கோவையில் ஒரு காளகஸ்தி

முனைவர் சாந்தி விஸ்வநாதன், கோவை

‘வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க’ என்ற பண்டையப் பாட்டு வரிகளுக்கேற்ப, வேதாகமங்களின் வழியே சைவச் செந்நெறி, உலகுக்கு உய்யும் வழி காட்டுகிறது. தென்னாடுடைய சிவ பெருமானை எந்நாட்டவர்க்கும் உரியவராய் வைத்து அருளாளர்கள் வழிபட்டனர். உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண். நீர், தீ, வளி, வான் என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்பெறும். உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்பதைத் தொல்காப்பியர்-

நீலம்தீ நீர்வளி விகம்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
என மரவியலிற் கூறியுள்ளார். உயிர்களது உடம்புகள் ஐம்பூதங்களின் சேர்க்கையால் ஆனவையே. ‘அண்டத்திலுள்ளது பிண்டத்தில்’ என்பது பழமொழி. இக்கருத்தினை ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய ‘தகராலய ரகசியம் என்னும் அருட்நூலில் காணலாம்.

ஐம் பூதங்களைப் பற்றித் தெளிவாகவும், நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரி யோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஓர் தலத்தை ஏற்படுத்தினர். அவை மண்-பிருதிவித்தலம்-காஞ்சிபுரம், திருவாரூர்
நீர் – அப்புத்தலம் – திருவானைக்கா
தீ – தேயுத்தலம் – திருவண்ணாமலை
வளி – வாயுத்தலம் – திருக்காளத்தி
வான் – ஆகாயத்தலம் – சிதம்பரம்

சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயில்களை ஈச்சுரம் என்று அழைப்பது வழக்கம். ஈசன் எனப் போற்றப்படுகிறவன் உறையும் இடம் ஈச்சுரம். இந்த மண்ணில் ஈச்சுரங்கள் பல உண்டு. கொங்கு நாடு கலைச் சிறப்பை யும், வரலாற்றுப் பெருமையும் கொண்ட வள மான ஒரு பகுதி. கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் வட்டத்தில், காளம்பாளையம் என்னும் கிராமத்தில் இயற்கை வளம் சூழ அமைந்துள்ளது அருள்மிகு ஞானப்பூங்கோதை சமேத ஸ்ரீ காளத்தீஸ்வரர் ஆலயம். 1500 வருடங்களுக்கும் மேல் பழமைவாய்ந்த இத்தலத்து இறைவனையும், இறைவியையும், அகஸ்த்தியர், சித்தர்கள், சூரியன், கார் கோடகன் என்னும் நாகதேவதை, ராகு மற்றும் கேது பூஜித்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

கிழக்கு முகமாக காட்சி தருகிறார் அருள்மிகு காளத்தீஸ்வரர். அம்பாள் ஞானப்பூங்கோதை தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். அம்பாள் சந்நிதியின் அந்த மண்டபத்தின் மேல் கற்கலரில், சூரிய சந்திரரை பாம்பு விழுங்கும் காட்சியை காணலாம். இங்கு நவகிரகங்களுக்கு சந்நிதி கிடையாது. தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேசுவரர் மற்றும் பைரவருக்கு சந்நிதிகள் உள்ளது. சிவபெருமானுக்கு முன்பு ஓர் புரம் விநாயகப் பெருமானும், மற்றொரு புரம் முருகப் பெருமானும் காட்சி தருகின்றனர். மைசூர் சமஸ்தானத்தவர்களால் கட்டப்பட்ட இக்கோவில், இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.

“மூர்தே மனந்தஸ்ய வுஷம், சசிதர மகுடம் வாசுகி
கண்டபூவும் பஸ்மாங்கே க்ஷமாலாம் தவலிதசு மஹாபத்ம
யஞ்ஞோபவீதம் ஷப்ரானம் சங்கபாலம் குளிக்க பனத்ருடா
கார்கோடகம் தக்ஷ்கம் பரதாபியாம் பத்மநாகம் ரஜதகிரிமதா
நாகநாதம் பஜேஹம்,”

அனந்தம், வாஸுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், கிலிகன், பத்மன், மவுராபத்னன் ஆகிய எட்டு வகையான நாகங்களை ஆபரண மாக கொண்டவனும், நாகங்களாலும், ராகு கேதுவாலும் பூஜிக்கப்படும் நாக  நாத சுவாமியை நான் போற்றி வணங்குகின்றேன்.

ஒருவர் ஜாதகத்தில் ராகு, கேதுவின் பார்வை யாலும் திசைகளிலும், குழந்தை யின்மை, திருமணத்தடை, மற்றும் பல இன்னல்களுக்கு ஆளாக கூடும். அவ்வாறு ஜாதக ரீதியாக நடைபெறுகின்ற தோஷத்தவர்கள், ராகு வேளையில், நாக நாத சுவாமியை வழிபட்டு பரிகாரம் செய்ய நிவர்த்தி உண்டாகும். காளஹஸ்தி என்னும் தலத்தில் இன்றும் இவ்வாறு செய்து வருவதை நாம் அறிவோம். அது போல் கார்கோடகனாலும் ராகு, கேதுவாலும் பூஜிக்கப்பட்ட இத்தலத்திலும் பலன் பரிகாரம் செய்து நற்பயன்களை பெறுகின்ற னர். இவ்வாலயத்தில் சிவராத்திரி அன்று சூரிய ஒளி நேராக லிங்கத்தின் மேல் விழுவது, மேலும் ஓர் சிறப்பாகும். ஆலய திருப்பணி சம்பந்தமாக அர்ச்சகர் கூறியது:-

சிதிலமடைந்து இருக்கும் இக்கோவிலை புதுப்பிக்க எண்ணிய குருக்கள், ஒத்துழைப் பின்மை காரணமாக ஆலய பொறுப்பினை ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்த தாக கூறினார். சாவியை சிவப்பெருமானிடம் வைத்து, உத்தரவு கேட்டு மனமுருகி வேண்டி நின்ற போது வெள்ளை பூ கிடைக்கப் பெற்றதாகவும், மேலும் லிங்கத்தின் பின்புறம் இருந்து 10அடி நீளமுள்ள சர்பம் ஒன்று வெளியேறி சென்றதாகவும் கூறினார். இக்காட்சியைக் கண்டு, மெய் சிலிர்த்து நின்ற அவர், இத்தலத்தில் ஏதோ விசேடம் உள்ளதை உணர்ந்து பொறுப்பை ஒப்படைக்காமல் விட்டு விட்டதாக கூறினார். இந்நிகழ்ச்சிக்கு பின் ஊர்மக்களும் அரசாங்கமும் முன்வந்து திருப்பணிக்கு உதவி புரிய முடிவு செய்துள்ளதாக கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு பின் கோவிலும் நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியும் உள்ளதாக தெரிவித்தார்கள்.

ராகு கேதுவினால், நடைபெறுகின்ற தோஷங்களுக்கு பரிகார ஸ்தலமாக விளங்கும் இவ்வாலயம், ஆந்திர மாநிலம் காளகஸ்திக்கு ஒப்பானதாக, கொங்கு நாட்டில் உள்ளது என்றால் அது மிகையாகாது, நாமும், ஞானபூங்கோதை சமேத ஸ்ரீகாளத்தீஸ்வர சுவாமியை வணங்கி அருள் பெற்று வாழ்வில் வளம் பல பெறுவோம்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt