பிரம்மன் பூஜித்தஸ்ரீ பிரம்ம லிங்கேஸ்வரர்

மழை வழங்குக மன்னவன் ஓங்குக
பிழையில் பல்வளம் எங்கும் பெருகுக
தழைக அஞ்செழுத்து ஓசை தரையெல்லாம்
பழைய வைதீக சைவம் பரக்கவே
-கோயிற் புராணம்
பாரெங்கும் சைவ மணம் கமழ வேண்டும்
பாம்பன் சுவாமி பக்தி நெறி பரவ வேண்டும்
சீரோங்கும் குமரன் புகழ் பேச வேண்டும்
ஜெகமெல்லாம் தீங்கின்றி உய்ய வேண்டும்
என்ற உயரிய நோக்கோடு நாளும் பணி செய்து வரும் நமது பாம்பன் சுவாமி இதழ் ஆசிரியர் குழுவினை வாழ்த்தி இம்மாதம் பிரம்மன் பூஜித்த ஸ்ரீ பிரம்ம லிங்கேஸ்வரர் தலவரலாற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
“சிவாய நம”வெனச் சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருகாலும் இல்லை என்பதை உணர்ந்த முன் னோர்கள் ஆங்காங்கே ஆலயங்கள் புதியதாக நிர்மாணித்தும், புணருத்தாரணம் செய்தும், திருப் பணிகள் செய்தும் பன்னிரு ஆண்டுக்கு ஒருமுறை திருக்கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்தும், நித்திய வழிபாடு இயற்ற இயலாத கோயில்களுக்கு நிவந்தம் வழங்கியும் நன்கொடை வழங்கியும் விளக்கெரித்தும் இருகால பூஜைகள் நடக்கவும் வழி செய்து பெரும் புண்ணியம் சேர்த்து வைத்தனர்.
இன்றைய தலைமுறையினர் அம்முன்னோர் கள் வழியில் சென்று சிறக்க வேண்டும். “ஆலயம் தொழுவது சாலவும் நன்று”-வீட்டில் தினசரி வழிபாடு செய்தாலும் ஆலயம் செல்வதும், தேர்த்திருவிழா கண்டும் சமயப்பொறையுடன் சைவம் வைணவம் இணைந்தும் திருத்தொண்டு செய்தும் மேன்மை பெற வேண்டும்.
திருவாரூரில் பிறக்க முக்தி, திருவண்ணா மலையை நினைக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசிக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, அவிநாசி யில் வசிக்க முக்தி என்று சான்றோர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் ஒரு ஆன்மா ஆயுள் முடிந்து, பூவுலகு விட்டு, விண்ணுலகு செல்லும்போது தர்மலோகத்தில் எமதர்மராஜர் முன் நிறுத்தப் பட்டு அவரவர் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப சொர்க்கலோகமோ அல்லது நரகலோகமோ அனுப்பப்படுவார்கள் அல்லது மீண்டும் இவ்வுலகிற்கே வருவார்கள் என்பது கருடபுராணம் கூறும் செய்தியாகும்.
மாணிக்கவாசகப் பெருந்தகையும் தனது சிவ புராணத்தில் புல்லாகிப் பூடாகி, பறவையாகி, பாம்பாகி, பல்விருகமாகி, கல்லாய், மனிதராய், பேயாய் கணங்களாய், வில் அசுரராய், தேவ ராய், முனிவராய், தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே நின் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன் என்று பேசுவார்.
எமதர்மர் உயிர்கள் அனைத்தையும் கவர்ந்தா லும் அவரவர் விதிப்படி பாவ புண்ணிய செயல் களுக்கேற்ப நீதி வழங்குவார். யாரையும் தண்டிக்கமாட்டார். மிகவும் கருணை காட்டு வார். நீர் எவ்வித புண்ணிய செயல்களைச் செய்யாது போனாலும் பரவாயில்லை. கொடிய பாவியாக இருப்பினும் அவ்வுயிரை நோக்கி, பசித்தவருக்கு ஒரு பிடி அன்னம் அளித்தாயா? பசுவுக்கு ஒரு நாள் ஒரு வேளை ஒரு பிடி புல் கொடுத்துள்ளாயா? அல்லது புண்ணிய நதியில் ஒருநாளாவது நீராடியுள் ளாயா? பித்ருக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை செய்துள்ளாயா? என்று வரிசையாகக் கேட்பாராம். எப்படி யாவது இவரை நல் உலகத்துத்திற்கு அனுப்ப விரும்பி கேட்பாராம்.
எல்லாக் கேள்விகளுக்கும் இல்லை என்ற பதில் சொல்லும் ஜீவனிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்பாராம்.
திருவெள்ளறை திருக்கோயிலின் ராஜகோபுரத்தை அல்லது “கொக்கரை யான்” திருக்கோயில் கோபுரத்தை யாவது கண்ணால் பார்த்திருக் கிறாயா? என்று கேட்பாராம்.
இந்தச் சிறு புண்ணியத்தையாவது அந்த ஜீவன் செய்திருந்தால் அவரை புண்ணிய லோகத்துக்கு அனுப்புவாராம்.
அவற்றை நான் பார்த்த தில்லை என்றால் தான் நரக லோகத்திற்கு அனுப்புவாராம்.
இத்தகைய மகத்தான் தெய்வீக சக்தி பொருந்திய திருக்கோயில்தான் (1) திருச்சியை அடுத்துள்ள திருவெள்ளறை மகாவிஷ்ணுவின் கோயில். இங்கு ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபித்த சுசதர்ஸணம் உள்ளது. தட்சிணாயணம், உத்தராயணம் என்று இரு அயனங்களிலும் சென்று தனித்தனியாக வழிபட கதவுகள் உள்ளன. (2) திருச்செங்கோடு தலத்தை அடுத்துள்ள கொக்கராயன்பேட்டை திருக்கோயில் ஆகும். இது சிவாலயம் ஆகும்.
பிரம்மன் பூஜித்த திருத்தலம்
உமையொருபாகனாக அம்மையப்பனாக அரத்தநாரீஸ்வராக அருள்பாலிக்கும் திருத்தலம் திருச்செங்கோடு. கொங்கு ஏழு சிவத்தலங்களுள் ஒன்று. கொடிமாடச் செங்குன்றூர் என்று பேசப்படும் தலம். அருணகிரியாரும் தேவாரம் பாடிய சைவக்குரவர் மூவரும் வந்து வணங்கிய பாடல்பெற்ற திருத்தலம்.
இத்தலத்தில் இருந்து 16 கி.மீ. மேற்கேயும் ஈரோடு நகரின் எல்லையில்-சேலம், ஈரோடு மாவட்டங்களைப் பிரிக்கும் எல்லையாக ஓடும் காவேரி நதியின் கீழ்த்திசைக் கரையில் ஈரோடில் இருந்து 20 கி.மீ தூரத்தில் (ஈரோடு tஷீ சோழசிராமணி வழித்தடம்) நகரின் நடு நாயகமாக கொக்கராயன்பேட்டை சிவன் கோயில் அமைந்துள்ளது.
பிரம்மதேவர் ஒருமுறை படைப்புத் தொழிலை செய்யும் யாமே பெரியவர் என்று ஆணவம் கொண்டு சிவனை வணங்காது இருந்தார். ஆணவம் தலைகேறியது. சிவ அபராதம் நேரிட்டது. அப்பாவம் செயலால் மறதியில் வீழ்ந்தான் பிரம்மன். உறக்கத்தில் ஆழ்ந்தான். உறக்கம் நீங்கி எழுந்தான். எப்போதும் போல படைப்புத் தொழில் செய்ய முனைந்தார். தொழில் கைகூடவில்லை. செய்வது அறியாது திகைத்தார்.
ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்ற நான்கு வேதங்களைக் கொண்டு நான்முகப் பிரம்மா, படைப்புத் தொழில் இயற்ற இயலாமல் வருந்தி சிவப்பரம்பொருளை நோக்கி தியானித்தார். அப்போது தேவரிஷி நாரதர் அவர் முன் தோன்றி – நீங்கள் செய்த சிவ அபவாதம் மிகவும் கொடியது. எல்லாம் வல்ல பரம்பொருள் சிவபெருமான் மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமாய் நிற்கும் மூர்த்தி பசுபியாகி ஆன்மாக்களிடம் மலத்தேய்வை ஏற்படுத்த பிறவிகள் தோறும் பிறப்பெடுக்க செய்கிறார். ஆணவம் மாயம், கன்ம மலங்களை விடுத்து பசுவாகிய உயிர் பதியாகி இறைவனோடு சேர பூவுலகில் பல்வேறு இடங்களில் ஆலயம் அமைத்து பக்திநெறி செலுத்தி உய்ய வழி செய்துள்ளார்.
நீவிர் செய்த கொடுஞ்செயலுக்கு – ஈரோடு காவிரியின் கரையில் மாமரங்கள் அடர்ந்த (கொக்கு = மாமரம்) கொக்கு அரையன் பேட்டை வனத்தில் தவம் இயற்றினால் சிவபெருமான் காட்சி தருவார். நும் பாவம் தீரும் என்று நாரத மகரிஷி கூறக்கேட்டு பூவுலகு வந்து தவத்தில் ஆழ்ந்தார்.
காவிரிக்கரையில் பிரம்ம லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து பிரம்ம லிங்கேஸ்வரர் என்று பெயரிட்டு பல ஆண்டுகள் தவமிருந்தார். தவத்திற்கு மனம் இரங்கி சிவபெருமான் அங்கு தோன்றி பிரம்மதேவரின் சிவ அபராதத்தை நீக்கினார். பிரம்மதேவரின் வேண்டுதல்படி இவ்விடத்திற்கு வந்து வழிபாடுசெய்யும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கொடுத்து வளமான வாழ்வு பெற ஸ்ரீ பிரம்ம தேவர் பூஜித்ததால் ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக் கோயில் பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாகத் திகழும் இத்திருக்கோயிலின் வரலாறு மிகவும் பவித்ரமானது.
இப்பெருமானை பூஜிக்கும் மிகக் கொடிய பாவத்தைச் செய்துள்ள பேருக்கும்கூட தன் கோபுர தரிசனத்தினாலேயே முக்தியைப் பெற்றுதரும் அற்புத்த திருக்கோயில் என்று குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஜோதிடச் சக்கரவர்த்தி பிரம்ம ஸ்ரீ ஏ.எம்.ராஜகோபாலன் அவர்கள் தமது 25-11-2011 தேதியிட்ட குமுதம் ஜோதிட இதழில் தெரிவித்துள்ளார். அவருக்கு ஆலயத்தின் சார்பிலும் பக்தர்களின் சார்பிலும் நன்றி தெரிவிக்கின்றோம்.
பெயர்க்காரணம்
ஏழிசையாய், இசைப்பயனாய் என்னுடைய தோழனுமாய் என்று ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறுவதுபோல, சாமகாணப் பிரியரான சிவபெருமான் வீணை இசைக்கு மயங்குவார். வீணைக்கொடியுடைய வேந்தன் இலங்கேஸ்வரன் இராவணன் ஒரு சமயம் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயன்று அதன் அடியில் சிக்கி மிகவும் துயருற்றான். அதிலிருந்து மீள, தன் தலையை அறுத்து நரம்புகளை வெட்டி, தந்தியாக்கி சாமகாணம் பாடி மீண்டும் வரம்பெற்று எழுந்தான். சிவ பக்தன் ஆன ராவணன் கயிலையை அசைத்த கொடிய பாவத்தையும் மன்னித்தார் சிவன்.
அக்காலத்தில் கோயில்களில் பல்வேறு விதமான இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு பாடல்கள்பாடி இறைவனை ஆராதித்தனர். அக்காலத்தில் வழக்கத்தில் இசைக்கருவிகளில் கொக்கரை என்னும் வீணையும் இடம்பெற்று இருந்தது. தினசரி இறைவனின் பூஜையின் போது இக் “கொக்கரை” வீணைவாத்யம் இசைக்கப்பட்டு வந்தது. இது சிவபெருமா னுக்கு மிகவும் விருப்பமான இசை ஒலியாகும். இது ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் கோயிலில் தினமும் வாசிக்கப்பட்டு மிகவும் பிரசித்தி பெற்றதால் பக்தர்கள் இறைவனை “கொக்கரை யான்” என்று போற்றி வணங்கினார். ஆதலால் இத்திருத்தலம் “கொக்கரையான் பேட்டை” என்று வழங்கப்பட்டது. தற்போது மருவி கொக்கராயன் பேட்டை என்று வழங்கப்படு கிறது.
திருக்கோயில் சிறப்பு:
அற்புதமான இயற்கைச் சுழலில் அமைந் துள்ள இத்திருக்கோயிலின் கருவறையில் பீடத்துடன் 7 (ஏழு) அடி உயரம் கொண்ட விஸ்வரூபப் பெருமானாகக் காட்சி அளிக் கிறார். ஸ்ரீ பிரம்ம லிங்கேஸ்வரனாக இருவர் கைகளைக் கோர்த்துப் பிடித்தால்தான் பிடிக்க முடியும் என்ற அளவிற்கு பெரிய திருமேனியன் இப்பெருமான்.
இத்தகைய விஸ்வரூப சிவலிங்கம் மிகவும் அரிதான ஒன்று. சிவலிங்கத்திற்கு பின்னால் விநாயகரின் உருவம் உள்ளது. இவரை ஓசை விநாயகர் என்கிறார்கள். இவ்விநாயகரைத் தட்டினால் மிகவும் ஆச்சரியமான இசை யொலி கேட்கிறது. இது மிகவும் பேரானந்த அனுபவம் ஆகும்.
அம்பிகை:
அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ சௌந்தராம் பிகை. பேரழகு வாய்ந்தவர். இவர் திருநோக்கில் அடியாரும் வானவரும் பெருங்கருணை பெற்றுய்கின்றனர்.
கருவறையை விட்டு வெளியே வரும்போது கருவறை அமைப்பில் ஒரு விசேஷம் காண லாம். கருவறையின் முன் வாசல் தவிர மற்ற மூன்று பக்கங்களிலும் கல்லினாலே கதவுகள் உள்ளன. செதுக்கப்பட்டுள்ள கல்கோழி கூவும்போதுதான் இம்மூன்று கதவுகளும் திறக்குமாம். அவ்விதம் இக்”கல்கோழி’ கூவி கதவு திறக்கும்போது கலியுகம் முடிந்து உலகம் அழிந்துவிடும் என்று இத்திருக்கோயில் உள்ளவர்கள் இதுவிபரம் பற்றிக் கூறினார்கள்.
இங்குள்ள தலவிருட்சம் வில்வம். இந்த இரண்டு வில்வ மரங்களில் ஒன்றில் ஓர் இதழும் மற்றதில் மூன்று இதழ்களும் உள்ளன. இவ்விரண்டும் ஒரே சந்நிதியில் உள்ளது அதிசயமாகக் கருதப்படுகிறது.
பைரவர் சந்நிதி:
இங்குள்ள பைரவர் விசேஷ அம்சம் கொண்டவராக உள்ளார். பொதுவாக நான்கு கரங்களுடனும், நாய் வாகனத்துடனும் காட்சி தருவார். ஆனால் இங்குள்ள பைரவர் எட்டுத்திருக்கரங்கள் உடையவராகவும், நாய்வாகனம் இன்றியும் முப்புரிநூலாக நாகத்தையும் அணிந்து தரிசனம் தருகிறார். இத்தகைய வடிவத்தை வடுகு பைரவர் என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது. அஷ்ட பைரவர்களில் இவர் சத்ரு சம்ஹார பைரவராக இருக்கிறார். இதனால் சத்ரு (பகைவர்) உள்ளவர் இங்கு வந்து தேய்பிறை அஷ்டமி காலங்களில் தேங்காய் மூடியில் அல்லது சாம்பல் பூசணியில் விளக்கு ஏற்றினால் சத்ரு அடங்குவர். கடன் தொல்லை நீங்கும். இவர் சனிபகவானுக்கு குருவாக இருப்பதால் இவரை வணங்குவோருக்கு ஏழரை, அஷ்டமச்சனி மற்றும் சனி தோஷத்தால் உண்டாகும் துன்பம் விலகும். நாகதோஷம் உள்ளவர்களும் இவரை வணங்கி தோஷம் நீங்கி நன்மை அடைந்துள்ளனர்.
சைவ-வைணவ ஒற்றுமை இங்குள்ளது. இதே ஆலயத்தில் சுவாமி, அம்பாள், முருகன், விநாயகர், நவநாயகர்கள் தனியாக சனீஸ்வரர் சந்நிதிகளுடன் சிவாலய கோஷ்டகத்தில் பிரம்மாவுக்கும் உருவம் உள்ளது. ஸ்ரீ வேணுகோபலர் சுவாமி ருக்மணி சத்யபாமா சமேதராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இரண்டு கரங்கள் புல்லாங்குழல் ஊத, மற்ற இரண்டில் சங்கு சக்ரதாரியாக காட்சி தருவது விசேஷம். எதிரில் அஞ்சனை மைந்தன் சிறிய திருவடி ஸ்ரீ ஆஞ்சநேசர் கூப்பிய கரங்களுடன் சேவை விதிக்கிறார். ஸ்ரீவேணுகோபலரின் வலது திருவடியை பசு ஒன்று தனது நாவினால் நக்குவது போன்று இருப்பது வேதங்களே பசு உருவில் வந்து பரந்தாமனை சேவிப்பது போல உள்ளது.
கல்வெட்டுக்கள்:
சிவலாயத்தின் முன்புற சுற்றுச்சுவரில் காணப்படும் கல்வெட்டுக்களில் இருந்து அறியும் செய்திகள் முதலாம் ஆதித்த சோழன் காவிரிக் கரையில் அமைத்த ஐந்து சிவாலயங்களில் இதுவும் ஒன்று எனவும், சோழர் கால கட்டடக் கலைக்கு சான்றாக சிற்பங்களின் நேர்த்தி அதிசயிக்கத்தக்கது.
கி.பி.1070 முதல் 1120 வரை சோழ வள நாட்டை ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனால் புணர் நிர்மாணம் செய்யப்பட் டுள்ள செய்தியை கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது.
முன்பொரு சமயம் இவ்வாலய அர்ச்சகர் திருமஞ்சனத் தீர்த்தம் காவிரியில் இருந்து கொண்டு வரும்போது விஷமுள் தைத்ததாம்.  வலி பொறுக்காமல் நைந்த அர்ச்சகர் மூலவரிடம் திருமஞ்சனக்குடத்தை இறக்கி வைத்துவிட்டு விஷமுள்ளை பிடுங்கி சந்நி தானத்தில் வைத்து இறைவனிடம் முறையிட அம்முள்மரம் ஒரு வாரத்தில் பட்டுப்போன தாம்.
இதனால் பக்தர்களுக்கு நேரும் துன்பத்தை பிரம்ம லிங்கேசனிடம் முறையிட்டால் உடனே தீர்வு கிடைக்கிறது.
இவ்வாலயம் சிதிலமடைந்திருந்த காலத்தில் ஊராரும், உள்ளூர் அன்பர்களும் ஒன்றுகூடி திருப்பணி செய்து பொலிவுடன் அமைத்தனர். தற்போது ராஜகோபுரத் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு சுணக்கமாக இருக்கிறது. விரைவில் நடைபெற அன்பர்களும் அதிகாரி களும் முயற்சி செய்து திருப்பணி நிறைவேற ஆவன செய்ய வேண்டுகிறோம். ஆலயத்தின் அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கண் கண்ட தெய்வமாக கலியுகத்தில் மக்க ளுக்கு ஸ்ரீ மாரியம்மன் அருள்புரிந்து வருகிறார்.
இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் தர்ம கர்த்தா ஸ்ரீமான் கே.எஸ்.ரங்கசாமி அவர்கள் தலைமையில் சில ஆண்டு களுக்கு முன் நடைபெற்று பொலி வுடன் விளங்குகிறது. இதேபோல் சிவாலய ராஜகோபுரம் திருப்பணி முடிக்க அவர் மனது வைத்து அன்பர் களைத் திரட்டி பணி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ பாலசுப்ர மண்யக் குருக்கள் ஆலய வரலாற்றைக் கூறி எங்களுக்கு வழிபாடு செய்து கொடுத்தார். என்னுடன் வந்து ஆலயத் திற்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்து கொடுத்த தர்மகர்த்தா ஸ்ரீமான் கே.எஸ்.ரங்கசாமிக் கவுண்டருக்கும், எனக்கு இவ்வாலய வரலாற்றை கூறி உடன் அழைத்துச் சென்று உதவிய தமிழாசிரியர் திரு.கலைச்செல்வன் அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.
ஊரின் நடுவே இவ்வளவு பிரம்மாண்ட மான உள்ள ஸ்ரீ பிரம்ம லிங்கேஸ் வரரை வணங்கி ஆலயத்திருப்பணிக்கு உதவியும் சிவநேசச் செல்வர்கள் வாழ் வாழ்த்தி நிறைவு செய்கின்றோம்.

குகச்சிவமணி புலவர் இரா. சண்முகம்

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt