வடமொழியின் மாண்பு

வடமொழியின் மாண்பு

வடமொழியும் தென்மொழியும் நாவலந்தீவு நார்களுக்கு வாய்த்த இரு கண்களாம். இவ்வுண்மை உணராது வடமொழியைத் தூடனை புரிவோர் குமுகாயப் புண்களாம். வடமொழி கல்லாதவரைத் திருஞான சம்பந்தர் “மந்திபோற்றிரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்” என இழித்துரைத்தல் காண்க. பாம்பன் சுவாமிகள் திருஞானசம்பந்தர் வாக்கிற்கேற்ப வடமொழி கற்று இருகண்களையும் பெற்றார். நமக்கு அதனைச் சொன்னார். திருப்பா நூன் முகத்தில் சுவாமிகள் கூற்று “நமா ஆர்ந்த கடவுளுடைய நாமார்ச்சனத்திற்கும் நாம மந்திர செபத்திற்கும் சத்திபீஜ மணைந்த மந்திர செபத்திற்கும் பிறமந்திரங்கட்கும் அங்கியை முன்னிட்டு ஒற்று உத்திரகிரியைக்கும் வடமொழியே முக்கிய உதவியாகவும் இருத்தலின் இவ்விருதிறமுந் தமிழர் கொண்டுய்பவரே யாவர்” திருப்பா பக்கம் 17.

சுவாமிகள் வடமொழியறிவு பெற்றதனாலேயே சாம வேதத்திலே சுவாமி என அழைக்கப்பட்ட சிறப்பு ஆறுமுகச் சிவனுக்கே கிட்டியது என்பதைப் பாடலாய்ப் பாடியருளினார். தன் சாத்திர நூல்களில் எல்லாம் வேதாகம உபநிடதக் கருத்துக்களை மேற்கோளாக எடுத்துக் காட்டி குகபரத்துவக் கொள்கையை நிருவியருளினார். பிறப்பாலுயர்வு தாழ்வு இல்லையெனும் கருத்தை சாமவேத வஜ்ரஸுசிகோப நிஷதம் கொண்டு பரிபூரணானந்த போதம் நூலில் பகர்ந்தார். சைவசித்தாந்த பொதிவு என்ற ஆங்கில நூலில் வார வழிபாட்டின் தந்தை சைவப்பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளையவர்கள் (என்ஆசான்) பாம்பன் சுவாமிகள் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதியது. “Mean while he became well-versed in upanishdic and Agamic Love in Sanskrit” என்றுரைத்தல் காண்க. (TALKS ON SAIVA SIDDHANTA) தமிழ்த் தென்றல் திரு.வி.கவும் சுவாமிகளின் வடமொழிப் புலமையை தன் வாழ்க்கைக் குறிப்புகள் நூலில் குறிப்பிடுகின்றார்.

“பாம்பன் சுவாமிகள் என்பவர் பாம்பனில் தோன்றிய குமரகுருதாச சுவாமிகள்-சுவாமிகள் வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் முழுதொருங்குண்ட காளமேகம்”

“குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்” திரு.வி.க.வாழ்க்கை குறிப்பு பக்கம் 127.

சுவாமிகள் வடமொழியிலியற்றிய “குமாரஸ்தவம்” தௌத்தியம், அட்டாட்ட விக்கிரகலீலை போல்வன என்றும் பாராயணத்திற்குரிய பனுவல்களாய் விளங்குகின்றன.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt