தவம் செய்த தவம்

தவம் செய்த தவம்

கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் கந்தவேள் எனப்படும் செந்தில் முருகனே-

செந்தில் முருகனைச் சிந்தையில் பரவி செகத்தில் வாழ்வோர்
அந்தமில் வீடு பேற்றை அடைவர்.

அண்டங்களைக் காக்கும் ஆண்டவனை இதயப் பிண்டத்தில் இருத்தி வழிபட்டோர் பெருமைக்கு எல்லை ஏது? அதனாலன்றோ கல்வியிற் சிறந்த ஒளவை மூதாட்டி

“தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே” என்று வியந்துரைத்தாள். அடியார்கள் வானில் அரசாள்வர் என ஆணையிட்டுரைத்தவர் அன்று திருஞான சம்பந்தர். அப்படிப்பட்ட அடியவர்கள் வரலாற்றை எல்லாம் அறிந்து தெரிந்து உணர்ந்து நெகிழ்ந்து வணங்கி வழிபடுவோர் மண்ணில் விண்ணை மலரச் செய்யும் ஆற்றல் பெறுவர் என்பது சத்தியம்.

“குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்றார் அருணகிரிநாதர்-

“ஞான உபதேசம் புரிந்திடுதல் ஒன் வேற்கையான்” என்றார் மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். “குமரகுரு தானே கொடுக்கும் நலங்கால்” என்றார் குருமகாசக்ரவர்த்தி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் – குமரகுருவாகிய ஆறுமுகச்சிவனின் உபதேசம் பெற்று அவன் தாசன் எனத் தன்னை தவத்தீயால் ஆகுதி செய்து கொண்டு சிவப் பேரொளியாய் செகத்தில் உறைந்தார், மறைந்தார், நிறைந்தார் – அவர் யார்?

தவம் செய்த தவத்தாலே தோன்றிய அவர்தான் திருத்தேவையம்பதி எனப்படும் இராமேசுவரத் தீவில் 1850ல் சிவாலயத்திருப்பணி பூண்டொழுகிய சாத்தப்பபிள்ளைக்கும், செங்கமலத் தாய்க்கும் திருமகனாய் அவதரித்த அப்பாவு! ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒருவனின் அருள் பெற்று ஒரு தெய்வ வழிபாட்டு மாட்சியை இத்தமிழ் உலகுக்கு
உணர்த்தியவர். எப்பாவையும் தப்பாது பாடி அதை எந்தை முருகனின் திருப்பாதங்களில் சூடி அவன் அருளென்னும் ஆழியிலே ஆடி அருந்தவத்தால் வாடி நாமெல்லாம் நலம் பெறுவதற்கு விவேகர்வாழ் திருவான்மியூரில் கூடிக் குளிர்ந்த மிளிர்ந்த பொலிந்த குருமகாசக்ரவர்த்தியாம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் பூர்வாசிரமப் பெயரே “அப்பாவு” என்பதாம்- சுவாமிகள் முனியாண்டியாபிள்ளை எனும் தமிழாசிரியரிடம் தமிழ் கற்றார்கள்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt