல்லினுள் தேரைக்கும் – கடலினுள் பாசிக்கும் படியளக்கும் பரம கருணா மூர்த்தியாகிய சிவப்பரம்பொருளின் பேரருட் பெருங்கருணையை விண்டு ரைக்க வார்த்தையேது.

விண்ணோர்கள் ஏத்தும் – நிறங்கள் ஓர் ஐந்துடைய ஐம் முகச் சிவமாம் – சதாசிவத்தின் – நுதல் வழியில் தோன்றிய அழல்பொறிகள் அறுமுகச் சிவமாகி – சரவணத்து நின்று – கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் தவழ்ந்து  உமாதேவியாரின் திருக்கர மலர்களால் ஒருங்கிணைந்து ஸ்கந்தன் – என்றாகியது. செவ்வேட் பரமனின் திருவடி நிழலில், குக சாயுச்ய நிலை அடைந்த – நம் பாம்பன் சுவாமிகள் மாத இதழின் நிறுவனர் – நமது இதயங்களில் நீங்காத நினைவுகளுடன் வாழும் தெய்வத்திரு. திருமதி. பி.எஸ்.சித்ரா – மேடம் அவர்களின் பிறந்த நாளில் (25-10-2013) மலர் வழிபாடு செய்து அவரின் ஆசி பெற்று – தொடர்ந்து அவரின் கனவை நனவாக்க – குருநாதரின் புகழ்பரப் பும் பணியில் அயராது பாடுபட்டு வரும் நமது ஆசிரியர்ஆன்மீகச் சுடர் குகஸ்ரீ. வீ. கலைச் செல்வனாரின் – பணிக்கு, பக்கபலமாக நாம் இருந்து உதவுவோம் என்று சபதம் ஏற்று அவர்களின் பணியைப் போற்றும் வண்ணம் வாசக நேயர்களுக்கு இக்கட்டுரையை சமர்ப் பிக்கின்றேன்.
திருவெறும்பூர் – அமைவிடம்
பொன்னி நதி பாய்ந்து புலமெல்லாம் வளம் மிகுந்தது திருச்சி.

கங்கையிற் புனிதமாய காவிரி ஆறு இரண்டாக பிரிந்து (கொள்ளிடம் – காவிரி) மீண்டும் இணைந்த புண்ணிய பூமி.  ‘இச்சுவை தவிர யான் போய் இந்திரர் லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே”  என்று ஆழ்வார் களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் அரங்கனும், அரங்கநாயகி தாயாரும் அருள் புரியும் ஸ்தலம் ஆகும். ஆனைக்காவில் – அண்ணலான ஜம்புகேஸ்வரர் அகிலாண்ட நாயகி – அருள்புரியும் அப்பு (நீர்) ஸ்தலம் யானைக்கு அருளியது திருவானைக் காவல் ஸ்தலம். மலைக் கோட்டை – உச்சிப் பிள்ளை யார் – தாயுமானவருக்கு அருள் புரிந்த ஸ்தலம் – சமணர்கள் வாழ்ந்த சிராப்பள்ளி என்னும் திருச்சிராப்பள்ளி மிகவும் பழமையானது.
நன்றுடையானை- தீயதில்லானை -நரை வெள்ளேறு ஒன்றுடையானை – சிராப்பள்ளிக் குன்று உடையானைக் கூற என் உள்ளம் களி கூறுமே என்பது தேவாரம்.

இத்தகைய பிரசித்தி பெற்ற – சோழநாட்டு (திருச்சி) தென்கரையில் ஏழாவது ஸ்தலமாக உள்ளது. திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சி நகரம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கே 8-வது கி.மீ.யில் -‘திருஎறும்பூர்” என்னும் திவ்ய ஸ்தலம் உள்ளது.
இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவில் வந்து வழிபட்ட ஸ்தலம்.   எறும்புகளுக்காக தலை சாய்த்த இறைவன் – முருகன், திருமகள், பிரம்மா, ரதிதேவி  அக்கினி, நைமிச முனிவர் – கட்டாங்கழி சுவாமிகள் முதலானோர் வணங்கி பேறு பெற்ற ஸ்தலம்.

அகத்திய மாமுனிவர் – முருகப் பெரு மானிடம் ஞான உபதேசம் பெற்ற ஸ்தலம்.  மூவேழு இருபத்தி  ஒரு தலை முறையில் செய்த பாவங்களையும் போக்கும் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ள ஸ்தலம்.  சோழ  பாண்டியர்கள் திருப்பணி செய்த ஸ்தலம்.  நாவுக் கரசர் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.  இன்று தொல் பொருள் துறையின ரால் பாதுகாக்கப்படும் தலம். திரு வெறும்பூர்  என்னும் திருக்கோயில் ஆகும்.

புராண வரலாறு:

தாருகாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தினால் தேவர் களையும் முனிவர்களையும் துன் புறுத்தி வந்தான். இந்திரனை தோற் கடித்து விண்ணுலகைக் கைப்பற்றி னான். தோல்வியுற்ற இந்திரன் பிரம்மனிடம் முறையிட்டான். அவர், ‘தென்கயிலாயமான மணிக்கூட புரத்துப்”  பெருமானை வழிபடுவா யாக!  அப்போது ஒரு புதல்வன் தோன்றுவான். அவனே அவ் வசுரனை அழிப்பான் அஞ்சாதே! செல் என்று வழிகூறினார்.

அதன்படி தாங்கள் வழிபாடு செய்வதை அசுரன் அறிந்து விடக்கூடாது என்று, இந்திர னும் தேவர்களும் எறும்பு வடிவம் கொண்டு இறைவனை கரு நெய்தல் மலர்களால் அர்ச்சித்து வழிபட்டனர்.
எண்ணெய்ப் பசையால் மலர்களைக் கொண்டு செல்லும் எறும்புகள் எளிதில் ஏறி வழிபடச் சிரமமாக இருந்தது.  இதனால் தன் வடிவத்தினைப் புற்று மண்ணாக மாற்றியும், சறுக்கி விழாமல் எறும்புகள் எளிதில் ஏறும் வண்ணம் திருமுடி சாய்த்தும் எறும்புகளுக்கு திருவருள் செய்தார் எறும்பீசர்.

இதே போன்று சிவசர்மன் என்ற சிறுவனுக் காக விரிஞ்சி புரத்திலும், தாடகைக்காக திருப் பனந்தாளிலும் முடி சாய்த்துக் காட்சி கொடுத்து திருவருள் புரிந்ததையும் இங்கே நோக்குவோம்.

கல்வெட்டுக்கள் :

இக்கோயிலில் சுமார் 49 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.  பரகேசரிவர்மன், ராஜகேசரிவர்மன், மூன்றாம் ராஜராஜசோழன், சுந்தரபாண்டியன் எனப் பல்வேறு அரசர்கள் திருப்பணிகள் செய்த விபரம் அறியப்படுகிறது.

மேலும் அக்கல்வெட்டுக்களில் இருந்து கிளியூர் நாட்டு சிறுதவூர் செம்பியன் வெய்தி வேளான் என்பவன் மலை மேல் உள்ள இறைவனுக்கு விமானம் எடுத்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.

தலப்பெயர்கள் :

மணிக்கூடம், இரத்தினக்கூடம் திரு வெறும்பி புரம், எறும்பீசம், பிரம்மபுரம், இலக்குமிபுரம், மதுவனம், குமாரபுரம் எனப் பல்வேறு பெயர்களால் இத்தலம் அழைக்கப்படுகிறது.  உருவத்தில் சிறிய தான எறும்புக்கும் இரங்கி வந்து அருள் புரிந்த இறைவன் கருணையை என்னென்று கூறுவது?

இறைவன் – இறைவி – திருப்பெயர்கள்

புற்று மண்ணால் ஆன சுயம்பு நாதரான இவ்விறைவனுக்கு எறும்பீசர், மதுவனேஸ்வரர் மணி கூடாசலபதி, பிபிலிகேசுவரர், திரும் பெறும்பூர் ஆள்வார், திருவெறும்பியூர் உடையார் நாயனர் என்று கூறப்படுகிறது.
நந்தி தேவரின் வலப்புறம் தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியாக அம்மன் சந்நிதி அமைந் துள்ளது.  அன்னையின் எழில் கோலம் நம்மை ஈர்க்கிறது.

நறுங்குழல் நாயகி, சுகந்த குழலாள், சௌந்தர நாயகி, மதுவன ஈஸ்வரி, இரத்னாம்பாள் என்ற திருநாமங்களில் அம்பாள் கருணை புரிந்து வருகிறார்.

இலக்கியச் சான்றுகள் :

திருநாவுக்கரசர் பாடிய திருக்குறுந்தொகை திருத்தாண்டகம் முதலியன இறைவன் புகழை கூறுகின்றன.

‘இன்பமும் பிறப்பும் இறப்பினொடு
துன்பமும் உடனே வைத்த சோதியான்
அன்பனே ! அரனே ! என்றரற்று வார்க்கு
இன்பனாகும் எறும்பியூர் ஈசனே !”
– திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை

இது தவிர திருவெறும்பியூர் புராணம் ஒன்றும் இத்தலத்து  ஈசனைப் போற்றுகின்றது.

“யானை முதலா எறும்பு ஈறாக ஊனமில் யோனியின்) என்று திருவாசகமும்.

‘நின்றழல் மெய்யன் எனழி நேர்ந்துலகு வாழ்த்துகின்ற நன் றெறும் பியூரிலிங்கு  நன் னெறியே” – எனத் திருவருட்பாவில் வடலூர்  வள்ளலாரும், “அத்தி முதல் எறும்பீறான  உயிர் அத்தனைக்கும். சித்தம் மகிழ்ந்தளிக்கும் தேசிகன்” என்று  தனிப்பாடாலாலும் இத் தலத்தைப் பெருமைப்படுத்துகின்றது.

சரித்திரச் சான்று

கி.பி. 1752ல் ஆங்கிலேயர்களுக்கும் பிரஞ்சுக் காரர்களுக்கும் நடந்த போரின் போது வீரர்கள் தங்கும் இடமாக இக்கோயில் பயன்பட்டு வந்த தாக வரலாறு கூறுகிறது.

விழாக்கள்

வைகாசியில் பிரம்மோற்சவம் ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி பிரதோஷ வழிபாடு, பௌர்ணமி கிரிவலம் என சிவாலய விழாக்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தரிசன நேரம்

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும். சிவாச்சாரியப் பெருமக்கள் சிறப்பான வழிபாடு செய்து திருவருள் பெற்றுத் தருகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத் தலத் திற்கு ஒரு முறை சென்று எறும்பீசரை வணங்கி வாழ்வில் ஏற்றம் பல பெற்று வாழ்வாங்கு வாழப்பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt