திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர்

– குகச்சிவமணி புலவர் இரா.சண்முகம்

வேத நெறி தழைத்தோங்க, மிகுசைவத் துறைவிளங்க பூத பரம்பரை பொலிய,  புனித வாய் மலர்ந்தருளிய  திருஞான சம்பந்தப் பெருமானும், அலகில் கலைத்துறை  தழைப்ப, அருந்தவத்தோர் நெறிவாழ, உலகில் வரும்  இருள் நீக்கி ஒளி விளங்கு கதர்போல் மலரும் திருநாவுக்கரசர் பெருமானும், தேன்கலந்து பால்கலந்து  செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, ஊன் கலந்து, உயிர் கலந்து  உவட்டாமல் இனிக்கும் ஒருவாசகமாம், திரு வாசகத்தை அருளிய மணிவாசகப் பெருமானும், வாக்கிற் கோர் அருணகிரியும், பாரனைத்தும் பொய் யடா, மெய்ப்பொருளாம் பரம்பொருளை ஒன்றையே நாடுக!  என்று இறைவனை நாடிய பட்டினத்தாரும் பாராய்த்துறை மேவிய பரமனின் பெருமையினைப் பாடிச் சிறப்பித்துள்ள திருத்தலம் “திருப்பராய்த் துறை”  என்னும் திவ்ய ஸ்தலம் ஆகும்.

தலச்சிறப்பு : திருச்சி – கரூர்  தேசிய நெடுஞ் சாலை மார்க்கத்தில் திருச்சியிலிருந்து 16 கி.மீ. தூரத்திலும் கரூரில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள  ஊர் “திருப்பராய்த்துறை”.  இங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கும் இறைவன் ஸ்ரீ தாருகாவனேசுவரர் செல்வர், பராய்த்துறை நாதர்.  இறைவி. அருள்மிகு பசும் பொன் மயிலாம்பிகை, ஹேமவர்ணாம்பிகை.

பொன்கொழிக்கும் பொன்னி ஆறாம் காவிரியின் தென்கரையில் உள்ள திருத் தலங்களுள் சிறந்து  விளங்கும் புண்ணிய சேஷத்ரம் பராய்மரங்கள் நிறைந்து விளங்கும் தலம் ஆனதால் “திருப்பராய்த்துறை” என அழைக்கப்படுகிறது. வடமொழியில் “தாருகா” வனம் எனப்பெயர் பெறும்.  கோவிலின் கிழக்கில் சுவாமி சித்பவானந் தரின் இராம கிருஷ்ண தபோவனம் உள்ளது. மேற்கில் இராமகிருஷ்ண குடில் உள்ளது.

தோல் நோய் உடையவர்கள் ‘பராய்” மரத்தின் பட்டையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்துப் பூசினால் நோய் நீக்கம் பெறும்.  துறை என்னும் பெயரில் அமைந்துள்ள பதின் மூன்று தலங்களுள் இது மிகவும் சிறப்பான தாகக் கூறப்படுகிறது.

புராண வரலாறு :

சிவபெருமான் பிட்சாடனராகச் சென்று தாருகாவனத்து முனிவரின் செருக்கை அடக்கி, அருள்புரிந்த தலம் தாருகாவனம் என்னும் திருப்பராய்த்துறையாகும்.

முன்னொரு காலத்தில் தாருக முனி வர்கள் தாம் செய்யும் கருமமே வீடு பேற்றை நல்கவல்லது என்று கூறி சிவபெருமானை மதியாது வேள்விகள் இயற்றி வந்தனர்.  தாருக முனிவர்களின் ஆணவத்தை அடக்க வும், முனிபத்தினிகளின் பக்தியை தகர்க்கவும் சிவபெருமான் பிச்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் திருஅவதாரம் செய்தனர்.

மோகினியின் அழகில் மயங்கிய முனி வர்கள் அனைவரும் காமவேட்கை கொண்டு விரத நோன்பை கைவிட்ட னர்.  மோகினியின் பின்னே ஊன் உறக்கமின்றி அலைந்தனர்.

வேழம் உண்ட விளாங்கனியாக உணர்வு இழந்தனர். சீலம் அழிந்து செழுஞ்சுடர் மலர்ச்சி கண்ட ஓலம்ஆர் விட்டில் என்ன மோகினியைச் சூழ்ந்தனர்.

பரமனின் பிச்சாடணர் வடிவம் கண்ட ரிஷி பத்தினிகள் காமன் வலையில் சிக்கி நிலை இழந்தனர்.  உள்நிகழ் உணர்வு மாழ்க, உயிர் பதை பதைத்துச் சோர அண்ணல் மீது காதல் வயப்பட்டனர். ஆடையும், வளையலும் நழுவின.  நாணமும்கற்பும் சிதைந்தன. மயக்கம் கொண்டு பிட்சாடனரைத் தொடர்ந்து சென்றனர்.

மோகினியின் வடிவழகும், பிட்சாடனரின் உருவழகும், தம்மையும், தம் பத்தினிமார் களின் பெருமையையும் பீடழிக்கச் செய்தது கண்டமுனிவர்கள் சினம் கொண் டனர்.  அபிசார ஹோமம் செய்து புலியை சிவபெரு மான்மீது ஏவினர்.  புலியைப் பிடித்து தோலை உரித்து ஆடையாக அணிந்தார்.  பின்னர் ஏவிய முத்தலைச் சூலத்தைப் படை யாக ஏந்தினார். மான் கன்றை இடக்கரத் தில் தாங்கினார்.  பாம்புகளை அணிகலனாக அணிந்து கொண்டார்.  பூத கணங்களைச் சேனையாக ஆக்கிக் கொண்டார்.  உடுக்கையை கரத்தில் தாங்கி முயலகன் என்னும் அபஸ் மாரத்தை தம் திருவடிக் கீழ் அமுக்கி அதன் முதுகின் மேல் ஏறிக் கால் ஊன்றி நின்றார்.

பரமனின் மேலாம் சக்தியை அறிந்து கொண்ட முனிவர்கள் ஆணவம் நீங்கப் பெற்றனர்.  சிவனாரைப் பணிந்தனர்.  எம் பெரும் பிழைகளை நாதா! நீ பொறுத்தி! என்று திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்.
தன்னை அடைந்தோர்க்கும், அடையா தோர்க்கும் அருள்பாலிக்கும் அண்ணல் ‘நந்தம் செந்நெறி ஒழுகித் தீய மறத்தினை அகற்றி மேலை மாதவம் புரிவீர்”! என்று கூறி அருள்புரிந்தார். அம்முனிவர்கள் தவங்கிடந்து வழிபட்ட தலமே ‘தாருகா வனம்” எனும் திருப்பராய்த்துறையாகும்.

கோவில் அமைப்பு :

பராய்த்துறை நாதர் எழுந்தருளியுள்ள கோயிலின் உள்கோபுரம் ஏழுநிலைகளைக் கொண்டுள்ளது.  வலப்புறம் தீர்த்தக்குளம் உள்ளது. இடப்புறம் உள்ள மண்டபத்தில் விவேகானந்தர் தொடக்கப்பள்ளி உள்ளது.  செப்புக்கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தியும் ஒரே மண்டபத்தில் உள்ளது.  மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் உள்ளது. உள்பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் ஸப்த கன்னியர் அறு பத்துமூவர், சோமாஸ்கந்தர், பஞ்சபூத  லிங்கங்கள்.

பிட்சாடனர், பிரம்மா, துர்க்கை, பன்னிரு கரங்களுடன் ஷண்முகர் ஆகியோர் உள் ளனர். நவக்கிரஹங்களுள் சனீஸ்வரர்க்கு மட்டும் வாகனமாகக் காகம் உள்ளது.  தட்சிணாமூர்த்தி சந்நிதி தனி விமானத்துடன் சிங்கங்கள் தாங்கி நிற்க சிறந்தவேலைப்பாடுகளுடன் அழகிய தூண்கள் தாங்கி நிற்க அமைந்துள்ளது.  மூலவர் அழகிய திருமேனி தாங்கியவர்.

பிரம்மாண்டமான கல்ஹார வேலைப் பாடுகள் சிற்பங்கள் நிறைந்த சுற்றுப் பிரகார மண்டபங்கள் ஓங்கி உயர்ந்த நெடிய மதிற் சுவர்கள் தூரத்தே தெரியும் கோபுரத்தை வணங்கியவாறே சென்று, திருவருள் பிரகா சிக்கும் திருத்தலத்தை வணங்குவோர்க்கு மீண்டும் பிறாவாப் பேறு கிடைக்கும் என்ப தில் ஐயமில்லை.

விழாக்கள் :

வைகாசி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற் சவம் நடைபெறும் முதல் நாள் துவஜாரோ கணம் ஐந்தாம் நாள் பஞ்சமூர்த்திகள் புறப் பாடு. வெள்ளி ரிஷிப வாகனத்தில் திருவீதி உலா.  ஆறாம் நாள் திருக்கல்யாண உற்சவம் ஒன்பதாம் நாள் திருத்தேர் திருவீதி உலா பத் தாம் நாள் விசாகத் தீர்த்தவாரி நடைபெறும்.
ஐப்பசி முதல் நாள் துலா நீராடலும் அன்று சுவாமி காவிரியில் தீர்த்தம் அளிப்பதும் விசேஷம்.

இந்திய நதிகளில் புனிதம் மிக்க ஏழுநதி களில் கங்கையிற் புனிதமாய காவிரியில் துலாஸ்தானம் ஆடும் சிறப்புப் பெற்ற திருத்தலம். புண்ணியங்களில் மிக உயர்ந்தது.  காவேரி ஸ்நானமேயாகும்.  புத்திரபாக்கியம், தாரித்திரிய நீக்கம், கன்னிப் பெண்டிர்க்கு விவாஹம் முதலியன தருவது துலாக் காவேரி ஸ்நானம் ஆகும்.

துலாஸ்நானம் முடிந்து வஸ்த்தரம், பொன், தானியம், பழங்கள் முதலியன தானம் செய் வோர்க்கு இந்திரபோகம் இனிதே கிடைக்கும்.
காவேரி துலாஸ்நானம் என்றதும் நம் நினைவுக்கு வருவது இரண்டு ஊர்களே யாகும்.  ஐப்பசி முதல் நாள் திருப்பராய்த் துறையிலும், ஐப்பசிக் கடைசி நாள் மயிலாடு துறையிலும் காவிரியில் ஸ்நானம் செய்து இறைவனை வழி படுவது தொன்று தொட்டு வரும் மரபாகும்.
திருப்பராய்த்துறையில் துலா ஸ்நான தினத்தன்று சுவாமியும் அம்மனும் வெள்ளி ரிஷிப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். பின்னர் காவிரியில் அஸ்த்தர தேவர் திருமுழுக்காடி அடியவர்க்கு  தீர்த்தப் பிரசாதம் அளிப்பார்.  அப்பொழுது அங்கு கூடியிருக்கும் பெருந்திரளான மக்களும் காவிரியில் நீராடுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இதேபோன்று ஐப்பசி இறுதி நாளன்று (கடை முழுக்கு) மயிலாடுதுறையில் அனைத்துக் கோயில்களிலும் உள்ள மூர்த்திகளும் திருவீதி உலா வந்து மயூர நாதருடன் சேர்ந்து தீர்த்தம் அளிப்பது விசேஷமான திருவிழாவாகும்.

பிரமோத்திர காண்டம் என்னும் சமஸ்க் கிருத நூலில் காவிரியின் பெருமையை பின் வருமாறு பேசப்பட்டுள்ளது.
சூரியன் துலா விஷுவை அடையும் பொழுது பசுநாக்குப் போன்ற தன்மை கொண்ட இலையை உடைய பராய் மரங்கள் நிறைந்த பராய்த்துறை சேத்திரத்தில் நீராடியவருடைய பாபங்கள் யாவற்றையும் காவிரி போக்கி எல்லா நன்மையையும் கொடுக்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கோயில் இந்து சமய ஆட்சித்துறையின் கீழ் சிறப்பாக இயங்கி வருகிறது.  இங்கு வழிபாடு செய்த திருவருட்பிரசாதம் வழங்கும் சிவாச்சாரியப் பெருமக்கள் மிகவும் ஆச்சாரத்துடனும் பக்தியுடனும் பூஜை செய்து கொடுக்கின்றனர்.  அன்பர்களால் 1940-ம் ஆண்ட நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு பின்னர் 1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதி (ஈஸ்வர, தை 27) சுவாமி சித்பவானந்தரின் நூற்றாண்டு விழாக் குழுவினர் சார்பில் கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது.

நடைதிறந்திருக்கும் நேரம் : காலை 6 முதல் 12 மணி வரை, மாலை 5 முதல் 8 மணி வரை திருச்சியிலிருந்தும் கரூரில் இருந்தும் ஏராளமான பேருந்துகள் இத் திருக்கோயில் நிறுத்தத்தில் நின்று செல் கின்றன.  புகை வண்டி வசதியும் உண்டு.

திருப்பராய்த்துறை தலம் பற்றி பாடல்கள் சில திருஞானசம்பந்தர் அருளியது.

நீறு சேர்வதோர் மேனியர் நேரிழை
கூறு சேர்வதோர் கோலமாய்ப்
பாறு சேர்தலைக் கையர் பராய்த்துறை
ஆறுசேர் சடை அண்ணலே !
திருநாவுக்கரசர் அருளியது திருக்குறுந்தொகை
கரப்பர் காலம் அடைந்தவர் தம்வினை
சுருககு மாறுவல் லார் கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர் வரு காவிரித் தென்கரைத்
திருப்பராய் துறை மேவிய செல்வரே!
மாணிக்கவாசகர் அருளியது :
அன்பராகி மற்றருந்தவம் முயல்வார்
அயனும் மாலுமற்றழலுறு மெழுகாம்
என்பராய் நினைவார் எனப் பலர்
நிற்க இங்கெனை எற்றினுக் கண்டாய்
வன் பராய் முருடொக்கும் என் சிந்தை
மரக்கண் என் செவி இரும்பினும் வலிது
தென்பராய்த்துறை யாய் சிவலோகா
திருப்பெருந்துறை மேவிய சிவனே !
மற்றும் அருணகிரியார் – பட்டினத்தார் பாடல்களும் உள்ளன.  விரிவு அஞ்சி அவற்றை விடுக்கின்றோம்.

ஐப்பசி துலா ஸ்நானச் சிறப்பும் கார்த்திகை முடவன் முழுக்கு சிறப்பு நீராடலும் பெற்ற காவிரி அன்னையின் அருளுடன் திருப்பராய்த் துறை தாருகாவனேசுவரர் ஆலயத் திற்கு சென்ற மாதம் (ஐப்பசியில்) சென்று வணங்கும்பேறு எனக்கும் என் துணைவி யார்க்கும் கிடைத்தது.  இது பாம்பன் சுவாமி கள் மாத இதழுக்கு அடியேன் ஒவ்வொரு மாதமும் ஒரு ஆலயம் சென்று வணங்கி எழுதும் வாய்ப்பால் வந்தது.  இவ்வாய்ப்பை வழங்கிய பாம்பன் சுவாமிகள் மாத இதழ் ஆசிரியர் பெருந்தகை ஆன்மீகச் சுடர் குகஸ்ரீ.வீ. கலைச்செல்வனாருக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டு அன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று சிவனருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt