புகழ்ந்துரை நாயனார்

– திருக்குறள் தென்றல் த.தங்கமணி
(மஸ்கட்)

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

236-புகழ்

“மனிதன் அழிந்தாலும் அழியாமல் நிற்பது புகழே, புகழோடு தோன்றாதார் தோன்றாதிருத் தல் நன்று என்பார் திருவள்ளுவர். எல்லோ ருக்கும் புகழ் துணையாக இருக்கும். ஆனால் இவர் புகழுக்குத் துணையாக இருந்தார்” என்று திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் போற்றப் பட்டவர்தான் இன்று நாம் தெரிஞ் சுக்க போகும் புகழ்த்துணை நாயனார்.

ஸ்ரீ வில்லிபுத்தூரில் பிறந்து, மிகச்சிறந்த சிவபக்தராக விளங்கியவர்தான் புகழ்த்துணை நாயனார். சிவாகம விதிகளின்படி பரமசிவனை அன்றாடம் பூசித்து அர்ச்சனை செய்து வந்தார். தொடர்ந்து இவர் செய்து வரும் பூஜையும், அர்ச்சனையும், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் சிவாகம விதிகளின்படி பூசிக்க வேண்டும் என்றால், அதற்கு நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டும். மற்ற வேலைகள் ஏதும் செய்ய முடியாத நிலை ஏற்படும். தன்னுடைய உணவு, உடைக்காக வேலை எதுவும் செய்யாமல், இப்படி இடைவிடாமல் சிவபூஜை செய்யும் நாயனாரை பார்க்கும் அனைவருக்கும் ஆச்சரியமே…

தனக்காக எதுவும் செய்யாமல், சிவபூஜைக் காக சதாசர்வ காலமும் பணி செய்த நாய னாருக்கு பசியால் சில நேரங்களில் சோர்வு ஏற்படும். சில நேரங்களில் கோவில்களில் கிடைக்கும் பிரசாதத்தை உண்டு பசியை போக்குவார். ஆனால் எல்லா நாளும் பசியை போக்குவது என்பது இயலாத செயலாகவே இருந்தது நாயனாருக்கு. இருந்தும் தன் பூத உடம்பு வளர பசியை போக்குவதற்காக வேறு வேலைக்கு செல்லாமல், என்றும் அழியாத புகழைத் தரும் சிவபூசைக்கான வேலை யிலேயே ஈடுபட்டு வந்தார்.

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது

– 235-புகழ்

“புகழ் உடம்பு வளரப் பூத உடம்பு இளைத் தாதலும், புகழ் நிலைத்து நிற்கப் பூதவுடம்பு இறத்தலும் வல்லவர்க்கல்லது பிறர்க்கு இயலாததாகும்” என்ற இந்த திருக் குறளின்படி தன் உடம்பு இளைப்பதைப்பற்றி கவலைப் படாமல் இருந்தார் நாயனார். இப்படி பசிப்பற்றி கவலைப்படாமல் ஆகம விதிகளின் படி பூஜை செய்து வந்த நாயனாரைப்பற்றி ஊரார் புகழ்ந்து பேசினார்கள்.

தங்களால் இயன்ற வரை பிரசாதத்தை வழங்கி, நாயனாரின் பசியை போக்கினார்கள். ஆனால் சோதனையாக ஊர் முழுவதும் பஞ்சம் வந்துவிட்டது. யாருக்கும் உணவுப் பொருள் போதியளவு இல்லை. பலருக்கும் பசி நோய் வந்து வாட்டியது. ஊர் மக்களே பசியில் வாடும் போது, நாயனாருக்கு உணவு கிடைப் பது அரியதாகி போனது. ஆனால் குறளின் கருத்தின்படி வாழ்ந்த நாயனார், தன் உடம்பு இளைத்தாலும் சரி, ஒரு வேளை இறந்தாலும் சரி… பரவாயில்லை. தான் செய்யும் பூசை, அர்ச்சனைகளில் இருந்து வழுவாமல் தொடர்ந்து இறைவனை வழிபட்டு வந்தார்.

இப்படி அயராது இரவு பகலும் ஈசன் அடியில் நேசம் வைத்து பன்மலர் கொண்டு அர்ச்சித்துப் பூசிப்பார். ஒரு நாள் சிவலிங்கத் திற்குத் திருமஞ்சனம் புரியும்போது, பசியால் மிகவும் தளர்வு அடைந்து, தண்ணீர் நிறைந்த குடம் கரந் தாங்கமாட்டாது இறைவர் திருமுடி மிசைவிழ, அதனால் பெருந்துன்பமுற்று வீழ்ந்து விட்டார். மூச்சு, பேச்சு இல்லாமல் மயங்கிவிட்டார்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
3-கடவுள் வாழ்த்து

“அன்போடு நினைப்பவர் உள்ளத்தில் தங்கி யிருக்கும் இறைவனது சிறந்த திருவடிகளை விடாது நினைப்பவர் இன்ப உலகில் நீடித்து வாழ்வார்” என்கிறது நம்ம திருக்குறள்.

நாயனாரோ அன்போடு இறைவனை நினைத்தவர்தான், இறைவனின் திருவடிகளை விடாது நினைத்தவர்தான். ஆனால் பசியால் தானே வாடினார் என்று நினைக்கத் தோன்றும்.

மதுரை சிவத்தலத்தில் “யாமே இதை அளித்தோம்” என்று அனுமதித்த திருக்குறள். இறைவனின் வாக்கு. திருக்குறளின்படி வாழ்ந் தவர் யாருமே தோற்றதில்லை என்ற கருத்துக்கு உதாரணமாக அமைந்ததுதான், இந்த நாய னாரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.
மூச்சு, பேச்சு இல்லாமல் மயங்கி வீழ்ந்த நாயனாரின் கனவில் தோன்றிய இறைவன், “அன்பனே பஞ்சம் நீங்கும் வரை உனக்கு நாம் நாள்தோறும் இங்கே ஒரு காசு வைப்போம்” என்று அருளினார்.

அதுபோல நாயனாரின் பசி நீங்கும் படியாக தினமும் ஒரு காசு இறைவனின் பீடத்தின் கீழ் இருந்தது. இந்த செய்தியை ஊர் முழுவதும் அறிந்து, நாயனா ரின் புகழ் நாட்டின் எல்லை வரை பரவியது. இறைவனால் தரப்பட்ட காசைக்கொண்டு பசியாறி, தொடர்ந்து ஆகம விதிகளின்படி சிவ பூசை செய்து இறைவன் இணையடி சேர்ந்தார் என்று சேக்கிழார் பதிவுச் செய்துள்ளார்.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

234-புகழ்

“ஒருவன், நிலத்து எல்லைவரை தன் புகழ் பரவுமாறு செய்வானாயின், தேவருலகம் அங்குள்ள தேவரைப் போற்றாது இவரையே போற்றும்” என்கிறது நம்ம திருக்குறள். இன்றும் ஆயிரக்கணக்கான சிவ ஆலயங்களில் புகழ்த் துணை நாயனாரின் திருவுருவச்சிலைக்கு வழி பாடுகள் செய்யப்பட்டு போற்றப்படுகின்றது.

இப்ப சொல்லுங்க… சிவனருள் பெற நம்ம திருக்குறள் உதவும்தானே…!

 

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt