மயூரவாகன சேவன விழா

– குகஸ்ரீ வீ.கலைச்செல்வன்

அடியார்களை இறைவன்  பல நேரங்களில் சோதனையில் மூழ்கடிக்கிறான். அதனால் பல அடியார் பெருமக்கள் படும் வேதனை ஏட்டில் அடங்காது. உண்மை ஞானியர், உத்தமன் நம்மை ஏன் துன்பத்திலாழ்த்துகிறான் என்ற உண்மை உணர்ந்தவர்கள். ஆதலால் இறை வனையே போற்றி புகழ்ந்து கொண்டாடுவர். இதனை மெய்ப்பிக்கும் வண்ணம் பாம்பன் சுவாமிகளது வாழ்க்கையில் நடந்திட்ட நிகழ்ச்சி அமைந்துள்ளது.

பாம்பன் சுவாமிகள் சென்னையில் வைத்திய நாத முதலி தெருவில் குமரானந்தம் மையார் வீட்டில் தங்கியிருந்தார், 1923 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் நாள் லிங்கி செட்டி தெருவிலிருந்து தமது இருப்பிடம் வருவ தற்கு தம்புச் செட்டி தெரு, மண்ணடி தெரு சந்திப்பில் சுவாமிகள் சென்று கொண்டிருந் தார். அப்போது  வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு குதிரை வண்டி சுவாமிகளை கீழே தள்ளியது. அவரது இடது  கணுக்காலில் வண்டியின் சக்கரமும் ஏறியது. இதனால் கால் எலும்பு கடுமையாக நொறுங்கி விட்டது. இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.

கூடி இருந்தோர் சுவாமிகளை நோக்கி ஐயா! மருத்துவமனைக்கு செல்லலாமா? எங்கு செல்ல லாம் கூறுங்கள் என்று கேட்டபோது சுவாமிகள் நீங்கள் நினைப்பது போல் செய்யுங்கள் நான் ஏதும் சொல்லேன் என்று கூறி அந்த நிலையிலும் குகனடி சிந்தை செய்பவராய் இருந்தார்.

கூடியிருந்தோர் ஒருவாறாக முடிவு செய்து பொது மருத்துவமனையில் சேர்க்கலாம் என்று முடிவு செய்து சுவாமிகளை வேறு ஒரு குதிரை வண்டியில் படுக்க வைத்தனர். அப்போது வழிந்த குருதியைக் கண்டால் பேயும் அழும். அந்த அளவுக்கு ரத்தப்போக்கு இருந்தது. சிறிது நேரத்தில் மூன்று மாடிகள் கொண்ட பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். மன்றோ வார்டு என்ற பெயரிய பகுதியில் 11ம் எண்ணு டைய இடத்தில் சுவாமிகளின் சிகிச்சை ஆரம்பமானது.

இதற்கிடையில் சுவாமிகளைத் தெரிந்தவர் பலர் மருத்துவமனையில் அருகில் சூழ ஆரம் பித்தனர். பல பக்தர்கள் அவ்விடம் வந்தனர். சுவாமி களிடம் இரவு உபதேசம் பெற்ற சுப்பிரமணிய தாசராகிய சின்னசாமி ஜோதிட ரும் மனைவியுடன் விரைந்து வந்தார். சுவாமி களைப் பார்த்ததும் சின்னசாமி ஜோதிடரும், அவரது மனைவியும் கண்ணீர் விட்டனர். இவ் விருவரும் சுவாமிகள் மருத்துவமனையில் இருந்த காலத்து கண்ணும் கருத்துமாய் கவ னித்து கொண்டனர்.

மருத்துவமனையின் மருத்துவர்கள் சுவாமிகள் வயதானவர் ஆனதாலும் அவர் உப்பு நீக்கிய ஆகாரம் மட்டுமே உண்டதாலும் கால் கூடுதல் என்பது இயலாது. முறிந்த காலை துண்டித்தலே முறை என்றனர்.

சுவாமிகளது கால் நலமுறுதல் வேண்டும் என்று விழைந்து மூன்று அன்பர்கள் சுவாமிகள் எழுதிய சண்முக கவசம் பாராயணம் செய்யத் தொடங்கினர். (சுப்பிர மணியதாசர், சிவசங்கத் தம்பிரான், ஞான சாகர முதலியார் சண்முக கவசம் ஓதியவர்கள்). இம்மூவருள் சின்னசாமி ஜோதிடரே பெரிதும் உறுதி கொண்டு ஓதினார். இதை சுவாமிகளே தமது பாடலில் குறிப் பிட்டுள்ளார்.

மிகுந்த பக்தி சிரத்தையுடன் சின்னசாமி ஜோதிடர் சண்முககவசம் ஓதுகின்ற வேளை யில், ஏரகத்தேவன் என்றாள் இரு முழங் காலுக்காக்க! சீருடைக் கணைக்கால் தன்னை சீரலை வாய்த்தே காக்க! என்ற பகுதி வரும் போது சுவாமிகளின் முரிந்த கால் பிளவுகூடா திருக்க இரண்டு வேல் களின் இலையலகுகள் பொருத்த பூட்டப்பட்டும் மற்றொரு வேல் முனை தங்கி நிற்குமாறு நிறுத்தப் பட்டும் இருப்பதை கண்ணெதிரே காணும் பேறு பெற்றார். வேல் காட்சியினை சுவாமிகளது கால் குணமாகும் வரை நாள்தோறும் கண்டு மகிழ்ந்தார் சின்னசாமி ஜோதிடர்.

கால் முறிவு ஏற்பட்ட பதினொன்றாம் நாள் (மார்கழி மாதம் 22ம் நாள் வளர் பிறை பிரதமை திதியும் பூராடம் நட்சத்திரம் கூடிய  நாள்) இரவில் மேற்கு திசையிலிருந்து களிப்போடு தோகையை விரித்து ஆடும் இரண்டு மயில் களைக் கண்டார். பெரிதும் சிறிதுமாக காட்சி நல்கிய இரண்டு மயில்களும் பொன்னிறம் காட்டும் பச்சை நிறத்துடன் காட்சி அளித்தன.

ஆனதனி மந்த்ரரூப நிலை கொண்ட தாடு மயிலென்பது அறியேனே! (திருப்புகழ்)

திருப்புகழ் அருணகிரிநாதரின் வழியில் செல்லும் நமது பாம்பன் சுவாமிகள் இக் காட்சியை கண்டு சிரமேல் கைகுவித்து வணங்கினார்.
திருவருளின் அருட்காட்சி கண்ட பாம்பனார் அழுது கண்ணீர் பெருக்கினார். மயில் காட்சியையே உள்ளத்தில் வைத்து வாடும் சுவாமிகள் மகிழும் வண்ணம்  சுவாமிகள் படுத்திருந்த தலையணைமேல் குழந்தையாக கால் வைத்து காட்சி தந்தாள்.

குழந்தையின் அழகைக் கண்டு சுவாமிகள் வியந்து இருக்கை யில் அத்திருவுருவம் மறைந்தது.

பாம்பன் சுவாமிகள் கால்முறிவை படம் எடுத்த மருத்துவர்கள் இப்போது படம் எடுத்து (எக்ஸ்-ரே) பார்த்தனர். உடைந்த எலும்பு கூடி வருவது கண்டு அதிசயித்தனர்.

இன்னும் 15 நாட்கள் மருத்துவமனையிலே இரு! கால் புண் ஆறிவிடும்! என்ற வாக்கு சுவாமிகளின் செவிகளுக்கு கேட்டது. மருத்துவ மனையில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த வெள்ளைக்கார பெண்மணி ஐயா! உப்பை நீக்கி உணவுண்ணும் உங்களுக்கு, இந்த வயதில் கால் எலும்பு கூடியது பெரிய வியப்பான ஒன்று என்று கூறி மகிழ்ந்தார்.

இச்செய்தியை அறிந்த பக்தர்கள் மகிழ்ந்த னர். சுவாமிகள் தங்கியிருந்த வைத்தியநாத முதலி தெரு இல்லத்து குமரானந்தம் அம்மை யார் சுவாமிகள் கால் போன்று புது வெள்ளி யில் கால் ஒன்று செய்து கந்தகோட்ட முருகனுக்கு காணிக்கையாக்கினார்.

இறைவன் ஆணையிட்ட வண்ணம் 15 நாட்கள் கழிந்து சுவாமிகள் மருத்துவமனையை விட்டு நீங்கி தமது இருப்பிடம் சென்றார்.
சுவாமிகள் கண்டு களித்த மயில் காட்சியை மயூரவாகன சேவன விழாவாக சுவாமிகள் எண்ணப்படி நாமனைவரும் கொண்டாடி வருகிறோம்.

மார்கழி மாதம் பூர்வ பட்ச பிரதமையன்று இவ்விழாவை சுவாமிகள் ஞானபூஜையாக நடத்தி வந்தார். இந்த விழாவில் இறைவன் படம் எழுத்து செல்லல் கூடாது. ஸ்ரீ வச்சிரா யுதமே நடுநாயகமாக எடுத்துச் செல்லப்படும். மயில் வேல் கோழிக் கொடிகளுக்கு சிறந்த ஆயுதம் குடை முதலியவற்றிற்கும் புஷ்ப மாலை சாத்தப்பட்டு சந்தன தூப, தீப உபசாரங்களுடன் நல்ல வாத்தியங்களோடு அலங்கரிக்கப்பட்ட வீதிகளில் உலாவி இருப்பிடமடையத் தக்கது.

ஊர்வலத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் தவிர்த்து தீவட்டிகள் நிறைய எடுத்துச் செல்ல லாம். வாணவேடிக்கை சிறப்பாகச் செய்யலாம். எங்கிருந்து ஊர்வலம் புறப்படு கிறதோ அங்கு ஸ்ரீ குமார பரமேஸ்வரனுடைய படத்தை பூந்தொடைகளால் அலங்கரித்து விடியும்வரை சண்முக சகச்சிர நாமார்ச்சனை புரிந்து அசோக கால வாசம் படித்தல் வேண்டும். அசோக கால வாசம் படிக்காமல் இத்திருவிழா நடைபெறுதல் கூடாது. மறுநாள் அன்னமும், பயசு கலந்த மதுரபானமும் ஏழைகளுக்கும், அடியார்களுக் கும் குறைவில் லாது நல்கி உபசரிக்கவேண்டும்.

இந்த மயூரவாகன சேவன விழாவின்போது படிக்கப்படும். ‘அசோகசாலவாசம்’ சுவாமி களது ஆறாம் மண்டலமாக விளங்கும்  ஸ்ரீமத் குமார சுவாமியத்துள் விளங்கும் பாடல்கள். இப் பாடல்கள் சுவாமிகளுக்கு ஏற்பட்ட கால் முரிவையும், நாம் மேற்சொன்ன நிகழ்ச்சி களையும் விளக்குவன.

குமார பரமேஸ்வரன் தனது திருவடிகளை சுவாமிகளின் சிரசில் சூட்டி, வேல் காட்சி அளித்து, மயில் நடனம்  காண்பித்தருளிய அற்புத நிகழ்ச்சியை அருணகிரிநாத சுவாமிகள் விளக்குவதைக் காணீர்!

இருநோய் மலத்தை சிவஒளியால் மிரட்டியெனை
இனிதா வரவழைத்தெனது முடிமேலே
இணைதாளளித்துனது மயில்மேலிருத்தி ஒளிர்
இயல் வேலளித்து மகிழ் இருவோரும்
ஒருவாகெனக்கயிலை இறையோன் அளித்தருளும்
ஒளிர்வேத கற்பக நல் இளையோனே
ஒளிமாமறைத்தொகுதி சுரர்பார்துதித்தருள
உபதேசிக்கப்பதமும் அருள்வாயே!

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt