சென்னையில் வைத்தீஸ்வரம்

பாடல் பெற்றதும் பிணி களை தீர்க்கவல்லதுமான திருத்தலம் வைத்தீஸ்வரன் திருக்கோவில். இதே போன்ற மகிமை உடைய ஒரு கோவில் சென்னையில் உள்ளது. அது தான் பூவிருந்தவல்லி அருள் மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாதசுவாமி திருக் கோவிலாகும். இத்தலத்தின் சிறப்புகளைக் காண்போம்.
பூக்களின் வண்ணமும் வடி வும், மணமும் இனிய தேனின் சுவையும் தேனிக்களை மட்டு மல்ல, தேவாதி தேவர்களையும் கவர்ந்திழுக்கும். மானுடர் களை மட்டும் விட்டு வைக் குமா என்ன?
மக்கள் மலர்களால் மனம் கவரப்பட்டு இப்பைந்தமிழ் நாட்டின் பல ஊர்களுக்குப் ‘பூ’ என்பதனுடன் தொடர்புபடுத்திப்  பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர்.
பூந்தோட்டம், பூம்பொழில், பூம்பறை, சிந்து பூந்துறை, பூவணம், பூந்துருத்தி, பூங்கா வனம், புஷ்பவனம், பூவிழுந்த நல்லூர், பூஞ்சோலே, பூவாளூர் மற்றும் பூவிருந்தவல்லி என்று பல திருவூர்கள் பூத்துக் குலுங்கியவண்ணம் உள்ளன.
‘பூவெனப்படுவது பொறி வாழ் பூவே’ என்றும்
‘பூவினுக்கருங்கலம் பொங்குதாமரை’
என்றும் அருளாளர்களால் போற்றப்பெறும் மலர் தாமரை. பூவென்றாலே அது தாமரை மலரைக் குறிக்கும்.
நான்முகம் தாமரைத் தவிசில் வீற்றிருக்கிறார் என்றால் அவர் தேவி கலைவாணியாம் அன்னை சரசுவதி வெண்டாமரை மலரில் வீற்றிருக்கிறாள்.
“வெள்ளை கமலத்தில் வீற்றிருப்பாள்”
“வெண்டாமரைக் கன்றி நின்பதம் தாங்க
என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாது கொலோ”
என்று அருளாளர்கள் பாடிப் பரவும் அன்னை சகலகலாவல்லி வெண் தாமரைப் பூவில் அமர்ந்தரு ளும் வல்லி அன்றோ. பூ இருந்த வல்லி வழிபாடு செய்து அருளரசு ஓச்சிய இடம் ‘பூவிருந்தவல்லி!’
தாமரைக்கண்ணன் என்பார் பொது மறை தந்த வள்ளுவர். கமலக்கண்ண னாம் திருமாலின் இதயக் கமலம் கவர்ந்த தேவி திரு மகள் என்னும் மகாலக்ஷ்மி விரும்பி அமர்ந்தமலர் செந் தாமரை. கமலமணி என் பார் அருணகிரி வள்ளல். செந்தாமரைப்பூ இருந்த வல்லி இலட்சுமி தன்னருள் அரசோச்சி உறையும் இடம் ‘பூவிருந்தவல்லி’.
கலைமகளும், திருமகளும் கவினார் மலைமகளும் நல்கும் கல்வி, செல்வம், வீரம் முதலான சகலசெல்வ யோகப் பெருநலங்களும், நிறைந்த ஊர் பூவிருந்த வல்லி. ‘பூவை’ எனச் சுருங் கச்சொல்வதும் உண்டு. ‘பூந்தண்மலி’ என்ற பெயரும் பழமையான கல்வெட்டுகளில் விளங்கக் காண் கிறோம். பூந்தமல்லி, பூனமல்லி, என வழக்கா றில் சொல்வதும் எழுதுவதும் தவறு. பழந் தமிழ்ப் பெயர்களைப் பாங்குடன் சொல்வதே பண்பாடு. கொச்சைப்படுத்திக் கூறுவது மந்திர மாறுபாடு போல்வதாகும்.
“சான்றோர் உடைத்து! தொண்டை நாடு” என்று ஔவைப்பாட்டி பாராட்டும் தொண்டை நாட்டின் எல்லைகள் வருமாறு: மேற்கில் பவள மலை, கிழக்கில் வங்காள விரிகுடா, தெற்கில் பினாகினி நதி, வடக்கில் திருவேங்கடம். தற்போது வடக்கில் தணிகையும், தணிகையைச் சார்ந்த பகுதிகளும் எல்லைகளாக உள்ளன.
தொண்டை நாட்டில் உள்ள 24 கோட்டங் களுள் ஒன்று புலியூர்க்கோட்டம், அதன் கண் விளங்கும் நாடு மாங்காடு. அன்னை தபசு காமாட்சி அருளர சோச்சும் அற்புதத் தலத்தை அடுத்து அமைவது பூவிருந்தவல்லி. குன்றத்தூர் கோவூர், திருமழிசை, திருவேற்காடு முதலான தலங்கள் சூழ நடுவணதாக அமைந்த மாட்சி மிக்க திருவூர் பூவிருந்தவல்லி.
“பூவிருந்தவல்லி என்பது மலர்க்கொடி என்று பொருள்படும். இது கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்னும் பூ வகைகள் நான்கனுள் கொடிப்பூ வகையை உணர்த்தி, பின் அக்கொடிப்பூ வகைகளில் சிறந்த ‘மௌவல்’ என்னும் மல்லிகைக்காகி அதன் பின் அம்மலர்கள் பூத்துக் குலுங்கும் ஊருக்குப் பெயராயிற்று” என்று கூறுவாரும் உளர்.
பூவிருந்தவல்லி என்பது பூவை என மரூஉப்பெயராகவும் வழங்கப்பெறுகின்றது. இந்நகரின் புறம் சூழ்ந்த நிலப்பரப்பெல்லாம் செம்பரம்பாக்கம் ஏரி என்னும் பெரியதொரு நீர் நிலைப்பாய்ச்சலால் செந்நெல் வயல்களும், செழுமலர் ஓடைகளும்; கன்னல் கழனிகளும்; கதலித் (வாழை) தோட்டங்களும்; வெற்றிலைக் கொடிக்கால்களும் விரிமலர்ச் சோலைகளு மாகக் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளித் திருந்தது ஒரு காலம். இந்நாளில் நீர்வளம் சுருங்கவே இக்காட்சிகள் காண்பதற்கு அரிதாகி வருகின்றன. ஒரு காலத்தில் மல்லிகை மலர்த் தோட்டங்கள் பல இவ்வூரின் கண் விளங்கி யிருந்தமை யாவரும் அறிவர்.
மாமன்னர்கள் பலரது நல்லாட்சியின் கீழ் விளங்கிய பூவிருந்தவல்லி இப்பொழுது காஞ்சி முதலான ஊர்களுக்குச் செல்லும் நெடுஞ் சாலையின் கண் சென்னையினின்று மேற்கே 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கல்வி நிலையங்களும், கடைவீதிகளும், தொழிற்கூடங் களும், தொன்மையான குடியிருப்புகளும் நிறைந்த இவ்வூரில் கோயில்களும் பல உள்ளன.
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று”, “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண் டாம்” “திருக்கோயில் இல்லாத திருவிலூரும்” என்றெல்லாம் ஆன்றோர்கள் திருக்கோயிலின் இன்றியமையாமையைக் குறித்து அழகு தமிழில் அற்புதமாகக் கூறியுள்ளனர்.
“ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே” என்பது சிவஞானபோதம்.
பூவிருந்தவல்லித் திருநகரில் உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் மகுடம் வைத்தாற்போல் திகழ்வது அருள்மிகு தையல்நாயகி அம்மை உடனுறை அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயிலாகும்.
பூவிருந்தவல்லி நகரின் மையமாக வரும் பெங்களூர் நெடுஞ்சாலையின் தென்பாலதாக அமைந்துள்ள இத்திருக்கோயிலின் இராஜ கோபுரம் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. அழ கிய பல சிற்ப வேலைப்பாடுகள் நுழை வாயில் கற்பலகைகளில் விளங்கக் காணலாம். 3 அடுக்குகளுடன் கூடியது இந்த இராஜ கோபுரம்.
திருமுல்லைவாயில், திருப்பாசூர், திரு மழிசை, திருக்காரணீச்சரம் போன்ற ஆலயங் களில் இராஜகோபுரம் தெற்கு நோக்கியதாக இருக்கும். காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் இராஜகோபுரம் கூட அப்படித்தான் இருக்கும். கிழக்கு, மேற்கு நோக்கியுள்ள இராஜ கோபுரங்கள், பல.
பூவிருந்தவல்லி வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் தனித்தன்மையதாகப் பெரிய இராசகோபுரம் வடக்கு நோக்கி அமைந்திருப் பது ஒரு தனிச் சிறப்பாக உள்ளது. வடக்கு குபேரனுக்கு உரிய திசை குபேர சம்பத்துடன் வாழ அருள் புரிபவர் வைத்தியநாதர் என்ப தனை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
நாற்புறமும் அழகிய திருமதில்கள் அணி செய்கின்றன. கிழக்கு வாயிலில் சிறிய அளவில் ஒரு ராஜகோபுரம் உள்ளது. எதிரில் அருமை யும், பெருமையும் வாய்ந்த தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. இதனை மங்கள தீர்த்தம் என்று சொல்லுவர்.  குளத்தின் கீழ்க்கரையில் பாணலிங்கம் ஒன்று உள்ளது. அதனை அடுத்து வேம்படி நீழலில் அழகிய பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் ஆலயம் ஒன்றும் விளங்கக் காணலாம். குளத்தின் வடமேற்கு மூலையில் பழமையான விநாயகப்பெருமான் அரசமர நீழலில் எழுந்தருளி உள்ளார். இவ்வரசமரத்தில் சிவமுனி ஒருவர் உறைவதாகக் கூறுவர். நோய்நொடி பிணி பீடைகள் அகல மக்கள் நீராடும் திருக்குளம் இது. தேவேந்திரன் தமக்குற்ற நோய் நீங்க இத்திருக்குளத்தில் நீராடினான் என்பது வரலாறு.
கண்பார்வையற்ற தண்டியடிகள் திருவாரூர்க் கமலாலயத் திருக்குளத்தில் தூர் எடுத்துத் திருப்பணி செய்து கண்ணொளி பெற்றார் என்று பெரியபுராணத்தில் காண்கிறோம்.
நுழைவாயிலில் நுழைந்தவுடனே தென்படு வது கொடிமரம், பழைய கொடிமரம் பழுதுற்ற தால் புதிய கொடிமரம் ஒன்று சிறப்பான முறையில் அமைக்கப்பெற்றுள்ளது. செப்புக் கலசங்களுடன் அணி செயும் கொடிமரம் செம்மாந்து நிற்கக் காண்கிறோம். மாடவீதி ஒரு பிரகாரம். அடு¢¢த்து ஆலயத்துள் 2 ஆவதாக விளங்குவது கொடிமரம், நந்தி, பத்ரலிங்கம் என்னும் பலிபீடம் விளங்கும் இப்பிரகாரம். நான்கு கால்களுடன் கூடிய மண்டபம், திரு மடைப்பள்ளி, திருநந்தவனம், வாகன மண்டபம், அரசடி நாகத்தம்பிரான் மேடை ஆலய அலுவல கம் என்று அணிசெய இப்பிரகாரம் விளங்கு கிறது. தென் கயிலாயம், வடகயிலாயம் போன்று காட்சி பகுதியில் ஒரு சிவலிங்கத் திருமேனியும் வடக்குப் பகுதியில் ஒரு சிவலிங்கத் திரு மேனியும் பாணவடிவில் வன்னியும், வேங்கையும் வளர்ந்தோங்கி உள்ளன.
திருக்கோயிலின் உள் ஆவரணத்திற்கு முன்பாக அழகியதோர் முகப்பு மண்டபம் உள்ளது. கருங்கற்றூண்கள் தாங்கக் கற்பலகைப் பாறைகள் மேலே பாவப்பெற்று விளங்குகிறது. இந்த மண்டபம். இதனைக் கல்யாண மண்டபம் என்பர்.
விழாக்காலங்களில் சுவாமிகள் எழுந்தருள அழகிய மேடை ஒன்றும் இங்கே அமைக்கப் பெற்றுள்ளது. இங்குதான் சனிபகவான் கிழக்கு நோக்கித் திருநள்ளாறு திருத்தலம் போன்றே எழுந்தருளியுள்ளார். இறைவனின் திருமுன்னர் செல்ல இம்மண்டபத்தின் நுழைவாயிலில் நுழையும் முன்பு தொன்மை வாய்ந்த துவார கணபதியும், திருமுருகப் பெருமானும் எழுந்தருளி உள்ள காட்சியைக் காணலாம். அழகிய கருங்கல் வேலைப்பாடுகளுடன் கூடிய இம்முகப்புத் திருவாயிலைக் கடந்தவுடன் 3-வது திருச்சுற்று அமைகிறது. இவ்வாயிலின் இருபுறமும் கல்வெட்டுகள் உள்ளன.
3-ஆவது திருச்சுற்றின் தொடக்கத்தில் சக சிவசூரியன் திருமேனியும், அதனை அடுத்து நவகோள்களும் (நவகிரகங்கள்) உள்ளனர். மண்டபத்தூண் ஒன்றில் கர்லாக்கட்டை சித்தர் திருவுருவம் உள்ளது. அதனை அடுத்து அம்மையப்பபிள்ளையாம் சோமாஸ்கந்தமூர்த்தி மற்றும் உலாத்திருமேனிகள் அமைந்த சந்நிதி உள்ளது. மேற்குப் பகுதியில் வீரபத்திரர், விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, நந்தி, கும்பேசுவரர் முதலிய சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. பூ இருந்த வல்லியாம் அன்னை திருமகள், ஆதிசங்கரர் முதலிய திருமேனிகளும் உள்ளன. அதனை அடுத்து சுவாமி, அம்பாள், முருகனுக்குரிய சக்கரங்கள் கற்பலகைகளில் வடிவமைக்கப்பெற்றுப் பூஜிக்கப்பெறுகின்றன. இந்த யந்திரங்களை ஆதிசங்கரர் இங்கே நிறுவியதாகக் கூறுவர்.
ஆலயத்தின் வடமேற்குப் பகுதியில் வேட மங்கை, வேழமங்கை என்று போற்றபெறும் வள்ளி தெய்வயானையுடன் கூடிய முத்துக் குமாரசுவாமி தனிக்கோயில் கொண்டு விளங்குகிறார். வடகிழக்குப் பகுதியில் அம்பலக்கூத்தனாம் சிவகாமசுந்தரி யம்மை உடனாய நடராஜப்பெருமான் சபை உள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மணிவாசகப் பெருமான் திருமேனிகள் தனி ஒரு மேடையில் அமைக்கப் பெற்றுள்ளமை காணலாம். அருகில் பைரவருடைய திருமேனியும் உள்ளது. சந்திரன் தனியே ஒரு மாடத்தில் எழுந்தருளி யுள்ளார்.
அருள்மிகு வைத்தியநாத சுவாமியினுடைய திருமுன்னர் தருமநந்தியும், பத்திரலிங்கமும் உள்ளன. நுழைவாயிலின் வலதுபுறம் மோதகம் தாங்கிய மூர்த்தியாம் மூத்த விநாயகப்பெரு மான் அழகுபிள்ளையாராக அருள்பாலிக்கின்றார்.
இடதுபுறம் தாளிப்பானையின் கீழ் சிவ லிங்கமும் திருவடிகளும் உள்ளன. குமரப்பெருமானும் அங்காரகனும் பூசித்த திருத்தல ஐதீகமாக இத்திருவங்களை வழிபடுவோர் கருதுகின்றனர். பூண்டி, முண்டி என அழைக்கப்பெறும் துவாரபாலகர்கள் இருவரது கம்பீரமான திருமேனிகளும் இவ்வாயிலின் முகப்பில் அணி செய்கின்றன.
அடுத்து விளங்குவது அர்த்த மண்டபம், அதனை அடுத்து சுவாமி எழுந்தருளியுள்ள கருவறை உள்ளது மிக அற்புதமான கற்றளி கண்கவரும் வனப்பினது.
கருவறை என்கிற கர்ப்பகிரகம் சதுரவடிவில் அமைந்துள்ளது. கூடக்கோயில் வகையைச் சார்ந்த ஆலயமாக இருப்பினும் கருவறை அமைந்துள்ள பகுதி சற்று உயரமாக விளங்குகிறது. அழகிய திரிதள விமானத்தின் கீழதாக அமைந்துள்ள கருவறை பல தெய்வீக மகிமைகளைத் தன்னகத்துட் கொண்டு வசீகரிப்பதாய் உள்ளது. யாவற்றிற்கும் மகுடம் வைத்திருப்பது போல நடுநாயகமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார் அருள்மிகு வைத்தியநாதசுவாமி.
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாம் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்” என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான். சகல மூர்த்தங்களையும்  தன்னகத்துட் கொண்டு விளங்குவது சிவலிங்கத்திருமேனி. சிவலிங்க வழிபாட்டிற்கு நிகராகப் பிறிது ஒரு வழிபாடு உலகில் இல்லை.
மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நகரங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிவலிங்க வழிபாடு நிலவியதை வரலாறு உணர்த்தும். உலகின் பல்வேறு பகுதிகளில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதா கவே சிவலிங்க வழிபாடு நிலவியிருந்தமையை வரலாற்றின் மூலம் அறிகிறோம்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் பூசித்த மூர்த்தி சிவலிங்கமன்றி வேறு ஒன்று உளதோ!
ஈர்த்து என்னை யாட்கொண்ட எந்தை சிவ பெருமானின் அருட்கலைகள் எக்காலத்திலும் நீங்காது உறைவது சிவலிங்கத் திருமேனிகளில் தான். தேவேந்திரன் தன் உடற்குற்ற பிணியை நீக்கிக் கொள்ள வேண்டி இந்நகரத்திற்கு வந்து சிவலிங்கத் திருமேனி ஒன்றைத் ஸ்தாபித்து நித்திய வழிபாடாற்றி தவம் செய்தான்.
“இங்குற்றேன்” என்று இலிங்கத்தே தோன்றி னான் பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தி சிவபெருமான். கண்டகண்கள் புனல்பாய அழுது தொழுது அரற்றி நெக்குருகினான் இந்திரன். நோய் நீங்கியது. சகல சௌபாக்கியங்களையும் அருளினார் சுவாமி. இந்திரனுடைய வேண்டுகோளின்படி “எக்காலத்தும் நீங்காது இத்திருமேனியிலேயே எழுந்தருளியிருந்து உம்மைத் தொழுது வணங்குவோரது துயர்களைந்தருள வேண்டும்” என்று வேண்டி நின்றான் தேவர்கள் தலைவன். அன்று முதல் ‘வினை தீர்த்தான்’ என்ற திருப் பெயர் வைத்தியநாதசுவாமிக்கு விளங்கலா யிற்று என்று புராணம் புகல்வது அறியலாம்.
துவாதச ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்று வைத்தியநாதம். இத்தலம் மகாராஷ்டிர மாநிலத்தில் சிதாபுரம் பகுதியில் உள்ளது. இத்திருத்தலத்தையே பரலி வைத்தியநாதம் என்பர்.
சோழநாட்டுத் திருத்தலங்களில் ஒன்றான புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) எவ்வாறு அங்காரகன் (செவ்வாய்) முதலியோர் பூசித்த தலமாக விளங்குகின்றதோ அவ்வாறே  சொல்லொணா மகிமைகள் பலவும் தாங்கி விளங்குகின்றது பூவிருந்தவல்லி அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில். அதி அற்புதமான மகிமைகள் நிறைந்த சிவலிங்கத் திருமேனி தாங்கி அருள்மிகு வைத்தியநாத சுவாமி விளங்குகின்றார். கிரகதோஷங்கள் நீங்கவும், நோய் நொடிகளிலிருந்து விடுபடவும் மற்றும் வேண்டுதல்கள் பல நிறைவேறவும் வழிபட வேண்டிய மூர்த்தி இத்திருத்தல இறைவர். சதுரமான ஆவுடையார் வசீகரமான பாணம் கம்பீரமான திருத்தோற்றம் காண்பார் நெஞ்சைக் களிப்புறச் செய்யும்.
அடுத்து விளங்குவது அருள்மிகு தையல் நாயகியம்மை ஆலயம். தெற்கு நோக்கிய திருக்கோலம். அம்மைக்கு நேர் எதிரில் அம்மை சந்தானத் திருவாயில் ஒன்றும் உள்ளது. தென்னன் திருவாசல் போன்றது. தென் பொதிகைத் தென்றல் தவழ்ந்து வந்து அம்மை தளிரடிகளை வருடித் தொழும் பாங்கில் உள்ளது ஆலய அமைப்பு. மண்டப மேல் விதானத்தில் வேறு எங்கும் காண்டற்கரிய வகையில் சக்தி ஆயுதம், வஜ்ஜிர ஆயுதம் விளங்கக் காணலாம். இருபுறமும் வாயிலில் துவார பாலகி அம்மன்கள் உள்ளனர். அர்த்த மண்டபத்தை அடுத்து ஆலயக் கருவறையில் அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாம் அருள்மிகு தையல்நாயகி அம்மன் கம்பீரமான தோற்றத்தில் அருள் பெருகு திருமேனி தாங்கி நின்ற நிலையில் உள்ளார். நாற்கரங்களுடன் கூடிய மூர்த்தம். அபய வரதம் தாங்கி அஞ்சேல் என்று அருள் பாலிக்கின்ற அன்னையைக் கண்டு அகமுருகிப் போற்றி மகிழலாம்.
ஆகமங்களில் சொல்லப் பெற்றுள்ள அமைப்பில் அனைத்து பரிவார மூர்த்திகளும் சூழ அமைந்துள்ள அற்புதமான திருக்கோயில் பூவிருந்தவல்லி அருள்மிகு தையல்நாயகி அம்மை உடனுறை அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில். கிடைத்தற்கு அரிதாகிய மானிடப் பிறவி பெற்ற மக்கள் அவசியம் தொழவேண்டிய அரனார் ஆலயங்களில் ஒன்று இத்திருக்கோயில். இத்திருக்கோயின் கண் விளங்கும் சிற்பங்கள், கல்வெட்டுச் செய்திகள், திருவிழாக்கள், சூரியபூஜை முதலிய பல அற்புதமான செய்திகளை இந்நூலின் கண் ஆங்காங்கே கண்டு மகிழ்க!

புலவர் எம்.கே.பிரபாகாரமூர்த்தி
குன்றத்தூர்

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt