மான் மகளும், யானை மகளும்

– சாந்தா வரதராஜன்

“தேவியர் இருவர் மேவிய குகனை திங்களை அணிந்த சங்கரன் மகனை பாவலர் யாவரும் பாடிய வேந்தனை பொன்மயில் ஏறிடும் ஷண்முக நாதனை” என்று நாம் பாடும் பாடலில் குறிப்பிட் டுள்ள ‘தேவியர் இருவர்’.

மான் மகள், யானை மகள் இரு தேவியரை இங்கு காண்போம்.

“தினைவன மானும், கனவனமானும் செறிவுடன் மேவும் திருமார்பா” (திருத்தணி) தனிமயிலேறும் திருத்தணிப் பெருமானின் திருப்புகழில், மான் மகளும், தெய்வயானை மகளும் சேர்ந்த திருக்கோலத்தைக் காணலாம்.

தெய்வ திருமணங்களில் பல வகைகள் உள்ளன. “யான் இரு மாதரை சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்”, இராமன் சீதைக்கு வழங்கியது. இந்த ஏக பத்தினி விரதம் ஒருவகை நெறி அடுத்த கிருஷ்ணாவதாரத்தில், ராதை, ருக்மணியோடும் மற்றுள்ள கோபிகைக ளோடும் ராசலீலை ஆடி ஜீவான்மாக்கள், பிரேம பக்திமூலம் பரமாத்மாவை அடையும் தத்துவத்தை காட்டியது ஒருவகை.

சித்தி புத்தி யுடன் விநாயகரும், வள்ளி தெய்வானையுடன் முருகனும், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாராயண னும், ராதா, ருக்மணியுடன் கண்ணனும் காட்சி தரும் கோலம் கண்ணுக்கு இனியதாகும்!

இதை ஊனக்கண்ணால் உணரமுடியாது. உணர்வுக் கண்கொண்டு காணவேண்டும், இச்சா சக்தியாகிய வள்ளியும், கிரியா சக்தியாகிய தேவயானையும், ஞானசக்தியாகிய முருகனை அடைந்து அருள்பெற்ற வகையே அற்புதம் நிறைந்ததாகும். கருணை பொங்கும் கயிலாயத்தில் பாலமுருகனின் லீலைகளைக் கேட்டுப் பரவசமுற்ற திருமால் மகளிர் அமிர்த வல்லி, சுந்தரவல்லி இருவரும் குமரனைக் கணவனாய்ப் பெற விழைந்து தவமியற்றினர். அமிர்தவல்லி இந்திரன் மகளாய் வந்து, வெள்ளையானை ஐராவதம் வளர்க்க, தேவயானையை (யானை மகள்) தேவர் சிறை மீட்ட தன் பரிசாகத்தர திருப்பரங்குன்றத்தில் குமரன் ஏற்றார்.

சுந்தரவல்லி, பார்வதியின் தோழியான காஞ்சனை என்னும் தெய்வ கன்னிமானாக வர, அவளுக்கு மகளாக வள்ளியும் வந்து குறவர் குலக்கொடியாய் வளர்ந்து, குமரனை ‘காந்தர்வ மணம்’ கொள்கிறார். தேவசேனாபதியான முருகப் பெருமானைப் போற்றி, அருணகிரிநாதர், “குஞ்சர வஞ்சியும், மான் மடந்தையும் இன்ப மிகுந்திடவே அணைந்தருள் (ஏரகம்) “தெய்வயானையங் குறமின் மணவாளா” ( பழநி) என்று வள்ளி, தெய்வானையைச் சேர்த்துப் பாடும்போது, முதலில் தெய்வானையையும், பிறகு வள்ளியையும் முறைமாறாமல் போற்றுகிறோம். மேலும், “கொம்பு நாலுடைய வெண்கம்பயர்ல கிரிவருங்கொண்டல்” அதாவது நான்கு தந்தங்கள் உடைய வெள்ளை ஐராவத யானை தந்த மகள் தேவ யானையைப் பல இடங்களில் போற்றிப் பாடுகிறோம்.

“தேவ குஞ்சரி பாகா நமோ நமோ” என்று பழனியில் போற்றி, தேவசேனை ‘முத்தி (தரு) மாது என, முத்தித்தரு பத்தித் திருநகை அத்தி என முருகன் தந்த முதல் வாக்காலும் “அமுதத் தெய்வானை திரு முத்திமாதின் மணவாளா” என்ற திருமுட்டத்துத் திருப்புகழாலும் போற்று கிறார், அருணகிரிநாதர், திருப்புகழ் பாடல்களில் தெய்வானையை ‘அரிய தேவலி, அமுதவல்லி யான வந்த ‘அமுத தெய்வானை’, ‘அமுதமாது’, ‘தேவபூ’, ‘சொர்க்கக்கிளி’, ‘வேழமங்கை’, ‘சசிதரு மயில்’, ‘மிகுந்த பண்பயில் குயில்மொழி’, ‘அழகிய கொடிச்சி’, என்று போற்றுகிறார். மேலும், தெய்வ யானைக்கு இளைய வெள்ளயானைத் தலைவ தெய்வ யானைக்கு இனிய பெருமாளே (திருத்தணி) யானை அளவிற் றுவளும் ஆசைக்காரன் (வேளைக்காரன் வகுப்பு) தத்தத்து அத்திற் தத்தை தாத (கந்தர் அலங்காரம்) என்றெல்லாம் போற்றினாலும், தெய் வானை சேர்க்கையைவிட முருகாற்றுப்படை தமிழே இனித்தது என்கிறார். “கைமாமயில் செல்வி நக்கீரர் சொல் தித்தித்ததே” (க. அந்) தேவகுஞ்சரியான யானை மகளைத் தொழு தால் வறுமை தீரும், சுகவாழ்வு கிட்டிடும்.

இனி, வள்ளி மணாளனைப் பற்றி சற்று சிந்திப்போம். குறிஞ்சிக் கடவுள் குமரன் வேடர் குலமகள் வள்ளியம்மையை ஏன் மணந்தார்? “கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்” கணபதி. ஆனால், கல்வியற்ற கொலை புரிவேடர் குலத்தோரைத் தானே விரும்பிச் சென்று வேடிச்சியை மணந்து அவர் தம் குலத்தோரை அறிவூட்டி ஏற்பவர் கந்தர், “வரிசில் மலைக்குறவர் பரவிய புனந்த தனில் மயிலென இருக்குமொரு வேடிச்சி காவலனே” “அறிவும் அறிதத்துவமும் அபரிமித வித்தைகளு அறியென இமைப்பொழுதின் வாழ்வித்த வேதியனும்” – வேடிச்சி காவலன் வகுப்பு. கல்வியற்றவர் ஆனால் கள்ளமற்றவர், வேட்டையாடுவோர் ஆயினும் அன்பை நாடுவோர் குறவர்.

எனவேதான் வேடர்குல மாணிக்கங்களைத் தெய்வம், தேடிவந்து அருள் செய்கின்றன, எம்பிரான் இராமன், வேடர்குலத் தலைவன் குகனைத் தம்பியாக ஏற்றார். சிவபிரான் வேடன் உமிழ் தருநீராடி, பன்றியின் ஊன் உண்டு கண்ணப்பனுக்கு அருளியதைப் பாடுகிறார் அருணகிரிநாதர்.

“கூசாது வேடன் உமிழ்தரு நீராடி ஊனுணெனுமுரை கூறாமனீய அவனுகர் தருசேடங் கோதாம் எனாமல் அமுதுசெய்வேதாக மாதிமுதல்தரு கோலோக நாத குறமகள் பெருமானே” இத்தகு வேடர் குலமாதை மணந்த வள்ளிமாணாளன் வேடர்யாவர்க்கும் சொர்க்கம் தந்து ஆட்கொண்டார். “வேடர்க்கு நீள் சொர்க்கம் வாழ்விக்க ஓர்வெற்பின் மீதுற்ற பேதைக்கொர் மணவாளா” இச்சாசக்தியினால் பக்தர்கள் காட்டும் பிரேமையால் ஞான சக்தியாம் முருகனைப் பெறமுடியும். ஜீவான்மாவாகிய வள்ளி, பரமான்மாவின் மேல் கொண்ட அன்பால், அவளே தேடிவந்து ஆட்கொண்டான், “வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்றே” என்று பாடுகிறோம். கந்தனுக்கு வள்ளியிடம் மட்டும் ஏன் இத்தனை அன்பு? என்று வியக்கிறோம், குறிஞ்சிக் கடவுள் குமரன்.

மலைவாழும் தெய்வம் தொல்காப்பிய இலக்கணம் முதல் பரிபாடல், சிலப்பதிகாரம் முதலிய சங்க இலக்கியம் வரை தமிழ்த் தெய்வமாக முருகன் பழங்காலந்தொட்டே போற்றப்படுகிறான். பத்துப்பாட்டில் முதல் பாட்டே நக்கீரனின் திருமுறுகாற்றுப்படை.

எனவே, பிரமம், பிரசாபத்யம், ஆரிடம், தெய்வம், காந்தர்வம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்ற எண் வகைத் திருமணங்களில் தமிழ் மணம் காதல் கொண்டு சேரும் ‘காந்தர்வ’ மணம்.

இதையே வள்ளி நாடகம் மூலம் ஏற்கிறார் குமரன், வெற்றியின் பரிசாகக் கிடைத்த தெய்வானை மணம் ‘ஆசுர மண’ மாகும். சுந்தரக் குறப்பெண் சுந்தரவல்லியின் எழில் தான் வள்ளியின் எழில்! குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ்ச் சிலைறுதற் சசிமுகத் தினநகைக் கனகுழற் தனகிரி கொடியிடைப் பிடிநடைக் குறமகள்” ‘பச்சைக் கொச்சைக் குறவி’ வடிவும், முக்கனி சர்க்கரை ஒத்த மொழியும் ‘பீலியும் இலையும்’, ‘உடுத்து’, பரண் மீதிருந்து கவண்கல் எறிந்து வள்ளி பறவைகளை விரட்டுகிறாள், ஆசையெனும் கிளிகள், பக்தியெனும் தினையைப் பாழாக்காது, கந்தனெனும் மந்திரக் கவண் கல்லாய் விரட்டுகிறார்.

நாரதர் வழி வள்ளியன்பையறிந்து, தானே கருணையுடன் வந்து, வள்ளிக்கு ஸ்ப்ரிச தீட்சையும் உபதேசமும் தரிசனமு தருகிறான் கந்தன், “வேண்டும் அடியவருக்கு…. வேண்டும அளவில் உதவும் பெருமாள் (கழுகுமலை) வள்ளி உடுக்கத்தழை ஆடை தந்து தினை குத்த யானை ‘தந்த’ உலக்கையும் தந்து, பிரணவ உபதேசமும் செய்கிறார்.

வள்ளிக்கு அடிமை யென சாசன ஓலை எழுதித்தர அதை வள்ளி காசோலையாக அணிந்து கொண்டாள். “குறமாதின்…. குழையோலை” அதுமட்டுமன்றி மேருமலையில் அடிமை சாசனம் எழுதி வைத்தார், வள்ளி சன்மார்க்கம் எனும் ஒரு வழியையே அருணகிரிநாதர் புதிதாகத் தோற்றுவித்து, வள்ளியிடம் உள்ள பிரேமை பக்தியால், அவள் பாதம் தொட்டு முருகன் வணங்குதலையும் பாடுகிறார், “பாகுகனி மொழி மாதுகுறமகள் பாதம் வருடிய “மணாளன், முருகப்பெருமான், யாவரும் போற்றிப் பாராட்டி வணங்கும் வள்ளி சன்மார்க்கமே, வடிவேலன் அருள்பெற ஏற்ற நன்மார்க்கமாகும்.

நிறைவாக, பக்தர் எம்பெருமானின் அருளை அடைய இரு மார்க்கங்கள் உள்ளன. கல்வி, அனுஷ்டானம், சாஸ்திரம், சம்பிரதாயம் இவைபோன்ற எல்லைகளைத் தாண்டி, பரிபூரண பிரேம பக்தி கொண்டு முயன்றால், ஞானசக்தியாக வேலவன் தேடிவந்து சகல செல்வயோக மிக்க வாழ்வருள்வான். இது வள்ளி மார்க்கம். பூசை, பஜனை முதலிய அனுஷ்டானங்களால் ஆறுமுகனை வணங்கி அருளைப் பெறுவது தெய்வானை மார்க்கம்.

“வல்லிமார் இருபுறமாக, வள்ளியூர் உறைபெருமான்” அனுஷ்டான பக்தியையும், பிரேம பக்தியையும் ஏற்று அருள் புரிவார். நீல மயில் வாகனன் ஆறுமுகன் இருமங்கை மணாளன் சண்முக நாதனை வணங்கி வழிபட்டால் நற்கதி கிடைப்பது திண்ணம்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt