நமக்கு முன்னே முருகன் வந்தால்..?
“திருமுருகா என்று ஒரு தரம் சொன்னால் உருகுது நெஞ்சம், பெருகுது கண்ணீர்” என்று பாடிக் கொண்டிருந்தேன்.
“தாத்தா, உருகி, உருகி ஓடிடப்போகுது தாத்தா” என்று பேரனின் குரல். திரும்பிப் பார்த்தேன் முருகனின் முருவலோடு பேரன் முகம்”
“எது உருகி ஓடும்ங்கிறே?”
“நீங்க பாடறீங்களே; அந்த நெஞ்சம் தான்”
“ஓ மனசைச் சொல்றியா?”
“நெஞ்சம் னீங்க, இப்ப மனசுங்கறீங்க என்ன தாத்தா”
“ரெண்டும் ஒண்ணு தாம் பா. உங்க தமிழ் வாத்தியார் சொல்லலியா?”
ஆமாம், ஆமாம் சொல்லி இருக்காரு
“மனசு உருகி ஓடிடும்ங்கிற…
அது ஓடாம இருக்க என்ன செய்யலாம்?
“அணை கட்டலாம்”
“ம்; சரியாச் சொன்னே”
“எதால அணை கட்டுறது?”
“ஆற்றிலே எதால அணை கட்றாங்க?”
“கல், மண், இரும்பு, கம்பி, சிமெண்ட் இதெல்லாம் வைச்சுதான் கட்டறாங்க”
“அப்படி மனசையும் உறுதி என்னும் கம்பி, நம்பிக்கை எனும் கற்கள் நல்ல எண்ணங்களாகிய சிமெண்ட் கலவை இவற்றால் அணை கட்டலாம்.
“கட்டினா என்னவாகும்?”
“மனம் உறுதியுடன் ஒரே நிலையில் நிற்கும்”
“அப்படி நின்றால்?”
“அப்படி நின்றால் நம் மனத்தில் முருகன் வந்து முன் நிற்பான்”
“எப்படி?’
“குமரேசனது இரு தாள்கள் (பாதங்கள்) அதில் ஒலிக்கும் சிலம்புகள், சதங்கைகள், தண்டைகள், ஆறுமுகங்கள், பன்னிருதோள் களும், அதில் கடப்பமலர் மாலையும், முன்னே வந்து தோன்றும்”
“அதனால் என்ன பயன் தாத்தா?”
“இருக்கே; நமக்கு சில பயம் இருந்து கொண்டே இருக்கு; இன்னைக்கு நல்ல நாளா? கெட்ட நாளா? இதில் நல்ல காரியம் செய்யலாமா? கூடாதா? என்ற பயம்.”
“அப்புறம்?”
“நமக்கு கஷ்டம் வரும்போது நாம் என்ன பாவம் (தீவினை) செய்தோமோ” என்ற பயம். அதுமட்டுமா? நமக்கு எந்த கிரகநிலை (கோள்கள்) சரியில்லையோ? என்ற பயம். இதை எல்லாம் விடபெரிய பயம்.
“இந்த பயமெல்லாம் போயிடுமா? தாத்தா”
“நிச்சயமா! நம் மனதில் முருகன் நினைப்பு முன் வந்து நின்றால் எந்த கெட்ட நாளும் நம்மை ஒன்றும் செய்யாது. நாம் செய்த பாவங்கள் (தீவினை)யும் எதுவும் செய்யாது, நவகிரகங்களாலும் எந்த கேடும் செய்ய முடியாது, எமனே வந்தாலும் எதுவும் செய்யமுடியாது”
“இதெல்லாம் உங்களுக்கு எப்படி தாத்தா தெரியும்?”
“எனக்கென்னப்பா தெரியும்? எல்லாம் அந்த முருகன் திருவருள் பெற்ற அருணகிரி நாதர் பெற்ற அனுபவத்தை அலங்காரமாய் பாடி வைத்துவிட்டுப் போயிருக்கிறாரே. அந்த திருப்புகழைப் படிச்சு தெரிஞ்சுகிட்டதுதான்பா”
இன்னும் விளக்கமாய் சொல்லணும்னு சொன்னா ஞானசம்பந்தப்பெருமான் பாடியருளிய கோளறு திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் படிப்பதால் பெறும் பயனை கந்தர் அலங்காரத்தில் இந்த ஒரே ஒரு திருப்புகழை படிப்பதால் பெற்று விடலாம்!
நாள் (திதிகள்) கோள்கள் (கிரகங்கள்) மற்றும் எந்த தீங்கும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விடாது என்பது தான் சம்பந்தர் கோளறு பதிகக் கருத்து.
முருகன் திருஉருவத்திலேயே நவகிரகங் களும் அடக்கமாகிவிட்டதால் முருகனை நினைப்போர்க்கு இவைகளால் தீங்கு வராது என்பது கந்தர்
அலங்காரப்பாடல் கருத்து.
முருகனின்
இரு தாள்கள் 2
சிலம்புகள் 2
சதங்கைகள் 2
தண்டைகள் 2
சண்முகம் 6
தோள்கள் 12
கடப்பமாலை 1
27 இதன் கூட்டுத்தொகை 2+7=9
இந்த 9, நவகோள்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
தாள்கள் 2
சிலம்புகள் 2
சதங்கைகள் 2
தண்டைகள் 2
சண்முகம் 6
மாலை 1
15 திதிகள் எனலாம்
இவை அனைத்தின் கூட்டுத்தொகை 27 நட்சத்திரங்கள் எனலாம். இப்படியாக முருகன் திருஉருவத்திலேயே நாளும், கோளும், நட்சத்திரங்களும் அடங்கி விடுவதால் முருகனடியார்களை அவைகளால் ஒன்றும் செய்யமுடியாது! இதோ அந்த அலங்காரப் பாடல் படித்து பயன் பெறுக!
நாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”
-கந்தர் அலங்காரம்
– செய்த்தொண்டர்மாமணி
எம்.எஸ்.சுப்பிரமணியம்