முருகன் திருநாமச்சிறப்பும் ஆறுமுகங்களும்

– செய்த்தொண்டர்மாமணி எம்.எஸ்.சுப்பிரமணியம்

திருவாசகம் ஓதினால்தான் உள்ளம் உருகும். முருகா என்று உரைத்தாலே ‘உள்ளம் உருகுதய்யா!” இது மட்டுமா? மாமன் திருமால் சொன்னதோ பகவத்கீதை. அதுவோ வேத சாரம். அதில் மருகன் முருகனுக்கு ஒரு நற்சான்றிதழ் அளித்துள்ளாரே!

“ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த”
(இதன் பொருள் ஸேனைகளில் நான் ஸ்கந்தன்)
விசாகத்தில் பிறந்த விசாகன் வேறு எந்த தெய்வங்களுக்கும் நட்சத்திரத்தால் பெயர் அமையவில்லை!

கிருஷ்ணர் ரோகிணி; இராமர்-புனர்வஸு
நரசிம்மர்-ஸ்வாதி, பார்வதியும், ஆண்டாளும்-பூரம், ஐயப்பன்-உத்திரம்.
ஆறுமுகன் மற்ற தெய்வங்களைவிட அதிகமான முகங்கள் பெற்றவனும் முருகனே!

விஷ்ணு, பராசக்தி (லலிதாம்பிகை-ஒரு முகம்
கணபதி, அக்னி-இருமுகங்கள்
தத்தாத்ரேயர்-மூன்று முகங்கள்
பிரம்மன்-நான்முகன்
(அந்த நான்முகன் படைக்கவே தகுதியற்றவன் என்றவனோ ஆறுமுகன்)
சிவன், அனுமன், ஹேரம்ப கணபதி, காயத்ரிதேவி, -ஐந்து முகங்கள்
அரக்கன் இராவணனுக்கு – பத்து முகங்கள்
கீதா விஸ்வரூபனுக்கு – அநேக முகங்களும் மூன்றில் ஒன்றானவன்
தேவர் மூவரின் பெயர்களின் முதலெழுத் துக்கள் சேர்ந்ததே ‘முருக’ என்ற திருநாமம்.
முகுந்தன் – மு – திருமால்
ருத்ரன் – ரு – சிவன்
கமலோத்பவன் – க – பிரம்மன்

இதனை கச்சியப்பரும் ஓர் பாடலில் கூறியுள்ளார்.

“நாராணன் என்னும் தேவும் நான்முகத்தனும் முக்கண்
பூரணன் தானும் ஆகி புவிப்படைத்து அளித்து மாற்றி)
ஆரண முடிவு தேறா அனாதியாய் உயிர்களுக்கெல்லாம்
காரணனுமாய் மேலோன் கழலினை கருத்துள் வைப்போம்!
-கந்தபுராணம்.

மந்திரமான எழுத்துக்கள்
ஓம் நம: சிவாய – ஷடாக்ஷரம்    6
ஓம் நம: குமாராய – ஷடாக்ஷரம்    6
சரவண பவ      – ஷடாக்ஷரம்    6
ஓம் நம: கார்த்திகேயா – அஷ்டாக்ஷரம்    8
ஓம் நம: குருகுஹாய – அஷ்டாக்ஷரம்    8
ஓம் நம: சரவணபவாய – தசாக்ஷரம்    10
ஓம் நம: சரவணபவ நம ஓம்- த்வாதாசாஷரம் (12)
சரவணபவ எனும் மந்திரம் மிக சக்தி வாய்ந்தது. ஓதுவோர்க்கு என்னென்ன கிடைக்கும்?
ஸ – லட்சுமி கடாக்ஷம் (செல்வம்)
ர – ஸரஸ்வதி கடாக்ஷம் (கல்வி)
வ – போகம் (இன்பம்)
ண – சத்ரு ஜெயம் (வெற்றி)
ப – ம்ருத்யு ஜெபம் (முக்தி)
வ – நோயற்ற வாழ்வு
வேறென்ன வேண்டும்?!

ஆறு தாய்க்கு பிள்ளை

கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலுண்டு வளர்ந்ததால் கார்த்திகேயன் (வடநாட்டினர் அறிந்த பெயர் இதுவேயாகும்).
அந்த அறுவர் துர்கா, லட்சுமி, சரஸ்வதி, ராதா, காளி, காயத்ரி என்ற பெயர்களையு டையவர்.

அணைத்தவள்
தாய் பார்வதி ஆறு குழந்தைகளை எடுத்து அணைத்ததால் ஆறுமுகமும் ஒருடலும் ஆனவன். ஸ்கந்தன் (அணைக்கப்பட்டவன்)
அடியார்கள் பற்றிக் கொள்ள தூணாய் விளங்குபவன். தமிழில் கந்து என்றால் தூண்.

எனவே கந்தன்.
கார்த்திகை விரத பலன்
இந்த விரத மகிமையை சிவன் பார்வதிக்கு சொல்லியிருக்கிறார். கச்சியப்பரின் கந்த புராணத்தில் நாரதர் முசுகுந்தனுக்கு சொல்வ தாக உள்ளது. கார்த்திகை விரதமிருப் போர் புத்திரப்பேரும், பொருட்செல்வமும், பசுக் களும், கல்வியும் வேண்டுவோர் அவற்றைப் பெறலாம். எதுவும் வேண்டாதவர் ஞானமும், முக்தியும் பெறுவர். இதில் சந்தேகம் இல்லை.

திருமுருகாற்றுப்படை
முருகனைப் பாடும் சங்க இலக்கியங்கள் திருமுருகாற்றுப்படையும், பரிபாடலில் சில பாடல்களும் ஆகும். முருகனின் ஆறு திருமுகங் களைப் பற்றி திருமுருகாற்றுப்படையில் நக்கீரர்.

“உலகை பிரகாசிக்கச் செய்வது ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள்வது ஒரு முகம்
உபதேசம் புரிவது ஒரு முகம்
வேள்விகளைக் காக்க ஒரு முகம்
தீயோரை அழிக்க ஒரு முகம்
வள்ளியுடன் குலவ ஒரு முகம்”
என்கிறார்.

திருச்செந்தூர் முருகன் அருளால் ஊமை நீங்கி முதன் முதலில் ‘கந்தர் கலிவெண்பா’ (குட்டிக் கந்தபுராணம்) பாடியவர் குமரகுருபர சுவாமிகள். ஆறுமுகங்களின் செயலை
சத்ரு ஸம்ஹாரத்திற்கு ஒரு முகம்
அஞ்ஞானம் அழிக்க ஒரு முகம்
சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள ஒரு முகம்
ஞானம் அளிக்க ஒரு முகம்
முக்தி அளிக்க ஒரு முகம்
சத்ரு சம்ஹாரம் என்பது தந்தை. சிவனின் தொழில். முக்தி அளிப்பது மாமன் திருமாலின் பணி. தேவர் மூவரின் சக்தியும் இணைந்தவன் ஆனதால் முருகனே அப்பணிகளையும் புரிகிறான்.

திருப்புகழில் ஆறுமுகங்கள்
ஏறுமயிலேறி வினையாடு முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவவேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளவேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே
-திருப்புகழ்

ஜெயந்தி புராணம் (திருச்செந்தூர் புராணம்) கூறுவது.
ஷட்ரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத்ஷட்சாரம் ஷண்மதம் ஷட்வேதாங்கம் ஷண்முகம் பஜே
இதன் பொருள் மிக ஆழமானது.
1. ஷட்ரிம்- காமம், குரோதம், மோகம், மதம், லோபம், மாத்சர்யம் எனும் ஆறு குணங்களை களைபவன்.
2. ஷட்விகாரம் – உண்டாக்குதல், இருத்தல், வளர்தல், மாற்றமடைதல், குறைதல், அழிதல் என ஆறு செயல்களற்றவன்.
3. ஷட்கோசம் – அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என ஆறு நிலைகளில் இருப்பவன்.
4. ஷட்ரஸம் – இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு எனும் ஆறு சுவைகளாக இருப்பவன்.
5. ஷட் சாத்ரம் – சாங்க்யம், வைசேஷி கம், யோகம், நியாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என ஆறு சாத்திரங்களானவன்.
6. ஷண்மதம், காணபத்யம், சைவம், சாக்தம், சௌரம், வைணவம், கௌமாரம் என ஆறு சமயங்களாவன.
7. ஷட்வேதாங்கம் – சிட்சா, கல்பம், வியாகர்ணம், நிருத்தம், ஜ்யோதிஷம், ஸந்தம் என ஆறு வேதாங்களானவன்.
இவ்வாறான ஆறுமுகனுக்கு படை வீடுகளும் ஆறு. இவற்றை நக்கீரர் திருமுரு காற்றுப் படையில் சிறப்பாகப் பாடியுள்ளார்.

தமிழ்க் கடவுள் என்பது முருகனையே! மொழிக்கு கடவுளான ஆறுமுகனுக்கு விழிகளோ பன்னிரண்டு. அருந்தமிழுக்கு உயிரெழுத்துக்களும் பன்னிரண்டு! முக்கண் சிவனின் மைந்தனுக்கு மூவாறு கண்கள். முத்தமிழ் மொழியின் மெய்யெ ழுத்துக்களும் மூவாறு (பதினெட்டு) அவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவாறாய் பகுக்கப்பட்டுள்ளன. முருகன் கை வேலாயுதம் ஒன்றே போல் தமிழில் ஒரே ஒரு ஆய்த எழுத்தும் உண்டு. பிற மொழி எதிலும் இல்லாத சிறப்பெழுத்து!

முகத்திற்கு விழியழகு. மொழிக்கு தமிழ் அழகு. அழகு தமிழுக்கு கடவுளும் அழகன் முருகனே! மொழிக்கு கடவுள் பிற மொழி களில் உண்டா? இல்லையே! அதனால் தானே தமிழ் உயிர்மொழி! தனிமொழி! செம்மொழி!

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt