சென்னை செல்லக்கட்டளை

சென்னை செல்ல கட்டளை

சுவாமிகள் துறவு பூண்டபின் மீண்டும் தலயாத்திரை மேற்கொண்டார். பல தலங்கள் சென்று முருகனின் எழிலுருவை வழிபட்டு ஈடில்லா மகிழ்ச்சி கொண்டார். சுவாமிகள் விக்ரக வழிபாட்டைப் பெரிதும் வலியுறுத்தியவர்கள். முதல் மண்டலமாகிய குமரகுருதாசர் பாடலில் அறுபடை வீட்டு அலல்கலில் திருச்செந்திலைப் பாடும் பொழுது.

“மெய்யான திருமேனி இலக உருவம் கொண்டு
மெய்யருள் பெருக்கியருளும்
எண்ணம் உணராத புன் மதத்தர் உருவிலை என்பர்
யாகங்கள் உனை விடுவதுண்டோ?
இஞ்சிவளை மந்திரமலி செந்திலில் அமர்ந்தஎழில்
எந்தையே கந்த சிவமே.”

திருவுருவ வழிபாட்டில் ஊன்றி நிற்போர் இப்புவியில் அழியாத மேனி எழிலோடு குகசாயுச்சிய நிலைபெறுவர். அருவ வழிபாடு புரிவோர்க்கு அந்நிலை கிட்டாது எனத் தியானாநு பூதி நூலில் தண்டபாணி சுவாமிகளும் உரைத்தனர். அருவ வழிபாட்டில் ஊன்றியதால் தாயுமானவர் மேனி எரியூட்டப்பட்டு சிதைவுற்றது. உருவ வழிபாட்டில் ஊன்றியதால் அருணகிரிநாதர் உடல் சிதைவுற்ற போதிலும் கிளி உருவில் கந்தர் அநுபூதி பாடினாரென அந்நூலில் வண்ணச் சரபனார் கூறியுள்ளமை காண்க. இக்கூற்றால் உருவ வரிபாட்டின் மேன்மை உணரப்படும். அருவ வழிபாட்டில் ஈடுபட்ட கரணியத்தால் வள்ளலார் மறைவும் பலவாறு உலகில் பழித்துப் பேசப்பட்டமையையும் உய்த்துணர்ந்து கொள்க.

“தேட்டிலே மிகுந்த சென்னை சேர்” என்று கந்தவேள் கட்டளையிட சுவாமிகள் உள்ளம் கலங்கினார். சுவாமிகளின் உள்ளக் கலக்கம் குருத்துவத்தில் கூறப்பட்டவாறு –

தேட்டில் மிகுந்த சென்னையிலே
தெற்குச் சாமியை யார் மதிப்பார்?
வீட்டில் வைத்தே உணவூட்ட
விரும்பும் அடியார் உள்ளாரோ?
நாட்டில் எனக்கு உனையன்றி
நம்பத் தக்கார் யாருண்டு?
ஓட்டும் சிவித்தேர் ஊர்வோனே
உள்ளத் துயரை ஓட்டாயோ?

எனச் சுவாமிகள் மதுரையில் தொடர் வண்டியில் ஏறியதும் அமுது கண்ணிர் சொரிந்தார். அடியார் கலக்கத்தை ஆறுமுகன் பொறுப்பானா? சென்னை வைத்தியநாத முதலி தெருவில் 41ஆம் எண் இல்லத்தில் வாழ்ந்து வந்த மூதாட்டி (குமாரானந்தம் அம்மை) கனவில் சுவாமிகள் தோன்றி “எனக்கு அன்னமிடுக” என்று உரைப்பது போல் முருகனருள் செய்தது விந்தையிலும் விந்தை! மறுநாள் சென்னையில் சுவாமிகள் அதே வீட்டின் வாயிலில் திகைத்து நிற்க அம்மையார் விரைந்து வந்து சுவாமிகளை வணங்கி உபசரித்தார்கள். பின்னர் சுவாமிகள் அம் மூதாட்டிக்குத் தீக்கை நல்கி “குமாரானந்தம்” எனப் பெயர் சூட்டினார்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt