ஏனாதிநாத நாயனார்.

– திருக்குறள் தென்றல் த.தங்கமணி, (மஸ்கட்)

தயவு, தாட்சணியம் பார்த்து நடந்துக் கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதுதான் நம் திருக்குறளில் “கண்ணோட்டம்” என்ற அதிகாரத்தில் தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

இந்த உலகத்தில் யாருமே தாட்சணியம் பார்க்காமல் நடந்தால் என்னவாகும்? யோசித்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகும்.

இந்த உலகம் அழியாமல் இருப்பதற்கு காரண மாக விளங்குவது “கண்ணோட்டம்” என்கின்ற தாட்சணியம்தான். இது ஒருவருக்கு மிகப் பெரிய அழகு என்று சொல்கிறது நம்ம திருக்குறள்.
கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை
உண்மையான் உண்டு இவ்வுலகு

571-கண்ணோட்டம்

போர் வீரராக இருப்பவர். எப்படி தயவு, தாட்சணியம் பார்த்துக் கொண்டு இருக்க முடியும்? கண்ணோட்டம் என்பது நடை முறையில் சாத்தியமா? என்று நமக்குள் ஏற்படும் சந்தேகத்திற்கு பதில் சொல்லும் விதமாக அமைந்துள்ளது. இன்று நாம் தெரிஞ்சுக்க போகும் ஏனாதிநாத நாயனாரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள்.

கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் நான்கு மைல் தொலைவில் அமைந்துள்ள ஏனநல்லூர் என்ற ஊரில் பிறந்தவர்தான் ஏனாதிநாத நாயனார்.

அந்த நாட்களில், சேனாதிபதிக்கு ஏனாதி என்ற பேர் இருந்தது. அரசர்கள் சேனாதிபதிக்கு ஏனாதிப்பட்டம் என்னும் ஓர் ஆபரணம் நெற்றியில் அணியத் தருவார்கள். அரசர்களுக் கும், அவருடைய படைவீரர்களுக்கும் வாள் பயிற்சி கற்றுதரும் வீரராக வாழ்ந்தவர்தான் ஏனாதிநாத நாயனார். மிகச்சிறப்பான பயிற்சி யின் மூலமாக முதன்மை பெற்று, நல்ல வரு மானமும் பெற்று வாழ்ந்தார்.

உயர்ந்த வீரம் உடைய இவர், திருநீற்றின் திருத்தொண்டில் அளவுகடந்த அன்புடன் வாழ்ந்து வந்தார். திருநீறு அணிந்த அடியவர் யாவராக இருந்தாலும், அவரை சிவமாக பாவித்து வணங்கும் பண்புடன் வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாள் பயிற்சியின் மூலமாக கிடைத்த வருமானம் முழுவதையும், திருநீறு அணிந்த அடியவர்க்கே பயன்படுத்தி னார்.

இவரைப்போலவே, வாள் பயிற்சி அளித்து வரும் அதிசூரன் என்பவருக்கு, ஏனாதிநாத நாயனாரால் வருமானம் இழப்பு ஏற்பட்டது. தன்னைவிட அதிக வருமானம் ஈட்டும் ஏனாதி நாதரை வென்றுவிட்டால், தனக்கு வருமானம் அதிகம் கிடைக்கும் என்ற பொறாமை குணம் குடியேறியது. இதனால் தன்னுடம் துணைக்கு ஆட்களைக் கூட்டிக்கொண்டுச் சென்று ஏனாதிநாயனாரை போருக்கு அழைத்தார்.

வீரம் மிகுந்த ஏனாதிநாயனார், யாரையும் துணைக்கு அழைக்காமல், தனியே போருக்குச் சென்றார். இதை அறிந்த அவருடைய வாள் பயிற்சி மாணவர்களும், சுற்றத்தினரும் அவருக்கு துணையாகச் சென்று இவர்களிடம் போரிட்டு வெற்றிபெற முடியாமல், அதிசூரன் தோற்று ஓடினான்.

வீரத்தால் ஏனாதிநாத நாயனாரை வெற்றிப் பெற முடியாத காரணத்தால், சூழ்ச்சியால் வெற்றிபெற நினைத்தான் அதிசூரன்.
திருநீறு அணிந்து வருபவருக்கு, ஏனாதிநாத நாயனார் பணிவிடை செய்வார் என்று அறிந்த அதிசூரன், நெற்றி நிறைய திருநீறு அணிந்து கொண்டு, அதை தன்னுடைய கேடயத்தால் மறைத்துக்கொண்டு, ஏனாதிநாத நாயனாரைத் தனியே போர் செய்ய அழைத்தார். துணைக்கு பலரை அழைத்துக்கொண்டு படையுடன் போர் செய்தால், நம்மால் அவர்களுக்கு காயம் ஏற்படுகின்றது. அதை தவிர்க்கவே தனியாக போரிட அழைக்கின்றேன் என்றார்.

அனைவரிடம் தயவு, தாட்சிணியம் பார்த்து, “கண்ணோட்டத்துடன்” பழகும் ஏனாதிநாயனாரும், மற்றவர்களுக்கு எதுவும் சொல்லாமல், தனியாக அதிசூரன் அழைத்த இடத்திற்கு போருக்குச் சென்றார். அது அதிகாலை நேரம், கபடமாக திருநீறு அணிந்து, அதையும் மறைத்துக் கொண்டு வந்த அதிசூரன் வாளை வீச, போர் ஆரம்பித்தது.

அதிசூரனின் தாக்குதலை தடுக்க முயன்ற போது, அதுவரை கேடயத்தால் மறைத்திருந்த திருநீற்றை ஏனாதிநாத நாயனார் பார்த்தார். இதுவரை திருநீற்றை அணியாத அதிசூரன், இன்று திருநீற்றை அணிந்துள்ளார். சிவபெரு மானுடைய திருத்தொண்டராக ஆயினார் போலும், இனி இவருடைய குறிப்பு அறிந்து நடப்பேன் என்று எண்ணினார்.

ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்துஆற்றும் பண்பே தலை
579-கண்ணோட்டம்

நமக்கு துன்பம் செய்பவராக இருந்தாலும், அவரிடம் இரக்கம் காட்டி, அவருடைய குற்றத்தை பொறுக்கும் பண்பே சிறந்தது என்று சொல்லும் திருக்குறளின்படி, தன்னை கொல்வதுதான், திருநீறு அணிந்த அதிசூர னின் விருப்பம் என்பதால், அந்த திருநீற்றுக்கு மதிப்பு அளிக்கும் விதமாக, ஏனாதிநாதர் அதி சூரனுடன் சண்டையிடாமல், வெறுமனே வாளும், கேடயமும் ஏந்தி நின்றார்.

இத்தருணத்தைப் பயன்படுத்தி அதிசூரன் ஏனாதிநாதரை கொன்றார்.
ஏனாதிநாதருடைய திருநீற்றின் அன்பை நன்கு அறிந்த சிவபெருமான். அவர் முன் தோன்றி தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்று பதிவு செய்துள்ளார் சேக்கிழார்.

இப்ப சொல்லுங்க… திருக்குறள் சிவனருளைப் பெற உதவும்தானே…!

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt