முதற் பாடல் முகிழ்த்தது

முதற் பாடல் முகிழ்த்தது

ஒரு நாள் பொழுது விடிந்தது. பொற்கோழி கூவிற்று. சீவனோடு சிவமணம் கலந்து மாநுடம் தழைக்க மண்ணும் மலர்ச்சி அடைந்தது அன்று. சுவாமிகள் தென்னந் தோப்பு வாயிலை அடைந்தார். தந்தையார் சென்றிருப்பதை அறிந்து அங்கே நின்று கீழ்வானத்தை நோக்கினார். கையில் உள்ள சஷ்டி கவசம் நூலை பார்த்து தானும் இவ்வாறே பாடிப்பரமனருள் பெற எண்ணம் கொண்டார். செஞ்சுடரோனின் எழுச்சி செவ்வேட்பரமனை நினைவூட்ட சுவாமிகள் வடக்கு முகம் நோக்கி திரும்பி பனையோலையை நறுக்கி எழுத்தாணியை கீறி சரிபார்த்துக் கொண்டார். ஒவ்வொரு பதிகத்தையும் அருணகிரிப் பெருமானின் பெயர் கொண்டு முடிப்பேனாக உனைப் பாடும் பணியை எனக்கருள்க என வேண்ட அடுத்தகணம் வானில் “கங்கையைச் சடையிற் பரித்து” எனும் மங்கல ஒலி எழுந்தது, மண்ணில் விண் மலர்ந்தது, சுவாமிகள் அந்த அடியையே முதலாகக் கொண்டு தன் முதற் பாடலை மொழிந்தார்கள். அப்பாடல் முதல் மண்டலமாகிய குமரகுருதாச சுவாமிகள் பாடல் தொகுப்பில் “அமரர்கோ” எனும் தலைப்பின் கீழ் உள்ள பதிகத்தின் முதற் பாடலாய் அமைந்தது. பரஞானத்திற்கு முன்னெய்தும் அபரஞானத்தின் ஆழத்தை ஆன்மாவாகிய நமக்கு உணர்த்துகிறது.

“கங்கையைச் சடையிற் பரித்து மறி மழுவும்
கரத்தில் தரித்துருத்ரங்
காட்டுஉழுவை அதளசைத் தணிமன்றி லாடுகங்
காளற்கு பின்னமாய
சங்கரி சடாதாரி சருவாணி கல்யாணி
தற்பரி பவானிதந்த
தந்திமுகனோடுமற்று ஐந்துபெயர் நீர்மையும்
தன்னகத்துள தெய்வமே
மங்கையர்தம் இன்பெனும் துன்பினை விரும்புமட
மார்க்கத்தை விட்ட அதீதர்
வாழ்வுக்கும் வாழ்வாய வாழ்வினை அளிக்கும்உன்
மலரடி தியானிக்கவும்
அங்கையினி ல்நெல்லியங் கனிஎனத் திருவருளை
அடையவும் கருணை நல்காய்
அருமறை புகழ்ந்த திரு முருகசிவ சரவணத்து
ஆதியே அமரர் கோவே. ”

அப்பாடலை அதே இடத்திலே ஒருமுறை உரக்கப் படித்துவிட்டு எந்தையே! இதை ஏற்றருள்க! என்று வேண்டினார் நமையெல்லாம் நன்னெறி நடக்கத் தூண்டினார். சுவாமிகள் பாடலில் தோய்ந்து ஆய்ந்த முனைவர் பேராசிரியர் சபாரத்தினம் ஐயா அவர்கள் வியந்து கூறியது. “அருணகிரிப் பெருமானின் அருட்சொல்வளம், பட்டினத்து அடிகளாரின் பற்றின்மையாம் பாங்கு. தாயுமானவ சுவாமிகளின் தத்துவ வளம், இம்மூன்றும் திரண்டு ஓரு வடிவெடுத்தால் எப்படி இருக்கும்? – பாம்பன் ஸ்ரீமத் குமர குருதாச சுவாமிகள் பாடலாகச் காட்சியளிக்கும்”. சுவாமிகள் அருளிய பாடல்கள் 6666. ஆறுமுகம் கொண்ட செவ்வேட் பரமனுக்கு ஆறுபடை வீடு கொண்ட அழகனுக்கு ஆறாதாரங்களிலும் அருள்மணம் பூத்துக் கனிய சுவாமிகள் வழங்கிய படையல் 6666. இப்பேறு வேறெந்த அருளாளரும் பெறவில்லையே?

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt