நான் கண்ட பரம்பொருள்

– கயிலைமணி ப.சண்முகசுந்தரம்

இமயம் முதல் குமரி வரை பரந்துள்ள நமது பாரதநாட்டிற்கு ஈடு இணை இல்லை என்ற உண்மையை நமது முன்னோர்கள். ஆன் றோர்கள், அறிஞர்கள் சொல்லி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் பெரியோர்கள் சொல்லியது உண்மையென்று கேள்விப்பட் டால் போதாது அனுபவபூர்வமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் எங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது இதை நாம் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கில் கன்னியாகுமரியிலிருந்து அமர்நாத் வரை நடைபயணம் சென்று பனிலிங்கநாதரை தரிசனங் காணவேண்டும் என்ற எண்ணத்தில் பதினாறு அடியார்கள் கொண்ட குழு கன்னி யாகுமரியிலிருந்து, அமர்நாத்வரை நடை பயணத்தை மேற்கொள்வதாக முடிவு செய்து அடியேனும் ஒருவன் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

கடந்த சில ஓரிரு ஆண்டுகள் செல்வதற்கு உண்டான வழித்தடங்களை தயாரித்து ஒரு வழியாக நாள் குறிக்கப்பட்டது மொத்தம் 4861 கி.மீட்டர்கள் தூரத்தை 185 நாட்களில் கடக்கவேண்டும் என்று எங்கள் குழுவினர் முடிவு செய்தார்கள். இந்த நடைபயணத்திற்கு சிவகாசி ஊரைச்சேர்ந்த ஏ.பழனிச்சாமி என்ற அடியாரை தலைவராகவும், குருசாமியாகவும் நியமனம் செய்யப்பட்டது. எங்கள் தலைவர் காசிக்கு நடைபயணம் 264 சிவஸ்தலம் பாடல்பெற்ற தலங்களுக்கு நடைபயணமாக சென்று வந்துள்ளார்கள். அவர்களை இந்த நடைபயணத்திற்கு தலைவராக நியமித்தார்கள். இந்த 16 அடியார்களில் அடியேனும் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதிலும் சென்னை யிலிருந்து எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தது.

அடியேனும் நடைபயணமாக மூன்று தடவைகள் சென்று வந்துள்ளேன் (2000, 2008, 2010) மேலும் இரண்டு முறை திருக்கயிலாயம் சென்று வந்துள்ளேன் மற்றும் ஆண்டுதோறும் பழனி, திருத்தணி, திருப்போரூர், திருவிடைக் கழி, சிறுவாபுரி, திருப்போரூர் இப்படிப் பல முருகன் திருத்தலங்களுக்கு நடைபயணமாக சென்று வந்துள்ளேன். இதன் அடிப்படையில் என்னை அமர்நாத் நடைபயணத்திற்கு தேர்ந்தெடுத்தார்கள். அடியேனைப் பற்றி பாம்பன்சுவாமிகள் மாத இதழில் அடிக்கடி கட்டுரைகள் வெளிவந்துள்ளன. பரமனின் பதம் பணிகிறேன் என்ற தலைப்பில் கயிலா யத்தைப்பற்றி கட்டுரைகள் எழுதி இருந்தேன். இதுபோல் அமர்நாத் நடைபயணத்தையும் தொடர் கட்டுரையாக வெளியிட வேண்டும் என்று இதழ் ஆசிரியர், நடத்துனர், பேச்சாற்றல் மிக்கவர் குகஸ்ரீ வீ.கலைச்செல்வன் அவர்களை கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களும் ஆவலோடு, மலர்ந்த முகத்துடன் ஒப்புக் கொண் டார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை யும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு வழியாக நடைபயணத்திற்கு புறப்படும் தேதி குறித்து தகவல் கொடுத்தார்கள். இதன் படி 11-1-2013 அன்று வெள்ளிக்கிழமை அன்று புறப்படும் நாள் குறிக்கப்பட்டது. கன்னியா குமரியிலிருந்து நடைபயணம் தொடங்குவதால் அடியேன் 9-1-2013 மாலை 5.30 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி விரைவு வண்டிக்கு டிக்கட் பதிவு செய்திருந் தேன். அதன் 9ந்தேதி மாலை புறப்படுவ தற்குமுன் எனது உறவினர் கள், நண்பர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் தி.நகர் பிரம்மானந்த சாமி மடம்சுவாமி, தியாக ராஜன் மற்றும் யோகா லஷ்மணன் அவர்களும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்னதாக வந்திருந்து அடியேனை வழியனுப்பி வைத்தார் கள். சரியாக 5.30க்கு புறப்பட வேண்டிய ரயில் 5.35 மணிக்கு புறப்பட்டது. அடியேன் 10ந்தேதி காலை ரயில்நிலையம் சென்றடைந்தேன். அங்கு ஸ்வாமி விவேகானந்தர் விடுதியில் தங்க வைக்கப்பட்டோம்.

மொத்தம் 16 அடியார்களும் கன்னியாகுமரி வந்தடைந்தார்கள். அன்று காலை உணவு முடித்து கன்னியாகுமரி அம்மனை தரிசனம் செய்தோம். அன்று மாலை கன்னியாகுமரியில் அனைவரும் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். என்னை வழியனுப்ப மதுரை சகோதரர்கள் நல்லு, மணி இருவரும் என்னை நடைபயணம் ஆரம்பிக்கும் வரை இருந்து வழியனுப்பி வைத்துவிட்டு மதுரை சென்றார்கள். 11-1-2013 அன்று காலை 4.30 கனவில் அடியார்கள் அனைவரும் கன்னியா குமரி அம்மனை காலை விஸ்வரூப தரிசனம் பார்த்தோம். பிறகு எங்கள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனை முடித்து கோயில் வந்து பிறகு காலை 6.45 மணி அளவில் எங்கள் நடை பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் சென்னை-1, சிவ காசி-1 ஏழாயிரம் பண்ணை-1, பரமக்குடி-3, கர்நாடகா-4, காரைக்குடி-4, இரண்டுபேர் சந்நியாசம் பெற்றவர்கள் ஆக 16 அடியார்கள் கொண்ட குழு நடைப்பயணம் தொடர்ந் தோம். எங்களுடன் டாடா கண்டெயினர் வேன் ஒன்று உடன் வந்தது. சமையல் 2 பேர்கள் வந்தார்கள். மொத்தம் 19 பேர். எங்கள் வேனில் சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்கள் ஜெனரேட்டர் மற்றும் அனைத்து பொருட்கள் நடைபயணத்தில் உள்ளோர்களது உடமைகள் அனைத்தும் வேனில் வைத்துவிட்டோம்.

இந்த யாத்திரைக்கு காணிக்கையாக ஒவ் வொருவரிடமும் ரூ.20,000 வசூலிக்கப்பட்டது. மேலும் பெரியவர்களும் அன்பர்களும் நன்கொடையாக வழங்கினார்கள். நடை பயணம் மேற்கொள்ளும் அடியார்களுக்கு 2 வேட்டி, 1 துண்டு ஒரு பாய், பெட்ஷீட், டார்ச் விளக்கு, 1 பேக் சிக்னல் சட்டை போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. 6.45 மணி அளவில் முதல் நாள் புறப்பட்ட எங்கள் குழு 28 கி.மீட்டர் உள்ள அஞ்சகிராமம் கூடங்குளம் பகுதியில் உள்ள அற்புதசாமிகள் கல்யாண மண்டபத்தில் இரவு 8.00 மணி அளவில் சென்று தங்கினோம். நாங்கள் முதல் ஊராக திருச்செந்தூரை நோக்கி நடந்து சென்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதற்கு அன்று 14-1-2013 பொங்கல் தை முதல்நாள் முருகப்பெருமானை தரிசனம் செய்ய நாங்கள் அனைவரும் கோயில் குருக்கள் சர்மா என்பவர் எங்களுக்கு நல்ல உதவிகள் செய்தார். மேலும் எங்கள் குழுவில் முருகப்பெருமான் ஆயுதமாகிய வேலுக்கு தொடர்ந்து அபிஷேகம் பகல் 12 மணி அளவில் நடைபெறும்.

காலை திருச் செந்தூர் முருகனை தரிசனம் செய்து விட்டு பகல் 12 மணி அளவில் நகரத்தார் மண்டபத்தில் வேல் பூஜையும் சிறப்பாக நடைப்பெற்றது. அதுபோல் நகரத்தார் மண்டபத்திலும் அன்ன தானம் செய்தார்கள்.

(தொடரும்)

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt