காசிக்கு நிகரான ஸ்ரீசோழீஸ்வரர் ஆலயம்

அவர்களுள் சூலை நோயைக் கொடுத்து தடுத்து ஆட்கொள்ளப்பட்டவர் அப்பர் என்னும் திருநாவுக்கரசு, பாலைக் கொடுத்து ஆட்கொள்ளப்பட்டவர் ஞானசம்பந்தர், கோலைக் கொடுத்து தடுத்து ஆட்கொண்டது சுந்தரமூர்த்தி நாயனாரை.
நூலைக் கொடுத்து ஆட்கொண்டது மாணிக்கவாசகரை, தில்லையம்பலத்திலே சாட்சாத் நடராஜப் பெருமானே அந்தணராக வந்து, வாதவூரார் சொல்ல மணிமணியான கை எழுத்தில் திருவாசகத்தை எழுதி – ‘மாணிக்க வாசகர்” என்று இறைவனால் ஆட்கொள்ளப்படவர் மாணிக்கவாசகர்.

இறைவன் இருக்குமிடத்தை மாணிக்க வாசகர் தமது திருவாசகத்தில் திருச்சாழல் பகுதியில் அழகாக எடுத்துரைக்கின்றார்.
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடி
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்
காயில் உலகனைத்தும் கட்பொடிகாண் சாழேலோ !
என்று கூறியுள்ளார்.

மூவர்பாடியது, தேவாரம் ஏழுதிரு முறைகள், 7000 பாடல்கள் கொண்டது எட்டாம் திருமுறை திருவாசகம், பத்தாம் திருமுறை திருமந்திரம் பன்னிரண்டாம் திருமுறை பெரிய புராணம், இவை அனைத்தும் ஒவ்வொரு சிவநேசர் வீட்டிலும் இருக்க வேண்டும்.
திரு ஐந்து எழுத்தை ஓதி (ஓம் நமசிவாயா) திரு நீறு அணியும் வழக்கத்தையும், அணியும் முறையையும் சிறுவயது முதலே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து பழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும்.

காசியில் இறக்க முக்தி என்பார்கள். அங்கே இறப்பவர் காதில் சிவமந்திரம் ஓதி கங்கையில் சாம்பலை அர்ப்பணிக்கிறார்கள்.  அவ்வான் மாக்களை ஸ்ரீபார்வதி தேவியே மடியில் வைத்து முக்தி அளிப்பதாக ஐதீகம்.  சுடு காட்டில் அமைந்திருப்பது சிவபெருமானுக்கு மிகவும் விருப்பம் சுடுகாட்டுச் சாம்பலை பூசிக்கொள்வதும் எருக்கம் பூமாலை அணிந்து கொள்வதும் நாகத்தையும், புலித்தோலையும் ஆடையாக அணிந்தும் திரிசூலம் டமருகம், புலித்தோல் ஆடையுடன் திரிவது அவருக்கு மிகவும் இஷ்டம், அவர் கோபித்தால் உலகம் முழுவதும் வெந்து சாம்பாலகிவிடும்.

திரிபுரம் எரித்த செய்தி யாவரும் அறிந்ததே! இத்தகைய சிவபெருமான் – ஈரோட்டில் கங்கையிற் புனிதமாய் காவிரிக் கரையின் ஓரத்தில் மயான பூமியில் சுடுகாட்டில் அருள்மிகு சோழீஸ்வராக அமர்ந்து அருள்பாலிப்பதால் இத்தலம் காசிக்கு நிகரானதாகப் போற்றப் படுகிறது.

சூரிய பகவான் ஒளி அனுதினமும் காவிரியில் பட்டு பிரதி பலித்து நேராக ஜோதிவடிவில் சிவபெருமானை வணங்குவ தால் இங்கு வந்து சூரியனே தரிசிப்பதாக ஐதீகம்.  தரிசிப்போர்க்கு பித்ரு தோஷம் நீங்கும் சூரியன் பித்ருகாரகன் ஆனதால் இத்தலம் சிறப்புடையதாகிறது.

அமைவிடம் :
ஈரோடு மாவட்டம் நாமக்கல் மாவட்டம், இரண்டிற்கும் எல்லையாக காவிரியாறு அமைந்துள்ளது. அக்கரையில் பள்ளி பாளையம் இக்கரையில் கருங்கல் பாளையம், இடையில் காவிரிப்பாலம், காவிரிப் பாலம் கடந்து சிறிது தூரம் சென்றால் காவிரிக்கரை  மின் மயானம் – சுடுகாடு அடுத்து முஸ்லீம் கள் வணங்கும் தர்கா, அடுத்து சோழீஸ்வரர் ஆலயம் அடுத்து வீரமாத்தியம்மன் கோவில், ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனம் திருக்கோயில், கீழ்பகுதியில் ஆறு மேல் பகுதியில் பசுமை யான வயல் அதற்கு மேல் காளிங்கராயன் வாய்க்கால்.  மஞ்சள் நகரம் எனப்போற்றப் படும் ஈரோடு பழைமையான வரலாறு கொண்டது.

முற்காலத்தில் காவிரியின் கரையில் தாழம்பூக்காடு புதராக மண்டிக் கிடந்ததாம் அங்கு நாகங்கள் மிகுதியாக வாழ்ந்ததும் ஒரு சமயம் கொங்குச் சோழர் மரபில் வந்த சோழ மன்னர் குதிரை மீது இவ்வனத்திற்கு வருகை புரிந்த போது – காளிங்கராயனுக்கு காட்சி கொடுத்த நாகம் காளிங்கன் அஷ்ட நாகங் களில் ஒன்று வழி மறிக்க மன்னன் குதிரையில் இருந்து கீழே இறங்கி நாகத்தை வழிபட அது ஊர்ந்து சென்று ஒரு தாழம்புதர் மேல் நின்று ஆட அவ்விடத்தில் சுயம்பு சிவலிங்கம் இருக்கக் கண்ட சோழன் மிகவும் மனம் மகிழ்ந்து அதிசயமுற்று படைவீரர் களுடன் அவ்விடத்தை தூய்மை செய்து அங்கு கண்ட சிவலிங்க சொரூபத்திற்கு நாகாபரணம் சாற்றி அபிஷேகம் செய்து வழிபட்டர். அருகில் இரண்டு  சுவை கொடுக்கும் ஒரு மாமரத்தைக் கண்டு அதனையே ஸ்தலவிருஷ்சமாக எண்ணி வணங்கி வழிபாடு செய்து வரலானார்கள்.

பிற்காலத்தில் அருள்மிகு சுந்தராம்பிகை சமேத ஸ்ரீசோழீஸ்வரர் திருக்கோயில் விரிவு படுத்தப்பட்டு இன்று வெகு சிறப்பாக இந்து சமய அறநிலையத் துறையினரால் பராமரிக்கப் பட்டு வருகிறது.

கிழக்கு பார்த்த சிவன்

கிழக்கு வாயில்படி இறங்கினால் காவிரியில் கால் வைக்கலாம். சிவன் பெரிய ஆவுடை யாருடன் நாகாபரணம் அணிந்து காட்சி தருகிறார். அர்த்த மண்டபம் மஹா மண்டபம் கடந்த விரிவான ஆலய வளாகம் அதிகார நந்தி பலி பீடம் கொடிமரம்.

தெற்கு பார்த்த அம்பாள் அருள்மிகு சுந்தராம்பிகை அபயவரத ஹஸ்தங்களுடன் அருள்பாலிக்கின்றனர்.  வள்ளி தெய்வானை யுடன் ஸ்ரீசுப்ர மணியர் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

ஈசான்யத்தில் நவகிரஹங்கள் சனீஸ்வரர் மேற்கு பார்த்து தனிசந்நிதி, அவரை அடுத்து தெற்கு பார்த்து நான்கு கரங்களுடன் நாகத்தை பூநூலாக அணிந்து வாகனமான நாய் கிழக்கு முகத்தை திருப்பி பைரவரின் இடக்கையை தொட்ட வண்ணம் உள்ளது சிற்ப சாஸ்திரப்படி சிறப்பாகப் பேசப்படுகிறது.

மேற்கு வாயில் வழியாக உள்ளே நுழைந் தால் முன் கோபுர வாசலில் வரவேற்பவர் விநாயகரும் முருகனும், சற்று தெற்கு பாகம் வெளிப் பிரகாரத்தில் வில்வமரத்தடியில் சிவலிங்கம் அம்பாள் – ஏகாந்தமாக உள்ளனர்.  அருகே வன்னி மரத்தடியில் சதுர்முகப் பிரம்மா அமர்ந்துள்ளார்.

உள்சுற்றில் லக்ஷ்மி நாராயணன் நின்ற கோலம் சுற்றி அஷ்ட லக்ஷ்மிகள் எதிரே பெரிய திருவடி கருடாழ்வார் பின்புறம் சிறிய திருவடி அஞ்சன மைந்தன் அனுமன் கூப்பிய கரங்களுடன் அருள்பாலிக்கிறார்.

ஆலயச் சிறப்பு :

காவிரிக் கரையில் ருத்ரபூமி (மயானம்) அருகில் கோயில் கொண்டுள்ளது காசிக்கு நிகரான சேத்திரமாகப் பேசப்படுகிறது.
ஈஸ்வரனின் முகத்தில் இருந்து தோன்றிய கிரணங்களான இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திக்கு பாலகர்களும் சூரியன் சந்திரன் ஆகியோரையும் சேர்த்து 10 திக் பாலகர்களுக்கு தீபம் வைக்கப்படுகிறது.  அமாவாசை தோறும் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

இங்குள்ள சிவபெருமானை மூவிதழ் வில்வத்தால் அர்ச்சித்தால் பூர்வீக தோஷம் யாவும் தீரும். எம பயம் நீங்கும், பித்ரு சாபம் தீரும் ஊழ்வினை அகன்று உவப்பிலா ஆனந்தம் கிடைக்கும். குடும்ப மேன்மை வம்ச விருத்தி ஏற்படும்.  சத்ருக்கள் அடங்குவர் ருணம் தீரும்.  அமாவாசைதோறும்  இவ்வாலயத்தில் தீப வழிபாடு, பித்ரு தர்ப்பணம், தில ஹோமம் சிறப்பாகச் செய்யப்படுகிறது. ஆயுள் விருத்திக்கு ஆயுள் ஹோமம் சஷ்டி பூர்த்தி சதாபிஷேகம் விழாக்கள் நடைபெறுகின்றன.

அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு யாகம் பூஜை சிறப்பாக நடை பெறுகிறது. ஆலய ஆர்ச்சகர் ஸ்தானீகம் சிவ ஆகமகலா நிதி சிவநெறிச்செம்மல் சிவஸ்ரீ சுந்த ரேச சிவம் அவர்களும் அவருடைய குமாரர் சிவானந்த சிவமும் நமக்கு வரலாற்றுக் குறிப்புக்களைக் கூறி ‘பாம்பன் சுவாமிகள் மாத இதழுக்கும், சிறப்பாசிரியர் குடும்பம் மற்றும் நிர்வாகிகள் வாசகர் யாவருக்கும் உலக சேமத்திற்காகவும் சிறப்பு அர்ச்சனை வழிபாடு செய்து (பிரசாதம்) திருச்செல்வம் கொடுத்து வாழ்த்தினார்கள்.

மேலும் இங்கு சக்கரத்தாழ்வார், நடராஜர் ஆகியோருக்குத் தனி சன்னதி உள்ளது.   இங்கு சித்தர்கள் சூட்சும ரூபமாக உலாவுவதாக ஜதீகம். வாரா வாரம் சந்திரனுக்காக சந்திர ஓரையில் ருத்ராபிஷேகம்  11 கலசம் வைத்து இரவு 8.00 மணிக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.  சிறப்பு அன்னதானம் பிரசாதம் வழங்கப்படு கிறது.  எம பயம் நீக்கும் இத்தலம் நாளுக்கு நாள் பிரசித்தி பெற்று வருகிறது.  அறநிலைத் துறை செயல் அலுவலர் திரு. கனகராஜ் அவர் களின் முயற்சியால் ஆலயம் வளர்ச்சி பெற்று வருகிறது.

மேலும் இவ்வாலயத்திற்கு பள்ளிபாளை யத்தைச் சேர்ந்த நண்பர்கள் குழு உழவாரப் பணிகள் செய்து கட்டமுது வழங்கி நாவுக் கரசரின் நற்பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.  அவர்களும் எமது பாராட்டுக் களை தெரிவிக்கிறோம்.

‘பத்துத்  திசையும் பரமொடு தெய்வமுன்
டெத்திக் கிலரில்லை என்பதின் அமலர்க்கு
ஒத்துத் திருவடி நீழல் சரணெனத்
தத்தும் வினைக் கடல் சாராது காணுமே!”
– திருமூலர்

என்ற திருமூலரின் திருமந்திரத்தில் கூறியுள்ளபடி பத்து திசையும் தீபமேற்றி வழிபாடு செய்யும் பணி இங்குதான் நடக்கிறது.

காசிக்கு நிகரான இத்தலத்தைக் காண காவிரிக் கரைக்கு வாருங்கள் என வரவேற்று அழைக்கின்றேன். இவ்வாலயத்திற்கு என்னை அழைத்துச் சென்ற பள்ளிபாளையம்  சரவணன் புகைப்படம் எடுத்துக் கொடுத்த சபரி ரமேஷ்,  மகுடேஸ்வரன் ஆகியோருக்கு எனது நன்றி.

பாம்பன் சுவாமிகள் குழுவிற்கும் சிறப்பாசிரியருக்கும் மேலும் பணி சிறக்க வாழ்த்தி கட்டுரையை நிறைவு செய்வோம்.  சிவஸ்ரீ சுந்தரேச சிவம் அவர்களைத் தொடர்பு கொள்ள செல் : 98429 66262

சைவம் தழைக்க, திருநீற்றின் பெருமை விளங்க நமது குருநாதர் ஸ்ரீமத் பாம்பன் குமர குருதாசரின் குருவருளாலும், குமார பரமேஸ் வரின் திருவருளாலும், பாம்பன் சுவாமி மாத இதழ் மாதந்தோறும் புதிய பொலிவுடன் வருகிறது. சிறப்பாசிரியர் குடும்பத்திற்காகவும், ஸ்ரீலஸ்ரீ தேவி கருமாரி தாசரின் பணி சிறக்கவும் பிரார்த்திக்கிறேன்.

குகச்சிவமணி புலவர் இரா. சண்முகம்

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt