சுவாமிகளின் பாடல் தொகையும் பலன்களும்

சுவாமிகளின் பாடல் தொகையும் பலன்களும்

1. முதல் மண்டலம் – குமரகுருதாச சுவாமிகள் பாடல்

2. இரண்டாம் மண்டலம் – திருவலங்கற்றிரட்டு 2 கண்டங்கள்

3. மூன்றாம் மண்டலம் – காசியாத்திரை, பரிபூரணானந்தபோதம், தகராலய ரகசியம்

4. நான்காம் மண்டலம் – சிறுநூற்றிரட்டு, திருத்தலத்தரிசனத்தின் போது பாடிய கட்டளை கலித்துறை, சேந்தன்செந்தமிழ், பத்துப் பிரபந்தம், குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி, குமாரஸ்தவம், செக்கர் வேள் செம்மாப்பு, செக்கர் வேளிறுமாப்பு, சீவயாதனா வியாசம்.

5. ஐந்தாம் மண்டலம் – திருப்பா

6. ஆறாம் மண்டலம் – ஸ்ரீமத் குமார சுவாமியம்

இப்படி ஆறாயிரத்தறுநூற்றறுபத்தாறு பாக்களைச் செவ்வேட் பரமனுக்கு சூட்டிய பெருமையோடு சாத்திர நூல்களாகத் திருப்பா, பரி்பூரணானந்தபோதம், தகராலய ரகசியம் எனும் மூன்று நூல்களையும் சுவாமிகள் நமக்கு வழங்கினார். வடமொழி நூலார் மரபையொட்டி திருப்பா முதல் 10 பாடல்களுக்கு “திட்பம்” எனும் உரையும் பரிபூரணானந்தபோதத்துக்கு சிவசூரியப்பிரகாசம் எனும் உரையும் தகராலய ரகசியத்துக்குச் சதானந்த சாகரம் என்ற உரையும் வழங்கி உரையாசிரியர் ஆனார்கள். காசியாத்திரை என 608 பாடல்கள் பாடி முதற் பயண நூல் படைத்தவர் ஆனார்கள். 1906 ஆண்டு வடமொழி தவிர்த்து 50 வெண்பாக்களில் “சேந்தன் செந்தமிழ்” பாடி முதல் தனித்தமிழ் பனுவல் படைத்த “பாமணி” ஆனார்கள்.

சைவசமயசரபம்,நாலாயிரப்பிரபந்த விசாரம் படைத்ததன் மூலம் வாதநூல் வல்ல “பரசமயக் கோளறி” ஆனார்கள்.

கு-எனில் அறியாமை, ரு-எனில் அதைப் போக்குபவன்
கு-எனில் குணம், ரு-எனில் ரூபம், குணமும் ரூபமும் கொண்டவன் குரு – அவனை வழிபடுவோர்க்கு இவ்விரண்டு நலனையும் அருள்வான்.

கு-குருடு, ரு-அறிவு ஒளி-குருட்டு விழிக்கு அறிவு ஒளி அளிப்பவனே குரு.
அவனை நாட அவனருள் கூட அவன் பாடிய 6666 பாடல்களுமே நமக்குத் துணை – ஜனனக் கடல் கடக்க நாம் பிடிக்கும் புணை, துணை, எல்லாம் அவையே!

ஆறாயிரத்தருநூற்றறுபத்தாறையும் பாடிப் பரவிப் பரமனை வழிபடுவோர் – இகபர சௌபாக்கியங்களையும் பெற்று மரணமிலாப் பெருவாழ்வாம் மாண்படைவர்.

தமிழகத்தில் தோன்றிய தவசீலர்களில் சுவாமிகள் ஒருவரே தமது பாடல்களுக்கு இன்னின்ன பலன்கள் கிட்டுமென்று வரையறுத்து வாக்களித்தவர், முருகனிடம் வாக்குறுதி பெற்றவர்.

“நான் பாடு பாட்டை நவில்பவர்க்கு நலம் நல்காய்
கான்பாடு வண்டறையும் கழுகுமலை முருகா”

“எனைத் தள்ளினாலு மெனை நம்பினவர்த் தள்ளேல்
கனைத் தண்டை சிலம்ப வரும் கழுகுமலை முருகா”

துன்புறுத்தும் நோயிலிருந்து விடுபடக் – குமாரஸ்தவம்

உலகில் நடைவருத்தும் பகைஒழிய – பகைகடிதல், சங்கடம் தரும் வழக்கு, சதிகாரர்களின் சழக்கு, வழிச்செலவில் வரும் ஆபத்து இவை களிலிருந்து நமைக் காக்க – சண்முக கவசம்

மகப்பேறு பெறுவதற்கு – வேற்குழவி வேட்கை

பாபநாசம், சத்துருநாசம் ஆயுள்விருத்தியுடன் சர்வார்த்த சித்தியும் முக்தியும் பெற- — அட்டாட்ட விக்ரக லீலை பாராயணம் செய்து பயன்பெறுவீர் பக்தர்களே!

இவ்வாறு நாள் தோறும் உணவு உண்பதற்கு முன் ஒள்வேள் கடவுளாகிய ஒப்பற்ற முருகனுக்கு வாடும் பூமாலை சூட்டாமல் வாடாப் பாமாலை சூடி வழிபட்டார் அப்பாவு எனும் குமரகுருதாசர் – அப்பொழுது சுவாமிகள் பெற்ற பேரின்பம் தான் என்னே?

பாடியே அறியா எளியேன் வாய்
பாடலுள் கிருபை எனவும் நினைந்தேன்
நேடியே அறியாத என் நினைவு
நினை நினைந்திடல் கருதியும் மகிழ்ந்தேன் –

இவ்வாறு பாடலோர் பாடி முடித்தபின் அவற்றை ஒரு நோட்டுப்புத்தகத்தில் சுவாமிகள் எழுதி வைத்திருந்தார்கள் .

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt