அருணகிரிநாதரின் கந்தரநுபூதி

ஆனந்தி இரத்தினவேலு, (சிகாகோ)

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

  – திருநாவுக்கரசர் தேவாரம்

முருகனின் மாசிலா அடியார்கள் கந்தரநுபூதி விட்ட வழியிலே இபமுகத்தானை பணிவுடன் வணங்கியும், பக்தர் கணப் ப்ரியனை வாயாரப் பாடியும் பற்பல இடையூறுகளையும் கடந்து செந்திலாண்டவனின் பாதத்தாமரைகளை அடைந்து விட்டனர். இலக்கை அடைந்து விட்டால் மட்டும் போதுமா? முருகனின் திரு வடியிலேயே நிரந்தரமாக இருக்க வேண்டு மல்லவா? யமன் வந்து காரியத்தைக் கெடுத்து விடக்கூடாது அல்லவா? எனவே யமன் வந்து கலகம் செய்யும் நாளில் சாகாது காக்க வேண்டு மென பின்வரும் பாடலில் வேண்டுகிறார்.

இறவாவரம்தாராய் !
சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில் வாகனனே
யோகா சிவஞா னோபதே சிகனே.

கந்தரநுபூதி -41

‘வெற்றிவாகை சூடும் அழகனே! முருகனே! மயில்வாகனனே! யோகாதிபதியே! சிவனுக்கு ஞானோபதேசம் செய்த குருவே!  யமனார் என் உயிரை கலக்கி எடுக்கவரும் வேளை, இறவாமல் என்னை நின் திருவடிகளிலேயே சேர்த்து வைத்துக் கொண்டுக் காப்பாயாக!’ என மேற்கொண்டப் பாடலிலே சிவஞான யோகாதிபதியேத் தன்னை அவனிடமே இருத்திக் கொள்ளவேண்டு மென்கிறார்.  அவ்வாறு முருகப்பெருமான் அடியிலேயே அடியார்கள் மீளாமல் இருக்க, அவர்கள் என்ன செய்யவேண்டுமென அடுத்தப் பாட லிலே முருகப்பெருமான் தனக்கு உணர்த்திய வழியை பெருமையுடன் காட்டுகிறார்.

முருகா! உள்நின்று உபதேசித்தவனே!
குறியைக் குறியாது குறித் தறியும்
நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையும்அற் றதுவே.

கந்தரநுபூதி -42

‘தியானிக்கப்படுகின்ற பொருளை நினைந்து, பிறவற்றை குறித்து எண்ணாது, குறித்தப் பொருளையே தியானித்து, இறைஞானத்தால் அறியும் உண்மை நெறியை ஒப்பற்ற வேலையுடைய முருகன் குருவாய் என் உள்ளே வந்து உணர்த்தியவுடன், உலத்தினருடன் உள்ள உறவும்,  வாக்கும், சிந்தனையும், அறிவும், அறியாமையும் அற்றுப் போய்விட்டதே!’ என அழகாய் முருகனையே தியானித்தால், நம் மனம் அவனிடமே ஒடுங்கி, ‘நீவேறெனாதிருக்க நான் வேறெனாதிருக்க’ எனத் திருப்புகழிலே கூறுவதுப் போல முருகனுடன் இணைந்த சுவாநுபூதி நிலையைத் தரும் என்கிறார். முருகனையேத் தியானிக்கும் இந்த நிலை எப்படிக் கிடைக்கும், எல்லா ஆசைகளும் தூளாயினப் பின் என அடுத்து வரும் பாடலில் அடியார் பெரும் அநுபூதி நிலையைக் கூறுகிறார்.

பேசா அநுபூதி அளித்தவனே!
தூசா மணியுந் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளந் துகளா யினபின்
பேசா அநுபூ திபிறந் ததுவே.

கந்தரநுபூதி -43

‘அலங்காரமாகமணிகளையும், ஆடையையும் அணிபவளாகிய வள்ளியின் நண்பனே! முருகா! ஆசைஎன்னும் விலங்கு துகள் ஆயின பின் மௌனம் எனும் ஞான அநுபூதிநிலை பிறந்ததுவே!’ என்கிறார். இப்பாடல், கந்தரநுபூதிப் பெருமையைக் காட்டுகிறது.

ஆத்மபயணத்தை மேற்கொள்ளும் முருகன் அடியார் பெறும் அநுபூதி நிலை, முருகனின் திருவடிதீஷை, மற்றும் மெய்ப்பொருள் உபதேசம் ஆகியவற்றின் பெருமைகளை எடுத்துரைத்த அருணகிரிநாதப் பெருமான், எப்படி அவர்கள் முப்பத்தாறு தத்துவநிலை களையும் கடந்து, கவலையற்று, கேடுஅற்று, பேரானந்தப் பேற்றை குமர குருப்பெருமானால் பெறுவர் என்பதை இனிவரும் பாடல் களில் எடுத்துரைக்கிறார்.

(தொடரும்)   

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt