முருகன் ஆணுக்கு மகனாய்ப் பிறந்தது ஏன்?


அதாவது தாய் வயிற்றில் கர்ப்பவாசத்தில் இருந்து பிறவாதவன் முருகன்.

மகன் முருகன் மட்டுமல்ல. தந்தை சிவனும், தாய் வயிற்றில் பிறவாதவர் தான் என்ற ஒற்றுமை உண்டு. இதனை வள்ளலார் திருவருட்பா கீர்த்தனை யில் பாடியுள்ளார். “தெண்ட னிட்டேனென்று சொல்லடி; சுவாமிக்கு நான் தெண்டனிட் டேனென்று சொல்லடி” என்ற பல்லவியுடன் தொடங்கும் கீர்த்தனையில்

“தாய் வயிற்றில் பிறவாது
தானே முளைத்தவர்க்கு
சாதிகுலம் தெரியாது (தெண்டனிட்ட)
என்று ஒரு சரணவரி. சிவபெரு மான் பிறப்பிலி என்பதை தெரி விக்கிறது. ஆக தந்தை பிறப்பிலி. மகன் ஆணுக்கு பிறந்தவன்.

முருகனின் மாமன் திருமால் தூணில் பிறந்தார் (நரசிம்மம்) ஆக மருகன் ஆணுக்குப் பிறந்தார். மாமன் தூணுக்குப் பிறந்தார். குடும்ப ஒற்றுமை!
முருகன் ஆணுக்கு பிறந்த காரணமும் உண்டு; கதையும் உண்டு.

முற்பிறவிதான் காரணம். மனிதர் களுக்குத் தான் முற்பிறவி; தெய்வத் துக்குமா? என்றால் தெய்வமும் மனிதனாய் பிறப்பதுண்டே! அப்படியானால் முற்பிறவி மட்டும் இல்லாமற் போய்விடுமா? ஆனால் இவை அத்தனையுமே தெய்வநாடகம் தான்!

ஆம், மனிதன் தெய்வத்தை வழிபட உருவம் அமைத்துக் கொண்டான் அதனை ‘அர்ச்சை’ (அர்ச்சாவதாரம்) என்று வேதமும் சொல்கிறது.
உருவங்கள் அமைந்தபின் உறவுகளுமாயின; குடும்பமும் குழந்தை குட்டிகளுமாயின என்று கதைகளும் எழுந்தன. அப்படி ஓர் கதைதான் முருகன் ஆணுக்கு பிறந்தது!

“பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவங்களே” என்று பாடினார் பட்டினத் தடிகள். இது தாரர்களுக்கும் பொருந்தியது. சிவனை (பரம்பொருளை) அவமதித்து தட்சன் செய்த யாகத்தில் தேவர்கள் கலந்து கொண்டனர். அந்த தீவினையின் பலனாக சூரபத்மனின் கொடுமைக்கு ஆளாயினர்.

இதற்கு விமோசனமே கிடையாது. 108 யுகங்களாக 1008 அண்டங்களையும் ஆட்டிப் படைக்கிறானே” இந்திரனின் புலம்பல்.
“கலங்காதே; தேவேந்திரா. பிரம்ம குமாரன் சிவபெருமானுக்கு அளித்த வரத்தின் பயனாக நீங்களும் துயர் நீங்கி பயனடையப் போகிறீர்கள்” என்றது நாரதரின் அபயக்குரல்!

“என்ன சுவாமி சொல்கிறீர்கள்? பிரம்ம குமாரன் தாங்கள்தானே? தங்களால் எங்களுக்கு விமோசனமா? புரியவில்லையே சுவாமி! சிவனுக்கே வரம் தந்த பிரம்ம குமாரன் யார் சுவாமி? விளக்கமாக சொல்லுங்களேன்”

“சொல்கிறேன்; தேவேந்திரா சிவனுக்கு வரமளித்த பிரம்ம குமாரன் பிரம்மாவின் மானஸ புத்திரன். அனைத்துலகிலும் முதன்மை யான ஞானியாய் திகழ்ந்தவர். உமையவளும் சிவனும் அந்த ஞானியை கண்டு வரச் சென்ற னர். அப்போது பிரம்ம குமாரர் தீவிரமான தவத்திலாழ்ந்திருந்தார். உமா மகேஸ்வரர் காத்திருந்தார்.

கண்விழித்த பிரம்ம குமாரர் முன் உமாபதி நிற்பதைக் கண்டார். கை தொழுது வணங்கி னார். “பிரம்ம குமாரா உன்னைக் கண்டதும் கோடிக்கணக்கான பிரதோஷ பூஜைகளை ஏற்ற மகிழ்ச்சி உண்டாகிறது! என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார் சிவன்.

“சிவபெருமானே, எதையும் எதிர் பார்த்து யாம் தவமிருக்கவில்லை, வேண்டுமானால் தாங்கள் என்னிடம் ஏதாவது வரம் கேளுங்கள்; தருகிறேன்” இந்த பதிலின் மூலம் பிரம்ம குமாரன் ஒப்பற்ற தேவஞானி என்பதை உணர்ந்து கொண் டார். இந்த பிறவியில் பிரம்ம குமாரனாய் அவதரித்த நீ அடுத்த பிறவியில் எனது குமார னாக (சிவமைந்தனாய்) அவதரிக்க வேண்டும்”

“அப்படியே ஆகட்டும். அம்மையே தங்களுக்கு ஏதாவது…?”

“எனக்கு தனியே வரம் தேவையில்லை பிரம்ம குமாரா. ஈசன் கேட்ட வரத்திலேயே பத்தினிக்கு பாகம் (பங்கு) உண்டல்லவா? ஈசனுக்கு மகன் என்றால் என் வயிற்றில் தானே நீ பிறந்தாக வேண்டும்? அது போதுமே எனக்கு” என்றாள் உமாதேவி.

“அது முடியாது தாயே, நான் கர்ப்ப வாசத்தின் மூலம் பிறக்க விரும்பவில்லை. மேலும் ஈசன் சிவமைந்தனாய் பிறக்கவேண்டு மென்றுதான் கேட்டார். உமாபதியின் மகனாய் பிறக்கவேண்டுமென்று கேட்கவில்லையே? எனவே நான் சிவனுக்கே மைந்தனாய்த் தான் பிறப்பேன்” என்று வணங்கி இருவரையும் தொழுதான் பிரம்மகுமாரன்.

ஈசனும், பார்வதியும் கயிலை திரும்பினர்.

நாரதர் கதையைத் தொடர்ந்தார். “தேவேந்திரா, பிரம்மகுமாரனே சிவமைந்த னாய், முருகனாய் அவதரிக்கப் போகிறான். அவனே சூரனை வென்று உங்களைக் காப்பான். கவலையை விடு”

இந்திரனுக்கு மீண்டும் சந்தேகம். “அது எப்படி முடியும் சுவாமி? சிவசக்தி மைந்தனால் தான் சூரனுக்கு மரணம் நேரும் என்றல்லவா வரம் வாங்கி இருக்கிறான்?”

“இந்திரா உனக்கே இந்த யோசனை வந்துவிட்டபொழுது இறைவனுக்கும் இதே யோசனை வந்திருக்காதா என்ன?”
சிவனின் தீப்பொறிகள் ஆறில் ஆறு குழந்தை களாய் தோன்றும் முருகனுக்கு சூரனை அழிக்கும் சக்தி வேண்டாமா? அந்த சக்தியைத் தரப்போகிறவள் சக்தி தேவியேதான்!”

“நெருப்பில் (நெற்றிக்கண்ணில்) பிறப்பவன் நீரில் (சரவணப்பொய்கையில்) வளரப்போகி றான். உமையவள் முன்னதாகவே சரவணப் பொய்கையாக்கி காத்திருக்கிறாளப்பா இந்திரா. நீங்கள் கவலையை மறந்து கொஞ்சகாலம் நிம்மதியாய் இருங்கள். நாராயண; நாராயண!

ஆறு குழந்தைகளை தாயுருவில் வந்த உமையவளே அள்ளி அணைத்தாள். ஆறுமுக மும் ஒருடலுமானான் என்ற கந்தபுராணக் கதை நாம் அறிந்ததே. காரணமும் அறிந்தோம்; கதையும் முடிந்தது.

செய்த்தொண்டர்மாமணி
எம்.எஸ்.சுப்பிரமணியம்

‘ஓம் சரவணபவ’

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt