கருணை மழை பொழியும் ஸ்ரீ கைலாசநாதர்

முன்னுரை
ஈசன் வீற்றிருக்கும் இடம் ‘கைலாசம்’ என்றும், பெருமாள் வீற்றிருக்கும் இடம் ‘வைகுண்டம்’ என்றும் பக்தர்களால் போற்றப்படுகின்றன.

ஈசனின் உறைவிடமான ‘கைலாசம்’ என்ற பெயரையே தன்னுடைய குழந்தைகளுக்கு சூட்டி புண்ணியம் தேடிக் கொண்டவர்கள் அக்காலத்தில் அதிகம். தற்பொழுது நாகரீகம் என்ற பெயரில் மனம் போனபடி பெயர் வைத்து பாவச்சுமையைச் சுமக்கின்றனர்.

திருநாவுக்கரசு சுவாமிகள் கயிலைமலையின் அடியில் உள்ள ஒரு பொய்கையில் ஈசனின் ஆணைப்படி மூழ்கி எழுந்து திருவையாற்றில் கயிலைக் காட்சியினை கண்டு களித்து ஒரு பதிகம் பாடினார்.

“வேற்றாகி, விண்ணாகி நின்றாய் போற்றி, மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி” என்று ஆரம்பித்து ஒவ்வொரு பாடல் முடிவிலும் “கயிலைமலை யானே போற்றி, போற்றி” என்று பாடுகிறார்.
இந்த அற்புதப் பதிகத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் நமக்கு வரும் இன்னல்கள் எல்லாம் நீங்கும்.

சேக்கிழார் ஸ்வாமிகள் பெரிய புராணத்தில் ஆரம்பத்தில் ‘திருமலைச் சருக்கம்’ என்ற பகுதியில் கீழ்க்கண்டவாறு கயிலைமலையின் சிறப்பினைப் புகழ்கிறார்.

“பொன்மேனியிலே வெள்ளிய திருநீற்றை அணிந்தாற்போன்று விளங்கி நிற்கும் பனிமலை யின் உயர்ந்த முடியே திருக்கயிலை மலையாகும்.
“திருக்கயிலை முதற்கோபுர வாயிலின் கண் திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்களும், பல முனிவர்களும் சிவசாரூபம் பெற்ற சிவனடியார்களும் நெருங்கிக் கூடி எம்பெருமான் திருவருளைப்பெற அங்குத் தடைப்பட்டுக் காத்திருப்பார்கள். அவ்வாயிலில் நந்தியெம்பெருமான் கையில் உடைவாளும், பொற்பிரம்பும் ஏந்தியவராய்க் காவல் புரிந்து கொண்டிருப்பார்”.

இத்தகைய கயிலைமலையின் சிறப்பை சொல்லில் நம்மால் அடக்கமுடியாது. கயிலைமலையானை என்றும் நினைவில் கொள்ள தமிழ்நாட்டிலும், இந்தியாவில் சில திருத்தலங்களிலும் ‘கைலாசநாதன்’ என்ற பெயரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து அழைத்தனர்.
அத்தகைய கோயில்களில் ஒன்று வேலூர் மாவட்டத்திலுள்ள ‘சுமைதாங்கி’ என்ற சிற்றூரில் உள்ளது. அக்கோயிலின் பெருமைகளை சிறிது பார்ப்போம்.

சுமைதாங்கி

அக்காலத்தில் பெரும்பாலும் கால்நடை யாகவே பல ஊர்களுக்கு சென்றனர் மக்கள். தங்களுடைய உடமைகளை ஒரு துணியில் கட்டித் தலையில் வைத்துச் செல்வது வழக்கம். உடலில் சோர்வு ஏற்படும்போழுது அந்தச் சுமையை இறக்கி வைக்க ஒவ்வொரு ஊரிலும், சுமைதாங்கிக் கல் ஒன்று இருக்கும்.

அத்தகைய ‘சுமைதாங்கிக்கல்’ ஒன்று இந்த ஊரிலும் இருந்தது. சமீபத்தில் சாலையை அகலப்படுத்தும் பொழுது அக்கல் அங்கிருந்து அகற்றப்பட்டது.

இந்த ஊர் தோன்றி சுமார் 400 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஊருக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று முன்னோர்கள் ஆலோசித்தபொழுது ஊரின் ஆரம்பத்திலிருந்த ‘சுமைதாங்கி’ கல்லையே காரணப்பெயராக்கி ‘சுமைதாங்கி’ என்று பெயரிட்டனர்.

இந்த உலகத்திலுள்ள சுமைகளையெல்லாம் பூமாதேவி தாங்குகிறாள். நம்முடைய சுமை களையெல்லாம் இறைவனிடம் சேர்த்துவிட்டால் இறைவன் தாங்குகிறான்.

ஆகையால் ஒரு அற்புதப் பெயரைத் தாங்கி நிற்கும் இந்த திருத்தலம் கைலாசபதி கோயில் கொண்ட ஒரு ஒப்புயர்வற்ற திருத் தலம், என்பதில் சந்தேகமில்லை.

ஸ்ரீ கைலாசநாதர் கோவில்:

ஊரின் நடுநாயகமாக குளக் கரையில் இக்கோயில் அமைந் துள்ளது. திரௌபதியம்மன் கோவிலும், வரசித்தி விநாயகர் கோவிலும் இக்குளக்கரையில் அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் பாலாற்றில் வெள்ளம் கரையைத் தொட்டுக் கொண்டு ஓடும். சுமை தாங்கிக்கருகில் உள்ள புதுப்பாடி என்ற இடத்தில் ஒரு அணைக்கட்டு உள்ளது. அங்கிருந்து சில கால்வாய்கள் மூலம் சில ஏரிகளுக்கு நீரைப்பிரித்து அனுப்புவது வழக்கம்.

அதில் முக்கியமாக இரண்டு கால்வாய்கள் சிறப்பு வாய்ந்தவை. ஒன்று மஹேந்திரவாடி கால்வாய். மற்றொன்று காவேரிபாக்கம் கால்வாய். வேலூர் மாவட்டத்திலுள்ள இரண்டு ஏரிகளான மஹேந்திரவாடி ஏரிக்கும், காவேரிப்பாக்கம் ஏரிக்கும் பாலாற்று நீரை இந்தக்கால்வாய்கள் கொண்டு செல்லும், ‘க்ஷீரநதி மகாத்மியம்’ என்ற புராணத்தில் பாலாற்றை கங்கையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அகத்திய முனிவரால் காவிரி அன்னைக்கு ஒரு சமயம் சாபம் ஏற்பட்டது. அந்தச் சாபம் போக அன்னை காவிரி ஏரி வடிவில் வந்து, ஈசனைப் பூஜித்தாளாம். ஸ்ரீ பத்மபுராணத்தில் காவேரிப்பாக்கத்தை ‘கவேரநகரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி அன்னைக்கும், காவேரிப்பாக்கத்திற்கும் தொடர்பு உள்ளது. ‘அவணி நாராயணசதுர்வேதி மங்கலம்’ என்று சரித்திரம் காவேரிப்பாக்கத்தை அழைக்கிறது.

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு கால்வாய் களும், சுமைதாங்கியை ஒட்டியே, ஒன்று மேற்கிலும், மற்றொன்று கிழக்கிலும் அமைந் துள்ளது. சுமைதாங்கியும், காவேரிப்பாக்கத் திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.
நீர் வளமும், நில வளமும், வேதம் ஓதிய அந்தணர்களும் வாழ்ந்த பகுதியாக இது இருந்திருக்கிறது.

சுமைதாங்கியில் உள்ள திருக்குளமும், ஏரியும், ஸ்ரீ கைலாசநாதர் கோயிலுக்குப் பக்கத்திலேயே இருக்கின்றன.
ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவர் இந்த ஊருக்கு வந்த பொழுது இந்த குளத்தைப் பார்த்துவிட்டு ‘கோவிந்த தீர்த்தம்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இன்று குளமும், ஏரியும், நதியும், கால்வாய் களும் இருக்கின்றன. ஆனால் நீர்தான் இல்லை. அந்த சுபிட்சமான, மகிழ்ச்சியான நாள் என்று வருமோ?

இனி கோயிலைக் காண்போம். கோயிலின் வெளி வாயிலை ஒரு அலங்கார வளைவு அலங் கரிக்கிறது. அதன் உள்ளே நுழைந்து சென்றால் கோயிலின் வெளிப்பிராகாரத்தை அடையலாம்.

கோயிலின் உள் வாயிலுக்கு மேற்புரத்தில் அழகிய சுதைச்சிற்பங்கள் உள்ளன. ஈசன், அம்பிகையுடன் தர்ம தேவதையான, ரிஷபத் தின் மீது அமர்ந்து அழகாகக் காட்சியளிக் கிறார். ஈசனுக்கு இருபுறமும் நின்ற நிலையில் கணபதியும், முருகனும் காட்சி யளிக்கின்றனர்.

கோயிலுக்குத் தெற்குப்புரம் ஒரு வாயிலும் கிழக்குப்புரம் ஒரு வாயிலும் உள்ளன. ஈசன், அம்பிகை, கருவறையை இரண்டு அழகிய விமானங்கள் அலங்கரிக்கின்றன. அந்த விமா னங்கள் ஒவ்வொன்றிலும் மூன்று கலசங்கள் உள்ளன. கருவறை, மஹாமண்டபத்தில் உள்ள தூண்களில் சில சுதைச்சிற்பங்கள் உள்ளன. ராமர், சீதை, லட்சுமணர் ஒரு புறமும், அதற்கு நேர் எதிரே அனுமனும் காட்சியளிக்கிறார்கள்.

மற்றொரு தூணில் பிரத்யங்கிராவும், அதற்கு நேர் எதிரே சரபமூர்த்தியும் அருள் மழை பொழிகின்றனர்.

கருவறை வாயிலுக்கு வெளியே, துவார பாலகர்கள் இருக்கவேண்டிய இடங்களில் பாலகணபதியும், பாலமுருகனும் காவல் புரிகின்றனர்.
கருவறையில் கிழக்கு நோக்கி காட்சியளிக் கும் ஸ்ரீ கைலாசநாதர், வட்ட ஆவுடையாரு டன் அழகிய லிங்கத்திருமேனியாகக் காட்சி யளிக்கிறார்.

ஈசனைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தால் தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் ஸ்ரீ பர்வதவர்த்தினியை தரிசிக்கலாம். இந்த அம்பிகைக்கு நான்கு திருக்கரங்கள். சிறிய உருவம். மேல் இரு திருக்கரங்களில் பாசமும், அங்குசமும் ஏந்தியிருக்கிறாள். கீழ் இரு திருக்கரங்களை அபய, வரத முத்திரைகளாகக் காட்டிக் காட்சியளிக்கிறாள்.

ஈசன் கருவறையை இடமிருந்து வலம் வரும்பொழுது முதலில் நர்த்தனகணபதியை யும், அடுத்து ஆலமர்செல்வன் தக்ஷிணா மூர்த்தியையும் தரிசிக்கலாம். நிருதி மூலையில் லிங்கோத்பவரை தரிசிக்கலாம். கருவறைக்குப் பின்புறம் மஹாவிஷ்ணு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். திருச்சுற்றில் வடக்குப் பார்த்து பிரம்மாவையும், துர்க்கையும் தரிசிக்க லாம். சண்டிகேஸ்வரரைத் தனிச்சந்நிதியில் கண்டு வணங்கலாம். அடுத்து சப்த மாதாக்களையும், பைரவரையும், நவக்கிரஹ தேவதைகளையும் தொழுது வணங்குகிறோம்.

இக்கோயிலில் ‘சந்திரசேகரர்’ என்ற வடிவம் சுதைச்சிற்பமாக உள்ளது. தமிழிலே ‘பிறை சூடிய பெருமான் என்று இவரைக் குறிப் பிடலாம். 64 சிவ வடிவங்களில் இந்த ‘சந்திர சேகரமூர்த்தம்’ மூன்று வகைப்படும். கேவலமூர்த்தி, உமாசகிதமூர்த்தி, ஆலிங்கன மூர்த்தி என்ற மூன்று வகை. இங்கிருப்பது ‘கேவல சந்திரசேகரர்’ என்ற வகை. ‘கேவல’ என்றால் தனித்து என்று பொருள். உமையில்லாமல் தனித்துக் காட்சி கொடுக்கும் மூர்த்தியே அவர்.

ஸ்ரீமஹா பெரியவர் தரிசித்த திருத்தலம்:

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி மஹான் அன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில் யாத்திரை செய்தபொழுது பத்து தினங்கள் இத்திருத்தலத்தில் தங்கியிருந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்ததை, இவ்வூர் முதியோர்கள் சிலர் இன்றும் பசுமையாக நினைவில் வைத்துள்ளனர்.

பல்லக்கு, யானை, குதிரை, ஒட்டகம், பசு, எருதுகள், பணியாளர்கள் என்று ஒரு பெரிய பரிவாரத்தோடு பெரியவர்கள் வந்து முகா மிடுவது வழக்கம். நேரில் பார்த்தவர்களுக்குத் தான் அந்த தெய்வீகக் காட்சியைப் பற்றித் தெரியும். இக்காலத்தில் எல்லாம் இயந்திர மயம். இதில் தெய்வீகத்தைக் கொண்டு வருவது மிகக் கடினம்.

மஹா கும்பாபிஷேகம்:

31-10-2008 அன்று ஸ்ரீ கைலாசநாதர் கோயிலுக்கு சீரும் சிறப்புமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. 26-8-2002 அன்று சிவன் கோயிலுக்கருகில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஒரு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. முதலில் அந்தக் கோயிலுக்கு திருப்பணி செய்ய வேண்டும். அதற்கு முக்கியமாக நிதி வேண்டும்.

அந்த நிதியைத் திரட்டுவதற்கு சரியான நபர் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தெய்வ அருள் வேண்டும். இவையெல்லாம் அமையப்பெற்றால்தான் கும்பாபிஷேகம் நடத்த முடியும். அதுவும் சிவன் கோயில் கும்பாபிஷேகம் என்றால் சாதாரண விஷயம் அல்ல. இக்கோவிலுக்கு சுமார் 15 லட்சம் வரை செலவழித்து திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்தவர்கள் இவ்வூரின் பெயரையே வைத்து தொண்டு நிறுவனம் நடத்திவரும் அன்பர்கள். அதற்குத் தலைவராக இருந்து செயல்படுத்தியவர் திரு.எஸ்.கே.ராஜாராமன் என்னும் இவ்வூரின் அன்பர்.

பரமாச்சாரியாரும் சுமைதாங்கியும்:

இவ்வூரைச் சேர்ந்த அமரர் நரசிம்மன் பரமாச் சாரியாரின் பெரும் பக்தர். பெல்காமில் பெரியவர்கள் தங்கியிருந்தபொழுது அவருக்கு நிறைய கைங்கரியங்கள் செய்தவர். பெரியவர்கள் மௌனம் அனுஷ்டிக்கும் நாட்களில் ஜாடை காட்டி சில ஆணைகளைப் பிறப்பிப்பதுண்டு. அமரர் நரசிம்மனை அழைத்து வர, மடத்தில் பணியாற்றும் அன்பர்களுக்கு பெரியவர்கள் காட்டிய குறிப்பு மிகவும் சிந்தனைக்குரியது.

பெரியவர்கள் தன்னுடைய வஸ்திரங்களைப் பந்தாகச் சுருட்டி தலையின் மீது வைத்துக் கொண்டு காண்பித்தால் அது சுமைதாங்கியை நினைவுறுத்தும் என்றும், உடனே மடத்து அன்பர்கள் சுமைதாங்கியைச் சேர்ந்த அமரர் நரசிம்மனை பெரியவர்களிடம் அழைத்து வருவதுண்டாம்.

கைலாசத்திற்கு இணையாகக் கூறப்படும் சில தலங்கள்:

1. காளஹஸ்தி, 2.திருச்சிராப்பள்ளி, 3.பிரான்மலை, 4.வேதாரண்யம் என்னும் திருமறைக்காடு, 5.திரு வேற்காடு (சிவன் கோயில்), 6.காஞ்சி, 7.திருவெறும்பூர், 8.திருவையாறு.

பஞ்சகைலாசங்கள்

(காஞ்சியைச் சுற்றி அமைந்தவை)
1.காஞ்சி, 2. ஐயங்கார் குளம், 3.கீழ்கதிர்பூர், 4.ஏகாட்டூர், 5. ஐயன்பேட்டை.

சப்தகைலாசங்கள்:
(திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது)
1.தாமரைப்பாக்கம், 2.வாசு தேவம்பட்டு, 3.நார்த்தான்பூண்டி, 4.தென்பள்ளிப்பட்டு, 5.பழங்கோயில், 6.கரப்பூண்டி, 7.மண்டகொளத்தூர்.

நவகைலாசம்
(நெல்லை மாவட்டத்தில் உள்ளது)
1. ஸ்ரீ வைகுண்டம், தென்திருப்பேரை, 3.முறப்பநாடு, 4. சேந்தமங்கலம், 5.ராஜபதி 6.பாபநாசம், 7.சேரன்மாதேவி, 8.கோடக நல்லூர், 9.குன்னத்தூர்.

முடிவுரை:
இக்காலத்தில் சிலர் புகழ் பெற்ற கோவில் களுக்கு மட்டுமே செல்லுகின்றனர். இது ஒரு தவறான பழக்கம். அக்காலத்தில் இது போன்ற நடைமுறை இல்லை. தேவாரம் பாடிய மூவரும், ஆழ்வார்களும் கடைபிடித்த வழியையே நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இறைவன் எங்கும் வியாபித்திருக்கிறான். ஆகையால் சிறிய கோயில், பெரிய கோயில் என்ற பாரபட்சம் ஏன்? சுமைதாங்கி ஸ்ரீகைலாசநாதர் போன்ற கிராமத்துக் கோயில்களுக்குச் சென்று வழிபடுங் கள். அங்கெல்லாம் சென்று உழவாரப்பணி செய்யுங்கள். இதுபோன்ற கோயில்களுக்குச் சென்றால் நீங்கள் தரிசனம் செய்வதற்குப் பணம் எதுவும் தரவேண்டாம். ‘ஜருஹண்டி’ போன்ற தொந்திரவுகள் இல்லை. ஏகாந்தமாய், ஆனந்தமாய் தரிசனம் செய்யலாம். என்ன நான் சொல்வது சரிதானே? சிவம் என்றால் மங்களம் என்று பொருள்.

தும்மல் இருமல் துயர் துன்ப நோயுறுங்கால்
அம்மா அப்பா என்று அலறாமல் – சும்மா
சிவ சிவா என்றே தினம் பரவாய் காலன்
கவர் பயம் போம் உண்மை இதுகாண்
என்று ஸ்ரீலஸ்ரீ திருப்பதி ஸ்வாமிகள் கூறுகிறார்.

‘சிவ சிவ என்றால் தீவினை மாளும்’ என் கிறார் திருமூலர் ‘சிவாயநம’ என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்றாள் ஔவைபிராட்டி.

நவகிரஹங்களும் சிவனுக்கு கட்டுப்பட்ட வையே. ஆகையால் கிரஹதோஷம் போக சிவனை வழிபடுங்கள். சோழர்கள் காலக் கோயில்களில் நவகிரஹசந்நிதிகளை அவர்கள் ஏற்படுத்தவில்லை. சூரியன், சந்திரன் தவிர மற்ற கிரஹங்களுக்கு சந்நிதி இருக்காது. அப்படி நவகிரஹங்கள் இருந்தால் அவை பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவையே.

வழித்தடம்:

சென்னை பங்களூரு சாலையில் காவேரிப்பாக் கத்தை அடுத்து அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
தொடர்புக்கு:

சிவத்திரு.எஸ்.ஆர்.சுப்ரமணியம்
2/79, பெருமாள் கோயில் தெரு.
சுமைதாங்கி அஞ்சல், 632508
வேலூர் மாவட்டம்
கைப்பேசி: 9442978857, 9489364291

அருகில் தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள்
வாலாஜாப்பேட்டை (18 கோயில்கள்), காவேரிப்பாக்கம், திருப்பாற்கடல், வேகா மங்கலம், களத்தூர், தாமல், சேரிஅய்யம் பேட்டை, ஞானமலை, பனப்பாக்கம், கொண்டாபுரம் (ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்), சிறு கரும்பூர் (சுந்தர காமாக்ஷி).

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt