ஸ்ரீ தாயுமானவர்

‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!”
நெஞ்சகமே கோயில் ; நினைவே சுகந்தம்; அன்பே
மஞ்சனநீர் பூசை கொள்ள வாராய் ! பராபரமே!
அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கிவிட்டு விட்டால்
இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே !
தாயுமானப் பெம்மான் தன்அடியை ஏத்துதற்குக்
காயும் வினைஅகலும் காண்.

– தாயுமானவர்.

‘பாம்பன் சுவாமிகள் மாத இதழ்” – வாசக நேயர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு (2014) நல்வாழ்த்துக்கள்.  தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் இவ்வாண்டு (25.01.2014) தை மாதம் 12-ந் தேதி விசாக நட்சத்திரம் ஸ்ரீ தாயுமான சுவாமிகளின் குருபூஜைத் திருநாள் இந்த தை விசாகத் திருநாளில் ஸ்ரீ தாயுமான சுவாமிகளைப் பற்றி சிறிது சிந்திப்போம்.

அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாச மாய் இருந்து கொண்டு அருள் பாலிக்கும் சிவப் பரம்பொருளின் திருவருளில் திளைத்த வர் தாயுமான சுவாமிகள்.  சோழ வளநாட் டில் திருமறைக்காடு என்னும் ஊரில் ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்தார்.

இவர் தந்தையார் கேடிலியப்ப பிள்ளை.  தாயார் கெஜவல்லி அம்மையார்.  நீண்ட நாட் களாக மகப்பேறு இன்றி வருந்திய இவர் களுக்கு, திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளி யிருக்கும் ஸ்ரீ தாயுமானவர்அருளால் பிறந்தவர்.  அதனால் இவருக்குத் தாயுமானவர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் இவரது பெற்றோர்.

சைவத் திருமுறைகளையும், மெய்கண்ட சாத்திரங்களையும் இளமைப் பருவத்திலேயே நன்கு ஓதி உணர்ந்தார்.  கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கினார். இவரது தந்தையார் கேடிலியப்ப பிள்ளை, சோழநாட்டை அப் போது திருச்சிராப்பள்ளியைத் தலைமையிட மாகக் கொண்டு, ஆண்டு வந்த விஜய ரகுநாத சொக்கலிங்க நாயக்கர் என்பவரிடம் கணக்குப் பிள்ளையாகப் பணிபுரிந்தார்.  நிதித்துறையில் (கருவு+லம்) சிறப்பாகப் பணிபுரிந்த பிள்ளையவர்கள் சிலகாலம் கழித்து இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.

அவரது மறைவுக்குப் பின்னர் அவரது மகனார் ஆகிய ஸ்ரீ தாயுமானவர் அப்பணியில் அமர்த்தப்பட்டார்.  அரசவையில் சிறப்பாகப் பணிபுரிந்தார்.  ஆனாலும் அவரது உள்ளம் இறைவன் திருவருளையே சிந்திக்க ஆரம்பித் தது.  அருள்வெளியில் நிலைத்து நின்றது.

திருமூலர் மரபில் வந்த ‘மௌன குரு”வே இவரது குரு ஆவார்.  ‘சும்மா இரு” என்று உபதேசித்த மொழியினைப் பெருமந்திரமாகக் கொண்டார்.  எப்போதும் பக்திப் பரவச மோன நிலையிலேயே இருந்தார்.
இவருக்கு மட்டுவார் குழலி என்னும் மங்கை நல்லாள் துணைவியாக வாய்த்தார்.  கனக சபாபதி என்னும் மகவையும் பெற்றார்.  இல்லறத்தில் மனம் லயிக்கவில்லை. சதா துறவு பூண்டு செல்லும் நோக்கத்தில் இருந்தார்.

மனைவியாரின் மறைவுக்குப் பின்னர் தனது தமையனார் சிவசிதம்பரம் அவர்களிடத்தில் தனது மகனாரை ஒப்ப டைத்துவிட்டு துறவு பூண்டார்.
மீண்டும் தாயுமானவர் தனது குருநாதர் மௌன குரு அவர்களிடம் சேர்ந் தார்.  தட்சணாமூர்த்தியின் வடிவமாகிய மௌனகுரு, மௌனமாக இருந்தே சீடருக்கு அனைத்தையும் உபதேசித்தார்.  தாயுமான வரும் அனைத்தையும் உணர்ந்தார்.

திருச்சிராப்பள்ளியிலேயே மௌனகுரு மடத்தில் தங்கியிருந்தார்.  கி.பி.1644-ம் ஆண்டிலிருந்து அம்மடத்தின் தலைவராய் இருந்தார்.  திரு முறையின் கருத்துக்களை எளிய இனிய பாடல்களாய்ப் பாடித் தந்தார்.  இவர் பாடிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 1452. தாயுமான சுவாமிகள் தமிழ்நாட்டிலுள்ள சிவ புண்ணிய ஸ்தலங்களைத் தரிசித்துப் பல பாடல்களைப் பாடியுள்ளார்.  இவர் 1662-ம் வருடம், தை மாதம், விசாகத் திருநாளில் இராமநாதபுரம், இலக்குமிபுரம் என்னும் ஊரில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

சைவம் தழைத்தோங்க, செந்தமிழ்செழித் தோங்க அன்பர் தம் உள்ளங்களில் அன்பும் அறிவும் மலர, நாடெங்கும் அறம் பரவ, உலகெங் கும் அருள் வளர ஸ்ரீ தாயுமான சுவாமிகள் பாடல்களை நாம் பயின்று நம் சந்ததியின ருக்கும் அதை உரைத்து சமயப் பயிர் வளர்க்க இதுவே ஏற்ற தருணம்.

உலகில் எண்ணற்ற பிறவிதனில் மானிடப் பிறவி பெறுவது மிகவும் அரிது.  அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பார் ஔவை மூதாட்டி கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை அடைந்த நம்மில் பலர் வாழ்க்கை யில் துன்புறுவதைக் காண்கின்றோம்.  அதற்கு அவரவர் செயல்களே மூல காரணம்.  ‘தீதும் நன்றும் பிறர்தரவாரா, நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன” – என்பது முன்னோர் வாக்கு.
செய்யும் செயலை சிறப்பான செயலாக நற் செயலாக அமைத்துக் கொண்டால் நல் வாழ்க்கை தானே வந்து அமையும்.

மக்கள் யாருமே பிறப்பில் கெட்டவர்கள் அல்லர்.  மக்களின் வளர்ப்பிலும், சந்தர்ப்ப சூழ்நிலை, சகவாசம் ஆகியவற்றால் நல்லவர்களும் கெட்டவர்கள் ஆகிறார்கள்.  மழை பெய்யும் பொழுது அது பெய்யும் இடத்திற்கேற்ப அதன் தன்மை மாறுகிறது.  நிலத்தியல் பால் நீர் திரிந்தற்றாகும் கங்கையில் பெய்தால் கங்கா தீர்த்தம், காவிரியில் பெய் தால் காவிரி தீர்த்தம், அசுத்தமான குட்டையில் விழுந்தால் அந்நீரின் பவித்ரம் (புனிதம்) கெட்டு சாக்கடையாகி விடுகிறது.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின் அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்க்கையிலே!

எவ்வித மாசும் இல்லாத இறைவனுக்கு ஒப்பானது குழந்தை.  வளர வளர வயது உயர உயர சூழ்நிலைக்கு ஏற்றவாறு உருவாகிறான்.
இல்லம் தோறும் இன்றைய இளம் தலை முறையினருக்கு ஆரம்பம் முதலே ஆன்மீக அறிவைப் புகட்ட வேண்டும்.  பழுத்த பழம் – மீண்டும் காயாவதில்லை.  இளம் தலை முறையினர் ஆன்மீகத்தைப் புரிந்து கொண் டால் அவர்களுக்கு வாழ்க்கையில் இன்பம் தானாக வந்து எய்தும். இன்றைய கால கட்டத்தில் விஞ்ஞானம் வளர்ந்து இருப்பதைப் போல மெய்ஞானம் வளரவில்லை என்பது ஆன்றோர் கருத்து.  மெய்ஞ்ஞானத்தில் திளைத்தவர்கள் இன்றும் என்றும் வாழ்வில் இன்பமாக இருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைவது அறிவு, அவ் வறிவை நற்செயலுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.  நற்செயலுக்கு சிந்தனை வேராக அமைகிறது.  நல்ல சிந்தனைகள் வேரூன்றி வளர்ந்தால் அது நல்வாழ்க்கை அமைய உறுதுணையாகும்.  இதற்கு ஆன்மீக மார்க்கமே சிறந்தது.  ஆன்மீக மார்க்கங்களிலே தவராஜ சிங்கமாக விளங்கியவர் ஸ்ரீ தாயுமான அடிகளார்.  இவர் காட்டிய வழி சாலச்சிறந்தது.  தவ நெறியே சிவநெறி, சிவ  நெறியே குக நெறி, குக சாயுஜ்ய நிலை அடைய  குருநாதர்
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தனது 6666 பாடல்களில் இந்தச் சமுதாயம் உய்வு பெறக் காட்டிய நெறிகளைப் பரப்பி வரும் நமது பாம்பன் சுவாமிகள் மாத இதழின் ஆசிரியர்  பதிப்பாளர் ஆன்மீகச் சுடர், குகஸ்ரீ வீ. கலைச்செல்வனார் அவர்கள் சென்ற மாத இதழ் பாம்பன் சுவாமி தலையங்கத்தில் கூறிய கருத்துக்களையே இங்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

‘வஞ்சகமும் சூழ்ச்சியும் விஞ்ஞான வளர்ச்சிப் பாதிப்பும் அயல்நாட்டவரின் அநியாய வியாபாரயுக்தியும் நம்மை நாம் யார் என்று தெரியாமலேயே கணினிக்கும் கயமைக்கும் நமது அறிவை அடகு வைக்கும் அநியாய காலமாகிவிட்டது.  இதனால் வேண்டாத மனக்குமுறல்கள் புரிந்து கொள்ளாமை, மனிதத் தன்மை அறவே இல்லாதிருத்தல் ரசாயனப் பொருட்களால் உடல் உபாதை, உறுப்புகளில் பாதிப்பு இப்படி பலப் பல …. எனவே இனி ‘அவசியத் தேவைக்கு மட்டுமே அறிவியல், மற்றவற்றிற்கு அருளியல்” – என்று பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசிரியர் கருத்தை ஏற்று, இந்தச் சமுதாயம் உய்ய குருநாதர் வழியில் செல்ல, உறுதி ஏற்கவேண்டும்.  சமுதாயப் பணியுடன் தொடர்பில்லாத எந்தச் சமயப் பணியும் பயனற்றதாகும்.

ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வண்ணம் வாழ்க்கை வளங்களைப் பிறருக்கு உதவ வேண்டும்.  வள்ளலாரின் வழியில் செல்லும் ஓவிய பாவலர் மு. வலவன் அவர்கள் கட்டும் வள்ளலார் கோட்டத்திற்கு உதவுங்கள்.  உங்கள் நிலை உயர உதவிக்கரம் நீட்டுங்கள் குருநாதர் ஆசி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

சைவ சமயமே சமயம், சமயாதீதப் பழம் பொருளைக் கைவந்திடவே மன்னுள் வெளிக் காட்டும்.  இந்தக் கருத்தை விட்டுப் பொய் வந்து உழலும் சமய நெறி புகுத்த வேண்டாம்.  முக்தி தரும் தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாரும் ஜெகத்தீரே! என்ற தாயுமானவர்  பாடலுக்கு ஏற்ப அன்பர் பணி செய்து இன்பநிலை அடைய இதுவே சமயம், இதுவே தருணம் ! என்று கூறி இவ்வாண்டு உங்களுக்கு எல்லா வளமும் நலமும் நல்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்று உங்களுக்கு வாழ்த்துக் கூறி நிறைவு செய்கின்றோம்.

அன்பைப் பெருக்கி ஆருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே!
கன்றினுக்குச் சேதா கனிந்து இரங்கல் போல் எனக்கு
என்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே !
சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா இருப்பதற்கு
அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே !
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே !
சீர் ஆரும் தெய்வத் திரு அருள்ஆம் பூமிமுதல்
பார் ஆதி ஆண்ட பதியே பராபரமே !

வித்து இன்றி யாதும் விளைவது உண்டோ?
நின்அருளாம்
சித்து அன்றி யாங்கள் உண்டோ? செப்பாய் பராபரமே!
சின்மயானந்த குருவே !                  (1)
அங்கை கொடுமலர் தூவி அங்கமது புளகிப்ப
அன்பினால் உருகி விழிநீர்
ஆறாக, ஆராத முக்தியினது ஆவேச
ஆசைக் கடற்குள் மூழ்கிச்
சங்கர ! சுயம்புவே ! சம்புவே ! எனவும் மொழி
தழுதழுத்திட வணங்கும்
சன்மார்க்க நெறி இலாத் துன்மார்க்கனேனையும்
தண் அருள் கொடுத்து ஆள்வையோ?
துங்கமிகு பக்குவச் சனகன் முதல் முனிவோர்கள்
தொழுது அருகில் வீற்றிருப்பச்
சொல்லரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே
சொரூப அநுபூதி காட்டிச்
செங்கமல பீடம் மேல் கல்ஆல் அடிக்குள் வளர்
சித்தாந்த முக்தி முதலே !
சிரகிரி விளங்கவரு தட்சிணாமூர்த்தியே !
சின்மயானந்த குருவே !

– ஸ்ரீ தாயுமானவர்

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt