கால்முறிவா? சூல்முறிவா?

கால்முறிவா? சூல்முறிவா?

1923ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 27ஆம் நாள் பகல் சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, நான்கு குதிரைகள் பூட்டிய கோச் வண்டி ஒன்று மோதியது. சுவாமிகளின் இடது கணைக்கால் மீது வண்டிச்சக்கரம் ஏறி நின்றதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவ்வமயம் சுவாமிகட்கு எல்லா உதவிகளையும் திருவல்லிக்கேணி சோதிடர் சுப்பிரமணிய தாசரும், அவரது மனைவி பாப்பாத்தி அம்மாளும் செய்தனர். சுவாமிகள் உப்பு நீத்து உண்டவர் என்பதால் கால் எலும்பு கூடுதல் அரிதென ஆங்கில மருத்துவர்கள் கூறிவிட்டனர். சுவாமிகள் அமைதியாகத் தம்மைப் பார்க்க வந்தோரிடம் எல்லாம் “சண்முக கவசம்” ஓதுக என கட்டளை இட்டார்கள். மூவரே அவ்வாறு சண்முகக் கவசம் ஓதத் தொடங்கினர். மூவருள்ளும் சுப்பிரமணிய தாசர் எனும் சின்னசாமிப் பிள்ளைக்கு அருட்காட்சி கிட்டியது. சுவாமிகள் ஸ்ரீமத் குமாரசுவாமியத்தில் இதனைப் பதிவு செய்கின்றார்கள்.
“அசோக சால வாசம்” எனும் தலைப்பின் கீழ் –

“மூவரே சண்முகக் கவசம் சொலும்
நாவராயினர் தத்தம் இன்னணியம்
மூவருள்ளும் முன்னாம் அல்லிக் கேணியான்
மாவுரம் கொடு நீடு வழங்கினான்
காலாறும் சொல் எழுங்கடியின் முரி
காலிரண்டு படாதிரு கட்டு வேல்
மேலின் மாட்டியொர் வேலின் நிறுத்த அக்
காலை நன் கெதிர் கண்டனேனே அவன்.”

இவ்வாறு சண்முக கவச பாராயணத்தை சின்னசாமி சோதிடர் நிகழ்த்தும் போதெல்லாம் சுவாமிகளின் முறிந்த காலும் அதை இருவேல்கள் தாங்கி நிறுத்திப் பொருத்தும் காட்சியையும் கண்டு அட்சோதிடர் பேருவகை அடைந்தார். கலியுகத்தில் இவ்வாறு நிகழ்ந்த அற்புதமானது கந்தன் கருணைக்கோர் நந்தா விளக்காய் நானிலத்தில் ஒளி பாய்ச்சுகிறது.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt