விவேக சிந்தாமணியில் சமயச் சிந்தனைகள்!

– க.கலாநிதி, அரிவளூர்

எத்தொழில் செய்தாலும் ஈசனிடமே மனம்
ஓர் அடிமைப் பெண்ணானவர் தண்ணீர்க் குடத்தைத் தலையில் வைத்து வரும்போது வியக்கத்தக்க முறையில், குடத்தில் இருந்த கைகளை நீக்கிப் பலவிதமாக விளையாடி இருகைகளையும் வீசிக் கொண்டு நடந்து வரினும் அவளது உள்ளமானது தன் தலை யிலுள்ள குடத்தின் மீதே இருக்கும்.

அது போல வீடுபேற்றில் விருப்புடையவர் எந்தச் செயலைச் செய்தாலும், எத்தகைய துன் பத்தை அடைந்தாலும், அவர்களின் உள்ள மானது மோன நிலையில் இறைவனிடத்திலே இருக்கும்.

இக்கருத்தினை,
“எத்தொழிலைச் செய்தாலும் ஏதுஅவத்தைப் பட்டாலும்
முத்தர் மனம் இருக்கும் மோனத்தே! வித்தகமாய்க்
காதிவிளை யாடிஇரு கைவீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான்”
எனவரும் விவேகசிந்தாமணி பாடல் உணர்த்துகிறது.

அயல் ஆடவனிடத்துக் காமம் கொண்ட ஒருத்தி, வேறு பல செயல்களைச் செய்து கொண்டிருந்தாலும், தன் கள்ளக் காதலனிடத்தில் சேர்வ தற்கே உள்ளம் செல்லும். செல்ல அவ்வேலைகளைச் செய்வாள். அதுபோல, பெருமை யுடைய தொனியர் கடவுளின் திருவடி மீது உள்ளத்தை நீக்காமல் நிறுத்தி மகிழ்ந்து கொண்டே எத்தொழிலையும் செய்வர் என்பதை,
“சோரமானை யொட்டிமிகச் சோரபிரான் மேல் மனதாச்
சேரத் தொழில் செய்யும் திட்டம்போல பேர்பெரியார்
அத்தன் அடி மேல் மனத்தை ஆனாது வைத்துகந்தே
எத்தொழிலும் செய்வார் இசைந்து”
எனவரும் விவேகசிந்தாமணிப் பாடல் குறிக்கின்றது.

எனவே, பற்றற்றானாகிய துறவி உடல் வருத்தமும் துயிலின்மையும், பசிக் கொடுமையும் பார்க்கமாட்டார்கள். ஞான நிலையாகிய கருமத்தையே கண்ணாகக் கொண்டு செயல்படுவர் என்பதை,
“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செல்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்”

எனவரும் நீதிநெறிவிளக்கப் பாடல் குறிக்கின்றது.
தோத்திரம் செய்து தொழுது மின்போலும் அமைந்த இறைவன் தோற்றத்தை இமைப் பொழுதும் மறவாது தியானம் செய்வதே பேரின்பத்தை அடையச் செய்யும் என்ற சமயச்சிந்தனை பெறப்பட்டது. துறவிகள் மற்ற தொழில்கள் செய்தாலும் அவரது மனமானது இறைவனையே இடை விடாது நினைந்து கொண்டிருக்கும். இதுவே வீடுபேறு அடைய ஏதுவாகும். இக்கருத்தினை,

“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்”
என வரும் திருக்குறள் சுட்டும்.

இறைவனை நோக்கி தவம் செய்யும் உயிர்கள் இன்புற்று வாழ்தல் எளிது. ஆதலால் தான் பாரதியாரும்,
“செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால்
எய்த விரும்பியதை யெய்தலாம்-வையத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை- அன்புடையார்
இன்புற்று வாழ்த லியல்பு”
என்று குறிப்பிட்டுள்ளார்.

எல்லாம் சிவன் செயல்
ஒருவர் வாழ்க்கையில் இன்பங்களையும், துன்பங்களையும் உண்டாக்குவது இறைவனே ஆவன். ஆதலால் தான், ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்றனர்.

ஒன்றை நினைத்தால் அதுநீங்கி பிறிதொன்றி நிகழலாம். அல்லது நினைத்ததே கைகூடலாம். அல்லது ஒன்றை எண்ணாத போது அதுவாக முன்வந்து எளிதில் கிடைக்கலாம். இவையாவும் மக்களை ஆளுகின்ற ஈசன் செயல் என்பதை
“ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அது வரினும் வந்தெய்தும்,-ஒன்றை
நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்”
எனவரும் நல்வழிப்பாடல் விளக்குகிறது. இது பற்றியே ‘தானொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கின்றது’ எனும் பழமொழி வெளிப்பட்டது.

இறைவனின் செய்கையையும், வல்லபத்தை யும் ஒருகதை வழி அறியலாம். வேடன் காட்டில் ஒளிந்திருந்து, புறாக்கள் மீது அம்பைத் தொடுக்க, அதைக் கண்டு அஞ்சிப் பறந்து கொண்டிருந்த புறாக்கள் இரண்டில் ஆண் புறா தன் பெண்புறாவைப் பார்த்து ‘நம்மை உண்ணக் கீழே வேடன் உள்ளான், வானத்தில் வல்லூறு என்ற பறவை பறக்கின்றது என் செய்வோம்!’ எனக் கூறி வருந்தியது.

அவ்வேடன் அம்பு தொடுக்கும்போது காலருகே இருந்த புதரில் இருந்து பாம்பு தீண்ட அதனால் அவன் இறந்தான். அவன் கையில் இருந்த அம்பு விடுபட்டு மேலே போய் வல்லூறு பறவையைக் கொன்றது. எனவே எல்லாம் இறைவனது செயலே அல்லது ஒருவன் செயலால் ஆவது உண்டோ?

ஆகவே, புறாக்கள் எண்ணியது தங்கள் உயிர்க்கு அபாயம் வரும்  என்பதே ஆகும். ஆனால், கொலை செய்யும் கொடியவர் களான வல்லூறு, வேடன் போன்ற களை களை நீக்கி, நற்பயிர்களான புறாக்களைக் காப்பது இறைவன் செயல் அல்லவா? எனவே, இறைவன் நன்மை தீமைகளை அறிந்து போக நுகர்ச்சியை ஊட்டுவான் என்பது வெளிப்படுகிறது.

பிறிதோர் உயிர்க்குத் துன்பம் விளைவிக்க எண்ணினாலும் தனக்குத் துன்பம் வந்து சேரும் என்பதை இக்கதைப் புலப்படுத்து கிறது. பிறிதோர் உயிரையும், உடைமைப் பொருளையும் வஞ்சித்துக் கொள்ளக் கருதுவதும் பாவம் ஆகும். ஆதலால் தான் நினைத்தலும் செய்ததனோடு ஒக்கும் என்றார் பரிமேலழகர் இக்கருத்தினையே,
“உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்” என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்

வல்லூறு புறாக்களைக் கொல்ல நினைத்த தும், வேடன் புறாக்களை வெல்ல நினைத்த தும் குற்றமே ஆகும். ஒரு பொழுதும் வாழ்வ தறியாத உயிரைக் காப்பதும் வீழ்த்துவதும் இறைவன் செயலே ஆகும்.

இக்கதையுடன் கருத்தை விளக்கு விவேகசிந்தாமணிப் பாடல் இதோ;
“கரந்தொருவன் கணைதொடுக்க மேல்பறக்கும்
வல்லூற்றின் கருத்தும் கண்ட
உரந்தையுற்றுக் கானகத்தில் உயிர்ப்புறா
பேடுதனக்கு உரைக்குங் காலை,
விரைந்துவிடம் தீண்ட உயிர் விடும், வேடன்
கணையார் வல்லூறும் வீழ்ந்தது!
அரன் செயலே ஆவதல்லால்தான் செயலால்
ஆவதுண்டோ அறிவுள் ளோரே”
சிவயோகசாரமும் அவரவர் வினைக் கீடாக நலந்தீங்குகளைச் செய்து வருகிறான் இறைவன் என்றும், இதுவே அவன் செயல் என்றும் கூறுகிறது.

“அவரவருக் குள்ளபடி ஈசனரு ளாலே
அவரவரைக் கொண்டியற்று மானால் அவரவரை
நல்லார் பொல் லாரென்று நாடுவதென் நெஞ்சமே
எல்லாஞ் சிவன் செயலென்று எண்”

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt