நல்லன எல்லாம் தரும் ஸ்ரீ நாகேஸ்வரர்


ரண்டு மாதங்களுக்கு முன்பு குலதெய் வத்தைத் தரிசிக்க திருத்தணி சென்றேன். சில வருடங்களாக திருத்தணி சென்று திரும்பி வரும்பொழுது வளர்புரம் சென்று ஸ்ரீ நாகேஸ்வரரை கட்டாயம் தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.
என்னுடைய வயது, உடல்நலக்குறைவு, இரண்டையும் கருத்தில் கொண்டு சில ஆண்டுகளாக காரில் திருத்தணி சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். காரில் சென்று வர செலவு அதிகம் ஆகும். அடியேனால் முழுச்செலவையும் ஏற்க இயலாத நிலையில், என்னுடைய பெரிய தகப்பனாரின் மகன் திரு.எம்.எஸ்.நாகராஜன் அவர்கள் எனக்கு உதவ முன் வந்து, அவரும் என்னுடைய அண்ணியும் உடன் வந்தார்கள்.
நீண்ட காலத்திற்குப் பிறகு தணிகைமலைக் குமரனின் அபிஷேகம் காண முடிந்தது. வரும்பொழுது வளர்புரம் சென்று என்னு டைய நீண்டநாள் கனவான, ஸ்ரீ நாகேஸ் வரரை தரிசனம் செய்தேன்.
என்னுடைய அண்ணன் திரு.நாகராஜன் அவர்கள் துணை வர, ஸ்ரீ நாகேஸ்வரர் தரிசனம் கிடைத்தவுடன், எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. பெயர்ப் பொருத்தம் காண்க. இந்த சமயத்தில் மற்றொரு விஷயத்தையும் நான் குறிப்பிட வேண்டும். வளர்புரத்தில் சில ஆச்சரியங்கள் எனக்குக் காத்திருந்தன.
வளர்புரம் ஸ்ரீ நாகேஸ்வரர் கோயிலை சமீபத்தில் திருத்தணி கோயிலின் உப கோயிலாக இணைத்திருக்கிறார்கள் என்ற செய்தியினை யும், அங்கே அர்ச்சகராகப் பணி புரிந்து கொண் டிருப்பவர், தினமும் 50 கி.மீ பயணம் செய்து இங்கே வழிபாடு நடத்த வருகிறார் என்ற தகவலை யும் பெற முடிந்தது.
மேலும் ஒரு ஆச்சரியத் தகவல் எனக்குக் கிடைத்தது. அவர் நாகப் பூண்டி (தெலுங்கில் பெத்தநாகபூடி) என்ற ஊரிலி ருந்து தினமும் வருகிறார் என்று தெரிந்தது. அங்கும் இறைவன் பெயர் ஸ்ரீ நாகேஸ்வரன். அந்த ஊரில் இருந்த அந்தணர்களில் ஒரு பகுதியினர் என்னுடைய தாயாதிகள் என்று எனக்கு ஏற்கனவே தெரியும்.
வளர்புரம், தலவரலாறு பற்றி அறிந்து கொள்ள முயன்றபொழுது, அந்தச் சிவலிங்கம் ஆதிசேஷன் வழிபட்டது என்ற ஒரு தகவலைத் தவிர வேறு எந்த விஷயமும் எனக்குக் கிடைக்கவில்லை. நாகபட்டினத்தில் கோயில் கொண்டுள்ள ஈசனையும், ஆதிசேஷன் வழிபட்டதாக புராணம் கூறுகிறது. ஆகையால் என்னுடைய நண்பர் அவ்வூரைச் சேர்ந்தவர் என்பதால் அவரிடம் தொடர்பு கொண்டேன். அவர் மூலமாகச் சில தகவல்கள் பெற முடிந்தது. அவர் பெயரும் திரு.நாகராஜன்.

காரைக்கால் அம்மையார் திருவாலங்காடு சென்ற பொழுது இங்கு வந்து ஸ்ரீ நாகேஸ் வரரை தரிசித்துவிட்டுப் பிறகு சென்றதாக கர்ண பரம்பரையாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன் சிவனைத் தொழ வேண்டிய காரணம் என்னவென்று அறிந்து கொள்ள முற்பட்டபொழுது நாகைப் புராணத் தில் அதற்கு விடை கிடைத்தது. திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்ட தலவரலாற்றில் 2506 பாடல் களில் நாகைத் தலவரலாறு கூறப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் நாகலோகத்தை ஆதிசேஷன் ஆண்டு வந்தாராம். நற்குணமுடைய மனைவி யோடு நெடுங்காலம் விரதம் இருந்தும், அவருக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. குழந்தைப்பேறு பெறக்கருதி தன்னுடைய மனைவியோடு நாகலோகத்தை விட்டு இந்தப் பூவுலகிற்கு வந்தார். வசிஷ்ட முனிவரைத் தரிசித்து தன்னுடைய குறையைக் கூறினார். அவருடைய அறிவுரைப்படி ஈசன் குடி கொண்ட கோயில்களுக்கெல்லாம் சென்று வழிபட்டார். அப்படி அவர் வழிபட்ட ஈசனின் கோயில்கள் எல்லாம் நாகேஸ்வரம் என்று அழைக்கப்பட்டன. வளர்புரத்திலும் ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தினால் சிவலிங்கத்திருமேனி ஸ்ரீ நாகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
பல கோயில்களில் ஈசனை வழிபட்ட ஆதிசேஷன் குடந்தை சென்று கீழ்கோட்டத்தி லுள்ள ஈசனை வழிபட்ட பிறகு, சண்பகாரண்யம் என்னும் திருநாகேஸ்வரம் சென்று அங்கும் ஈசனை வழிபட்டு அடுத்து திருப்பாம்புரம் சென்று அங்குள்ள பெருமானை வழிபட்டு, இறுதியாக நாகைக்காரோணத்தை அடைந்து அங்கு மனமுருகி ஈசனை வழிபாடு செய்த பிறகு, ஈசனின் காட்சி கிடைத்தது. சர்வேஸ் வரன் அருளால் ஆதிசேஷனுக்கு பெண் குழந்தை பிறந்தது. தான் வழிபட்ட சிவலிங்கங் கள் யாவும் தன்னுடைய பெயரால் நாகேஸ்வரர் என்று அழைக்கப்படவேண்டும் என்று ஆதிசேஷன் வேண்டியபடி எல்லாக் கோயில் களும் நாகேஸ்வரமாக அழைக்கப்படுகின்றன.
ஆதிசேஷன் காலையில் குடந்தை கீழ்க் கோட்டத்திலும், உச்சிப்பொழுதில் திருநாகேஸ் வரத்திலும், மாலையில் திருப்பாம்புரத்திலும் வணங்கி விட்டு, அர்த்தஜாமத்தில் நாகப் பட்டிணத்தில் வழிபடுவார், என்று நாகைப் புராணம் கூறுகிறது.

ஆதிசேஷன் வழிபட்ட இந்த சிவலிங்கம் நீண்ட நாள் கள்ளிச்செடிகள், முட்புதர்களால்  மறைக்கப்பட்டு, பூஜையில்லாமல் கோயில் பாழடைந்த நிலையில் இருந்தது. 1917ம் ஆண்டு இத்தலத்தில் வாழ்ந்து வந்த மத்தால சுப்பிரமணிய சாஸ்திரிகள் களத்துமேட்டில் படுத்திருந்த சமயத்தில் சிவபெருமான், பிராமண வேடத்தில் வந்து அவரை எழுப்பி, தன்னை வழிபாடு செய்யச் சொல்லி மறைந்தாராம். ஆனால் சாஸ்திரிகள் எந்தவித முயற்சியும் எடுக்காதிருந்த நிலையில், மறுபடியும் ஈசன் அதே பிராமண வேடத்தில் தோன்றி, வெள்ளிப் பிரம்பினால் அவரைத் தட்டி எழுப்பி அவரை அழைத்துச் சென்று சிவலிங்கம் இருக்குமிடத்தைக் காட்டி மறைந்தாராம். சாஸ்திரிகள் மறுநாள் ஊர்மக்கள் துணையோடு புதர்களை அகற்றி சிவலிங்கத்தைக் கண்டுபிடித்தாராம்.
அக்காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் பல கோயில்களுக்குச் சென்று அங்குள்ள பரமேஸ்வரனை வழிபட்டு கோயில்களின் திருப்பணிக்கும் உதவி செய்து குடமுழுக்கு காண வகை செய்துள்ளனர். தேவாரத்தலமான திருக்காளத்தியில் அந்த சமயத்தில் தேவ கோட்டை லே.அரு.ராமநாதன் செட்டியார், அரு.இராம.அருணாசலம் செட்டியார் ஆகியோர் திருப்பணியில் ஈடுபட்டிருந்தனர். சாஸ்திரிகள் அவர்களை அழைத்து வந்து, வளர்புரம் கோயிலுக்கு உதவ கேட்டுக் கொண்டார். சாஸ்திரிகளிடம் பேசி விட்டு செட்டியார்கள் திருத்தணி சென்றார்கள்.

மறுநாள் காலை திருத்தணி குளத்தில் நீராடிக்கொண்டிருந்த செட்டியாருக்கு சாஸ்திரிகள் துணி துவைத்து கொடுத்தாராம். செட்டியாருக்கு அந்தச் செயல் ஆச்சரியத்தைத் தந்ததாம். ஆனால் செட்டியார் வெளிக் காட்டிக் கொள்ளாமல் பேசாமல் இருந்து விட்டாராம்.
ஆனால் அன்று மாலை வளர்புரத்தில் வசித்து வந்த சிவனடியார்களுடன் சாஸ்திரி கள் செட்டியாரைப் பார்க்க போயிருக்கிறார். அந்த சமயத்தில் செட்டியார் சாஸ்திரிகளைப் பார்த்து, காலையில் திருக்குளத்தில் துணி துவைத்துக் கொடுத்தீர்களே? அதன்பிறகு எங்கு சென்றீர்கள்?” என்று கேட்டிருக்கிறார்.
உள்ளூர் அன்பர்களுடன் வளர்புரத்திலி ருந்து மாலையில்தான் புறப்பட்டு வந்ததாகவும் அப்படியிருக்கும்பொழுது காலையில் எப்படி துணி துவைத்துக் கொடுத்திருக்கமுடியும் என்று சாஸ்திரிகள் வினவ, செட்டியாருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இறைவன் எவ்வளவு எளியவனாக வந்து உதவி செய்தது செட்டி யாரின் கண்களில் நீரை வரவழைத்தது.
வளர்புரத்தில் வசித்து வந்த தூரி, சுப்பா ரெட்டியார், இக்கோயிலின் திருப்பணிக்கு பெரும் பங்கு வகித்து அந்தக்காலத்திலேயே சுமார் 2 லட்சம் அளவில் நிதியுதவி செய்த தாகத் தெரிகிறது. நாட்டுக்கோட்டை செட்டி யார்களும் தாராளமாக நிதியுதவி செய்திருக்கின்றனர்.
கோயில் திருப்பணி 1917 ம் ஆண்டு ஆரம்பித்து, 1930-ம் ஆண்டு முடிவு பெற்று, அதே ஆண்டில் மே மாதம் 4-ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. தற்பொழுது திருத்தணி தேவஸ்தான உபகோயிலாக இக்கோயில் விளங்குகிறது.

இக்கோயிலுக்கு திருப்பணி செய்து கொண்டிருந்த காலத்தில், கோயிலின் மேற்கூரைக்கு மரக்கொம்புகளால் வேய சாஸ்திரிகள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் சாஸ்திரிகள் கனவில் சுமங்கலி வடிவில் அம்பாள் தோன்றி, கற்களால் கட்டப்பட்ட கோயிலே பழுதடையும்பொழுது, மரக்கொம்புகள் எவ்வளவு நாள் தாங்கும் என்று கேட்டிருக்கிறாள். கற்கள் கிடைக்கவில்லையே என்று சாஸ்திரிகள் பதில் கூறியிருக்கிறார்.
இந்தக் கோயிலுக்கு வேண்டிய கற்களை நானே தருகிறேன். நான் ஒரு இடத்தில் குறியிடு கிறேன். அங்கு போய் பார்த்தால் கற்கள் கிடைக்கும்” என்று கூறி அம்பிகை மறைந்தாள்.
சாஸ்திரிகள் ஏரியில் சென்று பார்க்க, கனவில் வந்தது போல் குறி காணப்பட்டது. அங்கு மண்ணை அகற்றிவிட்டுப் பார்க்க ஒரு பெரிய பாறை தென்பட்டது. அங்கு கிடைத்த கருங்கற்களைக் கொண்டு அவ்வளவு பெரிய கோயிலைத் திருப்பணி செய்தார்.

இந்தக் கோயில் உறுதியான மதில் சுவற்றுடன் முகப்பு வாயில் மேற்குப்புரம் பார்த்த நிலையில், ஒரு அழகிய முன் மண்ட பத்துடன் இரு பக்கமும் திண்ணைகளுடன் விளங்குகிறது. மண்டபத்தின் மேற்கூரையில் ஆடும் கூத்தன், சிவகாமி, மாணிக்கவாசக ஸ்வாமிகள் ஆகியோரின் சுதைச் சிற்பம் உள்ளது. முகப்பு வாயிலுக்கு மேல் மூன்று நிலைகளுடன் பாழடைந்த நிலையில் ஒரு ராஜகோபுரம் உள்ளது. அதில் கலசங்கள் ஏதும் இல்லை.
கோயிலுக்குள் நுழைந்தவுடன் நமக்கு இடப்புறம் சித்தி விநாயகர் தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். அவரை தரிசித்துக் கொண்டு இடப்புறம் உள்ள ஒரு வாயிலுக்குள் நுழைந்தால் உட்கோயிலை அடையலாம்.
கருவறை சற்று உயரமாகக் கட்டப்பட்டுள் ளது. சில படிகள் ஏறித் தான் உள்ளே போக வேண்டும். அந்தப்படிகள் ஏறும் இடத்தில் இரு தூண்கள் உள்ளன. நமக்கு இடப்புறம் உள்ள தூணில் இந்தக் கோயிலைத் திருப்பணி செய்த மத்தால சுப்பிரமணிய சாஸ்திரிகளின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வலப்புறம் அவருக்கு துணையாக இருந்து நன்கொடைகள் பெரிய அளவில் வழங்கிய சுப்பாரெட்டியாரின் உருவம் செதுக்கப் பட்டுள்ளது.
படிகள் ஏறி இடப்புறம் திரும்பினால் கருவறையில் சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ நாகேஸ்வரரைத் தரிசனம் செய்யலாம். சதுர ஆவுடையார் சுமார் 3 அடி உயரம் உள்ள லிங்கத் திருமேனியை, கிழக்குப் பார்த்த நிலையில் தரிசனம் செய்து கொள்ளுகிறோம்.
கருவறை தரிசனத்தை முடித்துக் கொண்டு பிராகாரத்தை வலம் வரும்பொழுது பஞ்ச கோஷ்டத்தில் கணபதி தக்ஷிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வங்களை தரிசனம் செய்யலாம்.
மேலும் நவகிரகங்களும், சேக்கிழார், விநாயகர், காசி விஸ்வநாதர் விசாலாட்சி, வலப்புற மயில் வாகனத்தில் காட்சி தரும் ஷண்முகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர் மகாலட்சுமி ஆகிய தெய்வத் திருவுருவங் களைத் தரிசனம் செய்து கொள்கிறோம்.
பிராகாரத்தில் சண்டிகேஸ்வரரை தனிச் சந்நிதியில் தரிசனம் செய்யலாம். அம்பிகை ஸ்ரீ சொர்ணவல்லியின் சந்நிதி தெற்குபார்த்த நிலையில் பிராகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது. மேல் இரு திருக்கரங்களில் பாசமும், அங்குசமும் உள்ளது. கீழ் இருத்திருக்கரங்களை அபய, வரதமாய் இருக்கக் காண்கிறோம். அம்பிகையின் பாதத்திற்க்கருகில் ஸ்ரீ சக்கரம் உள்ளது.
அம்பாள் சந்நிதியை வலம் வரும்பொழுது அக்னி பைரவரை தரிசனம் செய்து கொள்ள லாம்.

உபயதாரர்கள் மூலமாக இக்கோயிலில் பிரதோஷம், நவராத்திரி, சிவராத்திரி, கார்த்திகை தீபம், ஆடிபூரம், அன்னாபிஷேகம், தனுர் மாத பூஜைகள், தைப்பூசம் சஷ்டி சூரசம்ஹாரம், ஆரூத்ரா, பங்குனி உத்திரம், போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன.

தலமரமாக இக்கோயிலில் புன்னைமரம் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. தற்சமயம் வில்வம் தலவிருட்சமாய் உள்ளது.

கோயிலின் வெளிப்பிராகாரத்தில் சுமார் 5 அடி உயரத்தில் ஒரு புற்று உள்ளது. ஆதிசேஷன் பூஜித்த இத்தலத்தில் இந்த புற்று இருப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது. இங்கு வந்து முறைப்படி வழிபட்டால் நாகதேஷம் விலகும்.

தற்பொழுது வளர்புரம் என்று இத்தலம் அழைக்கப்பட்டாலும் அப்பர் (திருநாவுக்கரசு ஸ்வாமிகள்) திருத்தாண்டகத்தில் வளைக்குளம் என்றே குறிக்கப்பட்டிருக்கிறது.
“வானவர் கோன் தோள் இறுத்த மைந்தன் தன்னை
வளைகுளமும் மறைக்காடும் மன்னினானை”
என்று ஒரு பாடலிலும்
மருப்பனைய வெண்மதியக் கண்ணியாரும்
வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும்” என்றும்
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல்
இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம்”
என்றும் நாவுக்கரசர், இத்தலத்தை தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
11ம் திருமுறை-க்ஷேத்திரத் திருவெண்பா-14வது பாடலில்
ஐயடிகள் காடவர்கோன் கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்.
இல்லும் பொருளும் இருந்த மனையளவே
சொல்லும் அயலார் துடிப்பளவே-நல்ல
கிளைகுளத்து நீர் அளவே கிற்றியே நெஞ்சே
வளை குளத்துள் ஈசனையே வாழ்த்து”
இந்தத் தலத்து விநாயகரைப்பற்றியுள்ள ஒரு பழம்பாடலில் கீழ்க்கண்டவாறு பாடப் பட்டுள்ளது.
“மாமேவு வேதாதி மான்பொருளெ லாந்திகழும்
ஓமே முகமா யொளிர்தலினால் – நீ மாண்பு
வாய் சுமுகப் பேர் கொண்டாய் வளைகுளத் தெந்
தாய் சுகமே நாயேர்க்குத் தா”

ஒரு காலத்தில் சங்கு வடிவில் அமைந்த திருக்குளம் தற்பொழுது சிதைந்து படிகள் அமைக்கப்பட்டு சங்கு வடிவம் மாறி சாதாரண குளமாய் உள்ளது. இங்கு ஒரு காலத்தில் திருக்கழுக்குன்றத்தில் வருவது போல் சங்கு வந்ததாம்.

வாரியார் ஸ்வாமிகள் வேலூர் மாவட்டத்தி லுள்ள காங்கேயநல்லூரில் பிறந்திருந்தாலும் அவர் சிறிய வயதில் வளர்ந்த பூமி இந்தத் திருத்தலமே. எட்டாம் வகுப்பு வரை இங்கு அவர் படித்ததாகச் சொல்லப்படுகின்றது. ஸ்ரீ கிருபானந்த வாரியார் தவழ்ந்த பூமி என்று பொறிக்கப்பட்ட ஒரு அலங்கார வளைவை திருக்கோயிலுக்குச் செல்லும் முன்பு நாம் காணலாம்.

ஆதிசேஷன் மேல் படுத்திருந்த திருமால், ஒரு முறை சற்று கனமாக ஆதிசேஷனுக்கு தெரிந்தது. இன்று ஏன் இவ்வளவு கனக்கிறது என்று திருமாலையே அவர் கேட்டார். அதற்குப் பெருமாள், நடராஜப் பெருமானின் திருநடனத்தைப் பற்றி சற்று சிந்தித்தேன். அதன் விளைவே இந்தக் கனம் என்று கூறினாராம். நானும் அந்தத் திருநடனத்தைக் காணவேண்டும் என்று ஆதிசேஷன் பெருமாளிடம் விண்ணப்பிக்க கயிலை சென்று தவம் செய்து பரமனிடமே அதைக் கேள் என்று பெருமாளும் கூறினார்.
ஆதிசேஷன் அதன்படியே கயிலை சென்று கடுந்தவம் புரிந்தார். ஆனால் சிவன் தன்னுருவில் வராமல் பிரம்மன் வடிவில் வந்து காட்சி தந்தார். சிவனின் அருளினால் ஆதிசேஷன், அத்ரி, அனுசூயா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். அதுவும் எப்படி? பாம்பாக.
பயத்தில் கையை உதறிய அனுசூயாவின் பாதங்களில் விழுந்தார் பாம்பாக வந்த ஆதிசேஷன். தாயின் பாதங்களில் அஞ்சலி செய்வது போல் விழுந்தததால் அவர் பெயர் ‘பதஞ்சலி’ என்று வழங்கலாயிற்று. நடனம் காணவேண்டும் என்று ஆசைப்பட்ட பதஞ்சலிக்கு (ஆதிசேஷ னுக்கு) ஒரு தை மாதமும், வியாழக்கிழமையும், பூசநட்சத்திரமும் கூடிய திருநாளில் சிதம் பரத்தில் வியாக்ர பாதருக்கும், பதஞ்சலிக்கும் அந்த நடனக் காட்சி கிடைத்தது. இதிலிருந்து ஆதிசேஷன் எவ்வளவு பெரிய சிவபக்தர் என்று தெரிகிறது. அவர் பூஜித்த இந்தத் திருக்கோயிலுக்கும் மஹிமைகள் பல இருக்கும் அல்லவா? ஆகவே வளர்புரம் சென்று வளமான வாழ்வு பெறுங்கள்!

ஒரு கோயிலில் ‘பதஞ்சலி’ என்று எழுதுவதற்குப் பதிலாக ’பதஞ்சொல்லி’ என்று தவறாக எழுதியிருந்தார்களாம். தவறாக எழுதியிருந்தாலும் அதற்கும் ஒரு சரியான விளக்கம் கொடுத்தாராம் பெரியவர். “பதஞ்சலிதான் வியாகரண மஹா பாஷ்யம் எழுதியவர். பதங்களின் லட்சணங்களையெல் லாம் அதில் எடுத்துச் சொல்லி இருக்கிறார். அதனால் அவர் பதஞ்சொல்லியும் கூடத்தான் என்றாராம் பெரியவர்.

அரக்கோணம்-திருத்தணி சாலையில் சென்று ‘தணிகைப்போளூர் என்ற இடத்தில் வலப்புறம் திரும்பி, ரயில்வே தண்ட வாளத்தைக் கடந்து நேரே ஊருக்குச் சொல்லா மல் தண்டவாளத்தை ஒட்டியே இடப்புறமாகச் செல்லும் சாலையில் 6 கி.மீ சென்றால் வளர் புரத்தை அடையலாம். அரக்கோணத்திலிருந்து பஸ்வசதியும், ஆட்டோ வசதியும் உண்டு.

அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரஸ்வாமி திருக்கோயில்
வளர்புரம் அஞ்சல் (வழி),
அரக்கோணம் – 631 003, வேலூர் மாவட்டம்

திருத்தணி, ஸ்ரீ முருகர் கோயில்
ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில்
மத்தூர் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி கோயில்
திருவாலங்காடு – ஸ்ரீ ரத்தினசபாபதி கோயில்
(தேவாரத்தலம்)
திருப்பாசூர் – ஸ்ரீ வாசீஸ்வரர் (தேவாரத்தலம்)
திருவள்ளூர் – ஸ்ரீ தீர்த்தேஸ்வரர்,
ஸ்ரீ வீரராகவப் பெருமாள்
ஈக்காடு – ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர்
திருமால்பூர்-ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் (தேவாரத்தலம்)
தக்கோலம் – ஸ்ரீ ஜலநாதேஸ்வரர் (தேவாரத்தலம்)
பள்ளூர் – ஸ்ரீ பரசுராமேஸ்வரர், ஸ்ரீ வாராஹி அம்மன்
நெமிலி – புன்னாகவரேஸ்வரர், ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி
மஹேந்திரவாடி – ஸ்ரீ சோமநாதேஸ்வரர்
கோவிந்தவாடி – ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அகரம்

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt