சீவகாருண்யத்தின் சிகரம்

சீவகாருண்யத்தின் சிகரம்
சுவாமிகள் ஓர் முறை திருநெல்வேலிச் சிக்க நரசையன் சிற்றூரில் நயினார்ப் பிள்ளை என்பார் இல்லத்தில் தங்கியிருந்தார். அப்பொழுது பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை போன்றோர் சுவாமிகளை சந்தித்து வணங்கி அருளாசி பெற்றனர் என்ற விவரம் வையாபுரிப் பிள்ளை நூலில் காண்க. அவ்வமயம் ஒரு பகலில் வெக்கை தாங்காது வெளிவந்த மூட்டைப் பூச்சியைச் சுவாமிகள் இலாவகமாகச் கையில் எடுத்து அங்குள்ள சிறுவன் கரத்தில் தந்து “வெளியே விட்டுவிட்டு வா” என்றார். அறியாமை கொண்ட அச்சிறுவனோ அம்மூட்டைப் பூச்சியைத் தரையில் எறிந்து காலால் தேய்த்துக் கொன்றொழித்தான். இக்காட்சியை கண்ணுற்ற சுவாமிகள் உளம் வருத்தி “அடடேவோய் கொலை செய்தனையே” என உளம் வருந்தினார். பின்னர் வீட்டில் உள்ளோர் யாவரும் சுவாமிகளை “தேவரீர் உணவுண்ண வருக” என அழைத்த பொழுது “இவ்வீட்டில் இழவு நேர்ந்து விட்டது. இன்று உண்ண மாட்டேன் நாளை கூடும்” என்று கூறிவிட்டார். சுவாமிகள் மூட்டைப் பூச்சிபால் கொண்ட பேரன்பு கண்டு யாவரும் வியப்படைந்தனர். சுவாமிகள் உள்ளூர் சிவ சுப்பிரமணிய சதகத்தில் “எவ்வுயிரும் அறிவென்றிராது அவ்வுயிர்க்கெலாம் எமனாய் இருந்த துட்டன்” என்று பாடியிருப்பதோடு அக் கொள்கையைத் தமது வாழ்விலும் கடைப்பிடித்தார்கள். 1906 ஆம் ஆண்டில் சுவாமிகள் 21வது(கட்டுரை) “ஜுவயாதனையைக் குறித்த வியாசம்”எனும் செய்யுள் உரையுடன் கூடிய நூல் சீவகாருண்ய ஒழுக்கத்தை நிலைநாட்ட வெளியிடப்பட்டது. இந்நூல் 400 படிகள் (முதற்பதிப்பு)விருத்தாசலம் தியாகராசக் கவிராயர் குமாரர் வி.கலியாணசுந்தரம் பிள்ளையவர்கள் பி.ஏ., இயற்றிய உரையுடன் திருவனந்தபுரம் த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களால் சென்னை பண்டித மித்ர அச்சுக் கூடத்தில் 1906ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இதன் விலை 12 அணாவாகும்.சுவாமிகள் இந்நூலில் புலால் உணவால் விளையும் நோய்களைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

இறைச்சி
நோய்
1.
ஆட்டிறைச்சி வாதரோகம், அலச ரோகம்
2.
மானிறைச்சி பித்தம், நயன காசம்.
3.
பன்றியிறைச்சி கடிரணம், கபரோகம்.
4.
கோழியிறைச்சி பித்தம், தேகம் மெலிதல்
5.
வான்கோழி இறைச்சி கரப்பான் சிலேத்தும ரோகம்
6.
வாத்து இறைச்சி அரிகிரந்திரணம், கோழை, உருசிகேடு
7.
கோழி முட்டை வாதபயித்தியம்
8.
புறா இறைச்சி சருமச் சொரி, பொரி, கரப்பான்
9.
இறால் மீன் வாயு
10.
கெண்டை மீன் குன்ம பேதம்
11.
குறவை மீன் அரோசிரோகம்
12.
கச்சற் கருவாடு கப பித்தம்
13.
உளுவை மீன் கரப்பான்
14.
சேற் கெண்டை மீன் குடல் வாதம்
15.
கௌ¨ற்று மீன் சிலேத்துமம்
16.
மடவை மீன் வாதரோகம்
17.
திரிகை மீன்(திருக்கைவால்) வாத சம்பந்தமான நோய்கள்
18.
கடல் நண்டு வாதகோபம், கடுவன், சருமச்சொரி
19.
வயல் நண்டு உஷ்ணம், பித்த கோபம்.
20.
நத்தை மந்தம்

இவ்வாறு சுவாமிகள் புலாலுண்பதால் விளையும் நோய்களில் பட்டியல் போட்டுக் காண்பித்து “குதர்க்கி” எனும் சீடன் மனம் மாறிப் புலால் உண்ணுதலை நீத்து சீவகாருண்ய நெறிக்குத் திரும்புவதாக இந்நூலின் முதற்பாகமாக “குருசீட சம்வாதம்” என்று அமைத்துள்ளார். நூலின் இரண்டாம் பகுதி “மூடர்வாத தும்சம்” என்பதாகும். இப்பகுதியில் சாஸ்திரமூடன், கற்றமூடன், ஆனந்தமூடன், வம்பாராய்ச்சி மூடன், கல்லா மூடன், தர்க்க மூடன், குதர்க்கமூடன், பிரமாதமூடன், இழிபலிமூடன், விதிவாதமூடன் ஆகியோரின் வாதங்களை முறியடித்து வித்யாரண்யரெனும் நாமதேயம் கொண்ட குரு சீவகாருண்ய ஒழுக்கத்தின் சிறப்பை நிலைநாட்டுவது கற்றார்க்குச் கழிபேருவகை அளிப்பதாகும்.

சுவாமிகள் இந்நூலில் காட்டும் பிரமாண நூல்களாவன:

1. சுருதி வாக்கியம்

2. நிரால்ம்போநிஷத்து

3. மண்டலப் பிராம்மணோப நிஷத்து

4. சாண்டிலியோப நிஷத்து

5. சைவ சித்தாந்த நூல்கள் (பரமேசுவரப்ரோக்தமாகிய ஆகமாந்த சாஸ்திரம்) சிவஞானசித்தியார்.

6. சிவதருமோத்ரம் (உபாகமம்)

7. தேவிகாலோத்தரம் (உபாகமம்)

8. கௌளம்,யாமளம் முதலிய ஆகம நூல்கள் (மாநுட சித்தர் நூல்கள்)

9. மநுஸ்மிருதி

10. பரசாஸ்மிருதி

11. இலிங்கபுராணம்

12. சைவபுராணம் (ஞான சங்கீதை)

13. பத்ம புராணம் (சிவகீதை)

14. கருட புராணம்

15. கந்த புராணம்

16. காஞ்சிப்புராணம்

17. திருவிளையாடற் புராணம்

18. சூத சங்கீதை

19. காசி கண்டம்

20. வியாசபாரதம் (வடமொழி)

21. பெரியபுராணத்தில் திருஞான சம்பந்தர் புராணம், கண்ணப்ப நாயனார் புராணம், சாக்கிய நாயணார் புராணம், அதிபத்த நாயனார் புராணம், சிறுத்தொண்ட நாயனார் புராணம்.

22. அரிச்சந்திர புராணம்

23. திருக்குறள் (திருவள்ளுவப்பயன்)

24. கொன்றை வேந்தன்

25. பிங்கலந்தை

26. சேந்தன் திவாகரம்

27. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்

28. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்

29. பட்டினத்தடிகள் பாடல்

30. தாயுமானவ சுவாமிகள் பாடல்

31. சித்தாந்தப் பிரகாசிகை

32. பஞ்சாதிகார விளக்கம்.

33. ஜீவக சிந்தாமணி

இவ்வாறு புராணேதிகாசாதி சாத்திர தோத்திர நூல்களோடும் திருக்குறள் கொன்றை வேந்தன் போன்ற நீதிநூல் துணை கொண்டும் சுவாமிகள் தாம் கொண்ட சீவகாருண்ய ஒழுக்கத்தை அன்றே வச்சிர தாணுவாய் நிலை நாட்டி விட்டார்கள்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt